பேச்சு:டென்மார்க்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

இக்கட்டுரையின் தலைப்பைத் தென்மார்க்கு என்றோ அல்லது குறைந்தது டென்மார்க்கு என்றோ மாற்றலாம் என்பது என்கருத்து. தற்கால மொழியியல் படித்த, நன்கு அறியப்பட்ட முனைவ்ர் சொ. பரமசிவம், தன் "நற்றமிழ் இலக்கணம்" (பட்டுப் பதிப்பகம், திசமபர் 2000) என்னும் நூலில் பக்கம் 122 இல் தென்மார்க்கு என்னும் சொல்லையே எடுத்துக் காட்டியுள்ளார். அவர் கூறுவதைக் கூறுகின்றேன்:

...மற்ற உயிர்மெய் எழுத்துக்களாகிய ட,ண,ர,ல,ழ,ள,ற,ன என்னும் 
எட்டெழுத்துகள் சொற்களின் முதலில் வரக்கூடா, 
அங்ஙனம் வந்தால் சொற்களுக்கேற்றபடி சொல்லின் முதலில்
வரும் எழுத்துக்களில் ஒன்றனைச் சேர்த்துச் சொற்களை அமைக்க வேண்டும்.
சான்று:
டமாரம்  - தமாரம்
டில்லி -   தில்லி
டென்மார்க்கு - தென்மார்க்கு
ரங்கநாதன் - அரங்கநாதன்
ரப்பர் - இரப்பர்
ரூபாய்- உரூபாய்
லட்சியம் - இலட்சியம்
லண்டன் - இலண்டன்
லங்கை - இலங்கை
ஹவாய் தீவு - அவாய்தீவு
ஸ்வீடன் - சுவீடன்

மேலே தெளிவாக தென்மார்க்கு என்று எழுத வேண்டும் என்று கூறியுள்ளார். "ட்" இட்டு எழுதிக்காட்டும்பொழுதும் டென்மார்க்கு என்று குற்றியலுகரத்தின் முடிவோடுதான் காட்டியுள்ளார். சரியான முறைகள் இடென்மார்க்கு அல்லது தென்மார்க்கு. குறைந்தது டென்மார்க்கு. டென்மார்க் என்று எழுதுவது தமிழ் முறைப்படி தவறு என்பதோடு (தமிழர்கள் நன்குணர்ந்ததன் அடிப்படையில்) அறிவடிப்படையிலும் தவறு. "க்" என்று முடிக்கவே இயலாது!. "டென்மார்க்" என்னும் வடிவுக்கு வழிமாற்று இருக்கலாம், ஆனால் தலைப்பு தென்மார்க்கு என்பது போல் சரியான ஒரு தலைப்பாக இருக்க வேண்டும். எல்லா மொழிகளிலும் exonym (புறப்பெயர்) என்னும் கருத்தும், மொழிக்கேற்ற முன்னொட்டு பின்னொட்டுகளும் இருக்கும். எனவே தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கின்றேன். --செல்வா 05:43, 24 பெப்ரவரி 2012 (UTC)

எனக்கும் வல்லின ஒற்றில் சொல் முடிவது உறுத்தலாகவே உள்ளது. குகரத்தை வழக்கமான குறிலாகப் பார்க்காமல் குற்றியலுகரமாக வருகிறது என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் ஒலிப்பு நெருக்கம் தெளிவாகத் தெரிகிறது. எந்த மொழிக்காரர்களானாலும் வல்லொலி ஒற்றில் நிறுத்துவதில்லை. மூச்சு விட்டுத்தானே ஆக வேண்டும்? :) அதனாலும் தமிழ் எழுத்துமுறைக்கேற்பவும் மேலேயுள்ள சான்றின்படியும் தென்மார்க்கு என்று மாற்றுவதை வழிமொழிகிறேன். -- சுந்தர் \பேச்சு 05:48, 24 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி சுந்தர். சற்று பொறுத்திருந்து, இன்னும் சிலர் கருத்தறிந்து மாற்றலாம். --செல்வா 05:58, 24 பெப்ரவரி 2012 (UTC)
தென்மார்க்கு என்பது தெற்கு மார்க்கு (southmark) என்றவாறு பொருள் தரலாம்.--Kanags \உரையாடுக 06:31, 24 பெப்ரவரி 2012 (UTC)

