பேச்சு:அணுக்கருனி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"அணுத்துகள்" என்ற எளிமையான சொல் இங்கு பொருத்தமாயிருக்குமா?--Kanags 12:17, 10 ஏப்ரல் 2007 (UTC)

கனகு, அணுத்துகள் என்பது subatomic particle என்பதற்குப் பொருந்தும் பொதுவான சொல். அணுக்கருனி என்பது அணுக்கருவினுள்ளே இருக்கும் துகள்களுக்கு மட்டுமே பொருந்தும். எதிர்மின்னியும் ஓர் அணுத்துகள்தான், நேர்மின்னியும் ஓர் அணுத்துகள்தான், ஆனால் நேர்மின்னி ஓர் அணுக்கருனி; எதிர்மின்னி அணுக்கருனி அல்ல. அணுக்கருனி என்பது nucleon. --செல்வா 12:49, 10 ஏப்ரல் 2007 (UTC)

செல்வா, மன்னிக்க வேண்டும். அணுக்கருத் துகள் என்பதை நினைத்துக்கொண்டு அணுத்துகள் என்று எழுதிவிட்டேன். மீண்டும் பரிசீலிக்கவும்.--Kanags 21:09, 10 ஏப்ரல் 2007 (UTC)

கனகு, அணுக்கருத் துகள் என்பது சரியாக இருக்கும், ஆனால் அது சற்று நீளமாகவும், சற்று குழப்பம் தருவதாகவும் உள்ளது. அணுக்கருனி என்பது சுருக்கமாகவும் சற்று வேறுபடுத்தியும் (துகள் என்பதில் இருந்து) காட்டுவதுமட்டுமல்லாமல், nucleon என்பதை ஒத்தும் இருக்கின்றது. பழைய சொற்களை ஒட்டிய புது சொற்கள் ஆள்வது கருத்தை வளர்க்கும். (கரு என்பது அறிந்த சொல், கருனி என்பது சட்டென்று உள்வாங்கிக்கொள்ளத் தக்க சொல் -> அணுக்கருனி). இதில் உங்களுக்கு என்ன தயக்கம் உள்ளதென்று எனக்கு விளங்கவில்லை. விளக்க முடியுமா? --செல்வா 04:49, 11 ஏப்ரல் 2007 (UTC)

சுருக்கமாக இருத்தல், கரு என்ற சொல் சார்ந்து இருத்தல் போன்றவற்றில் செல்வாவுடன் உடன்படுகிறேன். கருனி என்றே சொல்லலாம்--ரவி 10:46, 11 ஏப்ரல் 2007 (UTC)

எனக்கும் இதில் ஆட்சேபனை இல்லை. புதிய சொல்லுக்கு என்ன அவசியம் என்றே கேட்டிருந்தேன். எனினும் செல்வாவின் விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன்.--Kanags 11:04, 11 ஏப்ரல் 2007 (UTC)

செயப்பாட்டு வினை[தொகு]

பயனர்:Perichandra1 பின்வரும் மாற்றங்களைச் (தடித்த எழுத்துக்களில் தரப்பட்டுள்ளன) செய்திருந்தார்: பாரியான் என்பது கிரேக்கச் சொல்லாகிய barys = heavy (கனமானது, எடை, திணிவு, பளு, பாரம் மிக்கது) என்பதில் இருந்து 1953 ஆம் ஆண்டளவில் ஆக்கிய சொல். இந்த பாரியான்கள் மூன்று குவார்க் என்னும் அடிப்படை நுட்டுகளால் (நுண் துகளால்) ஆனவை. அணுக்கருனிகளாகிய நேர்மின்னியும் நொதுமியும் பரவலாக அறிந்த பாரியான்கள் ஆகும். இந்த மாற்றங்கள் சரியானவை தானா என்பதை அறிய ஆவல்.--Kanags 22:27, 5 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

