பேச்சு:இயற்கை எரிவளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயற்கை எரிவளி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தலைப்பை இயற்கை எரிவளி என்று மாற்றலாமா? எரி என்னும் முன்னொட்டு கட்டாயம் தேவை என்று எண்ணுகிறேன். Natural gas என்பதற்கு நேரடியான மொழிபெயர்ப்பாக இயற்கை வளி/வளிமம் எனலாமென்றாலும் அது பொருத்தமானதல்ல. நிலத்தடி எரிவளி என்பதும் இன்னும் பொருத்தமாக இருக்கும். என்ன நினைக்கின்றீர்கள்?--செல்வா 02:30, 26 ஏப்ரல் 2008 (UTC)

செல்வா, நன்றி. நானும் இதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். இயற்கை எரிவளி என்பது நன்றாக இருக்கிறது. எரி என்னும் முன்னொட்டு கட்டாயம் தேவை தான். Fuel gas என்ற ஒன்றுண்டு - அதற்கு எரிவளி என்று சொல்லவேண்டும் என்று வேறுபடுத்திக் காட்டவேண்டுமோ என்று முதலில் எண்ணினேன். ஆனால், natural fuel gas/refinery fuel gas என்பதில் முன்னதில் fuelஉம் பின்னதில் refineryயும் தொக்கி நிற்கின்றன. இரண்டிற்கும் எரிவளி என்றே சொல்லி அதற்கு முன்னர் தேவையான சொல்லைப் போட்டுக் கொள்ளலாம். அதோடு high pressure fuel gas = உயரழுத்த எரிவளி என்பது போலவும் வைத்துக்கொள்ளலாம். நிலத்தடி என்பதை விட இயற்கை என்றே இருக்கட்டும் என்று நினைக்கிறேன்.

மாற்றுப் பெயர்[தொகு]

இயற்கை எரிவளி என்பதற்கு ஒரு மாற்றுச்சொல்லாக மண் வளி என்றும் கூறலாம். இப்படிக் கூறுவதால், எரி என்னும் முன்னொட்டு இல்லாமல் இருந்தாலும் சரியாக இருப்பது போல் தோன்றுகின்றது. இயற்கை வளி என்னும் பொழுது, வளி என்னும் சொல்லோடு இயற்கை என்னும் சொல் முன்வரும் பொழுது, வளிக்கு ஒரு விளக்கமாக இருப்பது போல் தோன்றியதாலும், எரிவளி என்று கூறுவது ஒரு தேவையாக உணர்ந்தேன். மண்வளி என்னும் பொழுது நிலத்தடி என்னும் குறிப்பும் பொருந்தி இருப்பது சிறப்பாகத் தோன்றுகின்றது.--செல்வா 15:34, 26 ஏப்ரல் 2008 (UTC)


Refinery[தொகு]

Refineryக்கு உங்கள் பரிந்துரை என்ன? 'விள்ளெடுப்பு ஆலை' உங்களுக்கு ஏற்புடையதா? --செல்வராஜ் 12:21, 26 ஏப்ரல் 2008 (UTC)

செல்வராஜ் (உங்களை செல்வராசு என்று நான் அழைக்கலாமா?), நிலத்தடி என்னும் சொல் தேவை இல்லை என்றால் விட்டு விடலாம். எப்படி இருந்தாலும் இயற்கை எரிவளியைப் பற்றிக் கூறும் பொழுது கட்டாயம் அச்சொல் வரும்தானே. ரி'வைனரி (refinery) என்பதற்கு பொதுவாக சுத்தரிப்பு +ஆலை என்று ஒரு சொல் உள்ளது. தமிழில் மேலும் 5 அருமையான சொற்கள் உள்ளன. அதன் அடிப்படையில் ஆலை என்னும் சொல்லை சேர்த்துக்கொள்ளலாம்.

  1. தூய்மைப்படுத்தல் எல்லோரும் அறிவது. (தூய்மைப்படுத்தாலை, தூயாலை?)
  2. கோதாட்டு -->கோதாட்டுதல் என்றும் ஒரு சொல் உண்டு. கோதாட்டுதல் என்றால் தூய்மை செய்தல், குற்றம் நீக்குதல். கோது என்றால் சக்கை, பயனற்றது, பயன்படாதது என்று பொருள். எனவே கோதாட்டு என்பது பயனற்றதை நீக்குதல், பயன் குறைப்பதை நீக்குதல். கோது என்பது புளியின் சக்கை, கரும்பின் சக்கை, பலாப்பழச் ச்க்கை போன்ற பலவற்றையும் குறிக்கும்.
  3. உவளித்தல் என்றால் பிரித்து எடுத்தல். எடுத்துக்காட்டாக, உப்பை உப்புநீரில் இருந்து பிரித்து எடுப்பது உவளித்தல்.
  4. சீ ---> சீத்தல் என்பது குற்றம் நீக்கித் தூய்மைப்படுத்தல். கலித்தொகையில்: இருள் சீக்கும் சுடரே போல் (கலித்தொகை), பாயிருள் சீக்கும் பனிமதி (குமரபரரின் சிதம்பர .செய்யுட்கோவை), சீக்கும் என்பது புலனாசைகள் நீங்கி உள்ளம் தூய்மை பெறுவதையும் குறிக்கும். சீத்தல் என்றால் நீங்குதல், விலகுதல் அழிதல் என்னும் பொருள் தரும்.
  5. ஓட்டுஎன்னும் சொல்லும் நீக்குதல், தூய்மை செய்தல் என்னும் சிறப்புப் பொருளில் பயன்படும் ஒரு எளிய சொல். . குறிப்பாக உருக்கி, தூய்மைசெய்து பிரித்தெடுப்பதற்கு ஓட்டுதல் என்று பெயர். ஓட்டற்ற செம்பொன் போல என்றால் இயற்கையிலேயே தூய்மை செறிந்த பொன் என்று பொருள். ஓட்டறுதல் என்றால் தூய்மை செய்யாமலே, இயற்கையாகவே தூய்மையாய் இருத்தல்.

