பேச்சு:பூந்துணர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பூந்துணர் என்பது பழஞ்சொல்லா அல்லது தற்காலத்தில் உருவாக்கப்பட்டதா? பெயர்க் காரணம் அறிய ஆவல். --சிவக்குமார் \பேச்சு 14:21, 29 பெப்ரவரி 2012 (UTC)

பழைய சொல்.--செல்வா 15:38, 29 பெப்ரவரி 2012 (UTC)

பெரிய புராணத்தில் (12-13 ஆம் நூற்றாண்டு)

பாடல் எண் :3006
கற்பக மீன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப்:
பொற்றிரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும்
நற்பதம் பொலிவு காட்ட; ஞாலமும் விசும்பு மெல்லாம்
அற்புத மெய்தத் தோன்றி யழகினுக் கணியாய் நின்றாள்.

(இங்கே, மேலும் சூளாமணியில் இருந்தும் ஒரு காட்டு உள்ளது

விலத்தைகைப் பூந்துணர் விரிந்த கோதையர்
நலத்தகைச் சிலம்படி நவில வூட்டிய
அலத்தகக் 2குழம்புதோய்ந் தரச வீதிகள்
புலத்திடைத் தாமரை பூத்த போலுமே. (பார்க்க)

--செல்வா 15:46, 29 பெப்ரவரி 2012 (UTC)

அகநானூற்றில் "மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர்" விக்கி மூலத்தில் பார்கக்லாம் ([1])

--செல்வா 15:49, 29 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி, செல்வா. (பூ+துணர் = பூந்துணர்?? இரண்டாம் பகுதியின் பொருள்/வேர் என்ன? அல்லது இது ஒற்றைச் சொல்லா?)--சிவக்குமார் \பேச்சு 19:22, 29 பெப்ரவரி 2012 (UTC)
கபிலர் எழுதிய இன்னா நாற்பதுவில் 'துணர் தூங்கு மாவின் படுபழ மின்னா'- அதாவது கொத்தாக தூங்குகின்ற மாவில் அழுகி விழுகின்ற பழம் துன்பமாகும். ஆகவே துணர் என்பது கொத்தாக எனப் பொருள் படும்.--சஞ்சீவி சிவகுமார் 23:32, 29 பெப்ரவரி 2012 (UTC)
சிவக்குமார். துணர் என்பது தனிச்சொல். இதற்கு 3 பொருள்கள் உண்டு, அதைக் கூறும் முன், துணரியது என்றால் குலைகொண்டது, துணர்தல் என்றால் குலைகொள்ளுதல் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். துணை என்னும் சொல் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. தமிழில் துணைத்தல் என்றாலே பிணைத்தல் (சேர்தல்), மாலை கட்டுதல், இரட்டித்தல், உதவி செய்தல் (இன்னொரு கைகொடுத்தல், பணியில் சேர்ந்துழைத்தல்) என்று பொருள். துணையல் என்றால் பூமாலை (ஏன் என்றால் சேர்த்துக் கட்டியது). இந்தத் துணை, துணைத்தல் என்பதோடு உறவு கொண்டதே துணர் = குலைகொள்(தல்) (சேர்ந்திருத்தல்). பூவிதழ்களோ, பூந்தாதோ சேர்ந்து இருத்தல் துணர். எனவே துணர் என்றால் (1) பூ (ஏனெனில் இதழ்கள் சேர்ந்திருத்தல், அடுக்கி இருத்தல்), (2) பூங்கொத்து, (3) பூந்தாது (பூந்துகள், மகரந்தம்). இன்னொரு பொருள் நீட்சி, அடுத்தடுத்து (அடுக்காய்) நகர்வதைக் குறிக்கும் விரைவையும் துணவு என்பர். ஒரு வலைப்பதிவில் அண்மையில் ஒருவர் எழுதியுள்ளார் இதே பொருளில். பொதுவாக துணவு என்பதை விரைவு என்னும் பொருளில் பயன்படுத்துவது அரிதுதான், ஆனால் துண்ணெனல் என்றால் விரைவுக்குறிப்பு என்பது ஓரளவுக்கு நன்கு அறிந்தது. இதே போல இணர் என்றாலும் அடுக்கு (பூவின் அடுக்கு). ஆங்கிலத்திலே catskin என்பது இந்த இணர். இணர் என்றாலும் "பூந்தாது, பூங்கொத்து, காய்க்குலை" என்று பொருள்கள் உண்டு. இணர்தல் = நெருங்குதல், பரத்தல். இணறு = பூ (ஏனெனில் இதழ்கள் சேர்ந்திருப்பது). நன்கு அறிந்த சொற்களாகிய இணை (துணை போலவே), இணங்கு (ஒப்புதல், ஒன்றுதல்). துணைத்தல் என்றாலும் ஒத்தல் (கழக அகராதி பார்க்கவும்). எனவே இணர், துணர் என்றால் பூங்கொத்து, பூந்தாது. பூந்துணர் என்பது தெள்ளத்தெளிவாக பூவின் இதழடுக்கு அல்லது பூந்தாதின் திரளைக் குறிக்கும். --செல்வா 01:06, 1 மார்ச் 2012 (UTC)
சஞ்சீவி சிவகுமார், நன்றி. விரிவான விளக்கத்தி்ற்கு நன்றி, செல்வா. ஒரு புது வேர்ச்சொல்லை அறிந்து கொண்டேன்−முன்நிற்கும் கருத்து Sivakumar (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
தாவரவியல் கலைச்சொல் விளக்கம் என்ற நூலிலும் துணர் தரப்பட்டுள்ளது. சான்றை இணைத்துள்ளேன். இது போலத் தமிழில் உள்ள துறைச்சிறப்புச் சொற்களை இங்கும் விக்சனரியிலும் சேர்க்க வேண்டும். தாவரவியல் அருஞ்சொல் விளக்கத்தொகுதி எனும் பட்டியலை வளர்த்தெடுக்க வேண்டும். தண்டு, பாளை, சுளை, தார், விழுது, காம்பு, கணு என செடிகளின் அனைத்து உற்றுப்புகளுக்குமே தமிழில் வழக்குச்சொல் உள்ளது. வேளாண் தொழிலில் வெகுவாகப் பயன்படும் இச்சொற்களை அறியாமல் வேற்றுமொழிச் சொற்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிடக் கூடாது. -- சுந்தர் \பேச்சு 16:29, 1 மார்ச் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பூந்துணர்&oldid=1040346" இலிருந்து மீள்விக்கப்பட்டது