ஆம் இப்படியான சிறு குழப்பங்கள் இருக்கும். டென்பார்க்/க்கு என்றாலும் பத்து மார்க்/க்கு என்று பொருள்தரலாமே. அப்படியே Denமார்க்கு என்றாலும் ஏதோ Lion's den மார்க்கு என்று பொருள் தரலாம். தன்மார்க்கு, தேன்மார்க்கு, தெனிமார்க்கு என்று பிறவிதமாகவும் குறிக்கலாம். பல மொழிகளில் தனிமார்க்கு டேனிமார்க்கு என்பது போல் குறிப்பதால் நாம் இடேனிமார்க்கு என்றுகூடக் குறிக்கலாம். தென்மார்க்கு என்று குறிப்பதால் பெரும் குழப்பம் ஏதும் ஏற்படாது. வெவ்வேறு மொழிகளில் (உரோமன் எழுத்தில் உள்ளவற்றிலேயே கூட):

Dinamarca, Danimarca, Ndinamayka, Данія, Danska, Dánsko, Dineʼé Bikéyah, Taani,Danio, Danvarg, Kenemaka, डेनमार्क (இந்தியில் எகரக்குறில் இல்லை), Danmak (r இல்லை), Tenemāka, போர்த்துகீசு: Dinamarca, பின்லாந்தியம் Tanska, Danii, Danän, Taani...

எனவே ஒவ்வொரு மொழியாளரும் அவர்கள் மொழிக்கு ஏற்ப எழுதுகின்றார்கள். தென்மார்க்கு, தேன்மார்க்கு, இடென்மார்க்கு, இடேன்மார்க்கு, இடேனிய நாடு, தான்மார்க்கு, தன்மார்க்கு என்ற ஒவ்வோன்றும் ஒரு முறையில் அந்நாட்டுக்குப் பொருந்தும் சொல் (பல மொழிகளில் இருப்பதைவிட பெரிதும் மாறுபாடானதன்று) --செல்வா 07:10, 24 பெப்ரவரி 2012 (UTC)