எனவே இந்த 5 சொற்களிலே ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். எரிநெய் சீத்தல், எரிநெய் தூய்மைபடுத்தல், எரிநெய் கோதாட்டுதல், எரிநெய் உவளித்தல், எரிநெய் ஓட்டுதல் ஆகிய ஐந்துமே எனக்கு மிகச்சரியாக படுகின்றது. --செல்வா 13:50, 26 ஏப்ரல் 2008 (UTC)

செல்வா, நிச்சயமாக என்னைச் செல்வராசு என்று அழைக்கலாம். நானே இங்கு அப்படி மாற்றி வைத்துக்கொள்கிறேன். Refineryக்கு நீங்கள் கொடுத்த சொற்கள் அனைத்தும் பரவாயில்லை என்றாலும், தூய்மைப்படுத்தல் என்பதை விட இன்னும் கொஞ்சம் வேறுபட்ட பொருள் வரவேண்டும் என்று நினைக்கிறேன். என் அகரமுதலியிலும் தூய்மிப்பகம் தூய்மிப்பக ஆலை என்று கொடுத்திருக்கிறது. இராம.கி விள்ளெடுப்பு என்பதற்கு எப்படிப் பொருள் கூறினார் என்று நான் பார்க்கவில்லை. இருப்பினும், பல விள்ளல்களாகப் பிரித்து எடுப்பது என்னும் பொருளில் கூறியிருக்கலாம் என்று நானே ஊகித்துக்கொண்டேன். --செல்வராஜ் 03:46, 27 ஏப்ரல் 2008 (UTC)
விள்ளெடுப்பு என்பது பிரித்தெடுத்தல் அன்றி வேறில்லை. விள்ளல் = பிள்ளல் = பிரித்தல். ஆனால் சீத்தல், கோதாட்டுதல் போல பொருள் துல்லியம் பெற்றதல்ல. ஆகவே சீத்தல் கோதாட்டுதல் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். எந்த அகரமுதலியில் தூய்மிப்பகம் என்று கொடுத்துள்ளது? தூய்மி என்று ஒரு வினை உள்ளதா என்று அறியேன். இல்லை என்பதே நான் நினைப்பது. தமிழில் தூ என்னும் ஓரெழுத்து ஒருமொழியும் தூய்மை என்னும் பொருள் உடையது. சீத்தல் என்பதற்குக் கழக அகராதி தூய்தாக்கல் என்று தந்திருப்பதால் "தூய்தாதல்" என்னும் வினை வடிவம் உள்ளது போல் தெரிகின்றது. எனவே refinery என்பதற்கு தூயகம் (தூய் + அகம்) என்று கொள்ளலாம். அல்லது தூயாலை எனலாம். தூ என்றாலே தூய்மை. தூய்மை செய்யும் ஆலை. அழுக்கு, அல்லது வேண்டாதன நீக்கி தூய்மை செய்யும் ஆலை. எனவே தூய்மி என்னும் சொல் எழுமா என்னும் கேள்வி உள்ளது. அப்படி இருக்குமானால், தூய்மிப்பாலை, தூய்மிப்பகம் என்னும் சொற்கள் பொருந்தி வரும். --செல்வா 04:42, 27 ஏப்ரல் 2008 (UTC)
செல்வா, நான் பார்த்தது தஞ்சைப்பல்கலை.யின் அருங்கலைச்சொல் அகரமுதலி (பதிப்பாசிரியர்: ப.அருளி). 'refining = தூய்மையாக்கம், (மறுவ.) தூய்மித்தல்' என்று இருக்கிறது (மறுவ என்றால் மறுவடிவம்??). அதையொட்டி refinery gas=தூய்மிப்பக வளி, refinery=தூய்மிப்பகம், refined oil=தூய்மித்த எண்ணெய், refinement=தூய்மைப்படுத்தம், தூய்மைப்பாடு, போன்ற சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தூய்மிப்பகம்/ஆலை (அ) தூயகம்/ஆலை உங்கள் சார்பு என்ன? பிறவினைப் பொருள் தருவதாக இருப்பதால் முன்னதைப் பயன்படுத்த நினைக்கிறேன். சுத்தகரிப்பு ஆலை என்றும் கூட ஒரு வழக்கம் இருக்கிறதல்லவா? அதுவே எளிமையாய் இருக்குமோ என்னும் ஐயமும் எழுகிறது. --இரா. செல்வராசு 15:33, 27 ஏப்ரல் 2008 (UTC)