சரியாவைதாம். செய்யப்பட்ட, அறியபட்ட என்னும் சொல்லாட்சிகள் சற்று செயற்கையானவை. முதலில் உள்ள ஆக்கிய என்னும் சொல்லாட்சி சரிதான் எனினும், இரண்டாவது மாற்றமாகிய அறிந்த என்னும் சொல்லாட்சி சிறு குழப்பம் ஏற்படுத்த வாய்ப்புண்டு. நேர்மின்னியும், நொதுமியும் தாம் (அந்த துகள்கள்) அறிந்த பாரியான்கள் என்று பொருள் கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் அது தவறானது. ஏனெனில் துகள்கள் அறியாது, அவையேதான் பாரியாங்கள். மக்கள் அறிந்த என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். குழப்பம் என்று நினைத்தால், அறிந்த பாரியான்கள் வகை ஆகும் என மாற்றலாம். இது தேவை இல்லை என்பது என் நினைப்பு. சந்திரா (பெரியண்ணன் சந்திரசேகரர்) சிறந்த தமிழறிஞர், எனவே அவர் கூறுவதை நான் ஏற்பதில் பெரும்பாலும் தயங்க மாட்டேன் (எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் :) ) --செல்வா 22:52, 5 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

செல்வா :-). கனகு அவர்களே அங்கே அறிந்த என்பது செல்வா கூறியதுபோல் குழம்பாது. ஒன்று அவை அறிவுள்ளவை அல்லவென்பது. மற்றொன்று இயல்பான பேச்சில் (இதில் இயல்பான பழங்கவிதையும் அடக்கம்) இப்படித்தாம் நாம் பேசுகிறோம். "இது பரவலாகத் தெரிந்த உண்மை" என்றுதானே பேசுகிறோம். "கேட்ட கேள்விக்கு விடைகூறு" என்றால் கேள்வி என்னும் ஒருபொருள் அங்கே கேட்டதா? அதனைப் பார்த்து விடைகூறுவதா?! குடிநீர் என்றால் "குடிக்கின்ற நீரா?" இல்லை "குடிக்கப்படுகின்ற" நீரா? செய்ந்நன்றி என்பது "செயல்செய்த" நன்றியா? இல்லை "செய்யப்பட்ட" நன்றியா?! எல்லாவற்றிலுமே செயப்பாட்டுவினை பொதிந்திருப்பதைக்காணலாம். ஆனால் செயப்பாட்டுவினைஅமைப்பு அங்கே இல்லை. இருந்தால் "குடிக்கப்படுநீர்", "செயப்படுநன்றி" என்றுக இருக்கும்!

நீங்கள் கடைசியாகப் பேசும்பொழுது செயப்பாட்டுவினை புழங்கினீர்கள்? "இதிலே சொல்லியிருக்கிற வேலையைச் செய்" என்றல்லாமல் "இதிலே சொல்லப்பட்டுள்ள வேலையைச் செய்" என்கிறோமா? அதுபோலவெ "(தடித்த எழுத்துக்களில் தரப்பட்டுள்ளன)" என்று சொல்லத்தேவையில்லை" "தடித்த எழுத்துகளில் தந்துள்ள" என்றாலே போதும். செயப்பாட்டுவினை தமிழ்மொழிக்குக் கெடுதல்செய்யுமென்று அஞ்சவேண்டும்: மொழியின் சுருக்கமான இயல்பைத் திரித்து வழங்கும் நடை மொழியின் பயனைக் குறைக்கவழிவகுக்கும். எனவே தவிர்ப்போமாக. --பயனர்: Perichandra1

நன்றி சந்திரா! துகள்கள் அறியாது என்று கூறியுள்ளேன். குழப்பம் இல்லை, ஆனால் கனகு அவர்களின் கேள்விக்குக் கரணியமாக அப்படி ஏதும் பொருள் இருந்திருக்குமோ என்று எண்ணி எழுதினேன்.--செல்வா 04:20, 6 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

விரிவான விளக்கம் தந்த சந்திரசேகரர் ஐயா அவர்களுக்கு நன்றி. செயப்பாட்டுவினை தமிழ்மொழிக்குக் கெடுதல்செய்யுமென்று அஞ்சவேண்டும். இனித் தமிழ்மொழியை முடிந்தவரையில் திருத்தமாக எழுதுவோம். மிக்க நன்றி.--Kanags 06:41, 6 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அணுக்கருனி&oldid=228925" இலிருந்து மீள்விக்கப்பட்டது