ஏற்கனவே நூறாண்டு காலமாகப் பழகிப்போன டென்மார்க்கை ஏன் இப்போது மாற்ற வேண்டும் என எனக்குப் புரியவில்லை. இதுவரையிலும் தமிழறிஞர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லையா என்ன? இப்படிப் பார்க்கப்போனால் இங்குள்ள பல சொற்களை நாம் மாற்ற வேண்டி வருமே. ட வில் தொடங்கும் தலைப்புகளைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 07:33, 24 பெப்ரவரி 2012 (UTC)
சிறீதரன், டென்மார்க் எனப் பின்னால் ஒற்றில் முடியும்படி நூறாண்டு காலம் தமிழில் எழுதிய மரபு உள்ளதா? (ஈராயிரம் ஆண்டுகள் ஒற்றில் சொல்லை முடிக்காமல் எழுதிய மரபு உள்ளது வேறு சேதி.) தென்மார்க்கு என எழுதுவது அவ்வளவாக புழக்கத்தில் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கடைசியில் குற்றியலுகரத்தோடு தான் எழுதுவது வழக்கமென நினைக்கிறேன். செல்வா குறிப்பிட்ட நூலைத் தவிர பேரா.கார்த்திகேசு சிவத்தம்பியின் நூலிலும் மற்றொரு நூலிலும் தென்மார்க்கு என்று உள்ளதையும் கவனிக்கவும். நாம் அந்நாட்டின் பெயரை எதுவும் மாற்றவில்லை ஒலிபெயர்க்கும்போது நம் எழுத்துமுறையில் எழுதலாம் என்பது என் கருத்து. கலைக்களஞ்சியத்தில் இலக்கணம், நடை ஆகியவற்றிற்கு இவ்வாறு முதன்மை தரலாம் என்பது நேர்மையான எதிர்பார்ப்பும் கூட. -- சுந்தர் \பேச்சு 10:10, 24 பெப்ரவரி 2012 (UTC)
இயன்றவரை நல்ல தமிழ் என்பதில் நாம் அனைவரும் உடன்படுகிறோம். தமிழ் மொழி மீதான ஈடுபாடு, தமிழர் அறிவு நலன் குறித்த உந்துதல் காரணமாகவே பலரும் இங்குப் பங்களிக்கிறார்கள். வட மொழி, ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிச் சொற்கள் தவிர்ப்பு, கலைச்சொல்லாக்கம் ஆகியவற்றில் நாம் மற்ற தமிழ் ஊடகங்கள் / ஆக்கங்களைக் காட்டிலும் ஒரு படி மேலேயே உள்ளோம். எனவே, வேண்டும் என்றே யாரும் மொழி மரபுக்குப் புறம்பாகச் செயற்படப் போவதில்லை. ஆனால், பல்வேறு பக்கங்களில் நடந்து வரும் அண்மைய பல உரையாடல்களைக் கவனிக்கும் போது, தமிழ் இலக்கணம் / மரபு குறித்த சுட்டிக்காட்டல்கள் பல நெடுநாள் பங்களிப்பாளர்களுக்கும் கூட அயர்ச்சி அளிப்பதாக உணர்கிறேன். எனவே, இதனைக் குறிப்பிட்ட ஒரு சொல் பற்றிய உரையாடலாகவோ ஒலிபெயர்ப்புக் கையேடு குறித்த விசயமாகவோ அணுகாமல் "இயன்றவரை நல்ல தமிழ்" என்பதற்கான வரையறை என்ன, எங்கே பெரும்பான்மை / தற்காலப் போக்கை ஒத்துப் போகிறோம், எங்கே இலக்கண மரபைக் காக்கிறோம், எந்த அளவு எதை விட்டுக் கொடுக்கிறோம் என்ற அடிப்பைடயில் சிந்திக்க வேண்டும். இலக்கணத்தை முன்வைத்துச் செய்யும் மாற்றங்கள் காலப் போக்கில் பழகும் என்றாலும், உடனடி விளைவாக பங்களிப்பவர்களையும் பயனர்களையும் அன்னியப்படுத்துமா என்பதையும் சிந்திக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் மொழி மரபை முன்னிட்ட மாற்றங்களை வரவேற்கிறேன் என்றாலும் விக்கிப்பீடியா ஒரு கூட்டுமுயற்சித் திட்டம் என்பதால் பலரையும் அரவணைக்கும் போக்கும் வேண்டும் என்று நினைக்கிறேன்--இரவி 14:02, 24 பெப்ரவரி 2012 (UTC)
ஒப்புக் கொள்கிறேன், இரவி. ஓரிடத்தில் அனைவருக்கும் இணக்கமுள்ள வரையறையை வகுப்பதே சிறப்பாக இருக்கும். இங்கு ஒரு சான்றுக்காகவே பதிந்து வைத்தேன். -- சுந்தர் \பேச்சு 14:36, 24 பெப்ரவரி 2012 (UTC)

தென்மார்க்கு இராச்சியம் என்று இன்னொரு கட்டுரை த.வி-யிலேயே இருக்கின்றது!! இணைக்கவேண்டும்!--செல்வா 14:53, 24 பெப்ரவரி 2012 (UTC)

ஒன்றிணைப்பு Y ஆயிற்று--சண்முகம் (பேச்சு) 04:55, 27 மே 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டென்மார்க்&oldid=2198952" இலிருந்து மீள்விக்கப்பட்டது