நன்றி செல்வராசு. உங்களிடம் தஞ்சைப் பல்கலை அகராதி இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. தூய்மி என்ன்னும் சொல்லில் எனக்கு இன்னும் உறுதிப்பாடு வரவில்லை. தூய் என்று ஒரு வினை இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஆய், தேய், காய், ஓய், வேய் முதலான பல சொற்கள், வேய்வு, தேய்வு, காய்வு, ஓய்வு முதலான பெயர்ச்சொல் வடிவமும், காய்வி, தேய்வி, ஓய்வி, ஆய்வி முதலான பிறவினை வடிவங்களும் கொள்ளும் போல் தெரிகின்றது. தூய் என்னும் வினைவடிவம் இருந்தால் தூய்வி, தூய்விப்பு தூய்விப்பகம், தூய்விப்பாலை என்று வரும். எனவே தஞ்சை பல்கலை அகராதியில் கொடுத்துள்ளது சரியா எனத் தெரியவில்லை. தூ என்னும் ஓரெழுத்து ஒரு மொழி, தூ என்னும் ஏவல் வினை என்று தெளிவாக கழகத் தமிழ் அகராதி தந்துள்ளது. ஆனால் அவ்வினையின் பொருள் தூவல் (தெளித்தல்) என்பது என்று நினைக்கிறேன். தூய்மை செய் என்னும் பொருளும் கட்டாயம் கொள்ளும் என்றே நினைக்கிறேன். ஏனெனில் தூகல் என்னும் சொல் துடைப்பத்தால் விளக்கல் என்று பொருள் கொடுத்துள்ளது. பிற தொடர்புடைய சொற்களாலும் தூ என்னும் ஓரெழுத்து ஒரு மொழி தூய்மை செய்யும் வினையைக் குறிக்கும் என்று உறுதியாகத் தெரிகின்றது. தூப்பு என்றால் தூய்மை என்று பொருள் ஆனால் தூய்ப்பு என்னும் சொல்வடிவம் இல்லை. எனவே தூய்வி, தூய்விப்பு என்று சொற்கள் ஆக்கலாம், தூய்மி என்பது பற்றி உறுதியாகச் சொல்ல இயலாது. எனவே தூயகம், தூயாலை என்பது பொருந்தும். தூய்விப்பகம் தூய்விப்பாலை என்பது புதிதாக ஆக்கிக்கொள்ளலாம். என் பரிந்துரை தூய்விப்பாலை, தூய்விப்பகம், தூயாலை, தூயகம் என்னும் நான்கு சொற்களுள் ஒன்று. இவை தவிர சீக்காலை, உவளிப்பாலை, ஓட்டகம், கோதாட்டகம் முதலானவையும் எனக்கு ஏற்பே. --செல்வா 13:41, 28 ஏப்ரல் 2008 (UTC)
நன்றி செல்வா. தூய்விப்பகம் முதலான நான்கு சொற்களுள் ஒன்றை வைத்துக் கொள்வோம். பிறகு மாற்ற வேண்டியிருப்பினும் சரியே. சீக்காலை முதலிய பிற சொற்களைப் பற்றிய குறிப்புக்கும் நன்றி. அவையும் பொருத்தமாக இருக்கலாம், ஆனால் அவை பொது வழக்கில் இல்லை என்பதாலும் சற்றுத் தயங்குகிறேன். --இரா. செல்வராசு 03:02, 29 ஏப்ரல் 2008 (UTC)
சரி, அப்பொழுது தூய்விப்பகம் முதலானவற்றுள் உங்களுக்குப் பிடித்த ஒன்றை தேர்ந்து எடுத்தாளுவோம். வேறு எங்காவது பயனாகுமே என்று பிற சொற்களையும் குறித்து வைத்தேன். பொதுவாக ஆங்கிலத்திலே குரோமோசோம், சைட்டோபிளாசம் என்றெல்லாம், அவர்கள் தங்கள் தேவைக்கு எடுத்தாள்வது போல, நாமும் ஒரு காலத்தில், பொருள் பொதிந்த அடிச்சொற்களைக் கொண்டு துணிந்து எடுத்துச் சொல்லாக்கி விளக்கம் கொடுத்து சொற்களம் பெருக்க வேண்டும். --செல்வா 03:23, 29 ஏப்ரல் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இயற்கை_எரிவளி&oldid=3421386" இலிருந்து மீள்விக்கப்பட்டது