பேச்சிப்பாறை அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேச்சிப்பாறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பேச்சிப்பாறை அணை
பேச்சிப்பாறை
பேச்சிப்பாறை அணை is located in தமிழ் நாடு
பேச்சிப்பாறை அணை
Location of பேச்சிப்பாறை அணை in தமிழ் நாடு
அதிகாரபூர்வ பெயர்பேச்சிப்பாறை அணை
அமைவிடம்பேச்சிப்பாறை,கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
கட்டத் தொடங்கியது1897
திறந்தது1906
கட்ட ஆன செலவு26.1 லட்சம்
அணையும் வழிகாலும்
வகைநீர்தேக்கம்
உயரம்48 அடி

பேச்சிப்பாறை அணை (Pechiparai Reservoir) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரிய அணையாகும். இது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பேச்சிப்பாறை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இது மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலிலிருந்து 43 கிலோமீட்டர் (27 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணை கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1897-1906 காலகட்டத்தில் ஐரோப்பியப் பொறியாளர் மிஞ்சின் என்பவரால் அப்போதைய திருவிதாங்கூர் மகாராசா மூலம் திருநாள் காலத்தில் கட்டப்பட்டது. இதன் அப்போதைய கட்டுமானத்திற்காக செலவளிக்கப்பட்ட தொகை 26.1 லட்சம். இவ்வணை கன்னியாகுமரி மாவட்டத்தின் விவசாய மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்கின்றது. இவ்வணை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாக இருந்தது. பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டிமுடிக்கப்பட்டது. இது காமராஜர் ஆட்சிக் காலத்தில் நடந்தது. கல்குளம், அகத்தீசுவரம், தோவாளை மற்றும் ராதாபுரம் ஆகிய வட்டங்கள் இதன் மூலம் பலன் பெறுகின்றன. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் இதனால் பாசன வசதிப் பெறுகின்றது. அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்ட பிறகு 3.75 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக நிரப்பப்படுகிறது.

ராதாபுரம் தாலுகாவில் நிரந்தர ஆற்றுப்பாசனமோ, கால்வாய் பாசனமோ கிடையாது. கிணறுகள் நிரம்பினால் மட்டுமே இத்தாலுகாவில் விவசாய பணிகளை தடையின்றி தொடர முடியும் என்ற நிலைமை தான் தற்போது வரை நீடித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் காமராஜர் ஆட்சி காலத்தில் ராதாபுரம் தாலுகா விவசாயிகள் பயன்பெறும் வகையில் ராதாபுரம் சிற்றாறு பட்டணங்கால்வாய் அமைக்கப்பட்டது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய இம்மூன்று அணைக்கட்டுகளின் மொத்தக் கொள்ளளவு 4300 மில்லியன் கனஅடியாகும். இந்த அணைக்கட்டுகளில் 1300 மில்லியன் கனஅடிக்கு மேல் (அணைகளில் 33 சதவீதம் நீர் இருக்குமானால்) தண்ணீர் இருக்குமேயானால், அதிகப்படியான தண்ணீரை ராதாபுரம் சிற்றாறு பட்டணங்கால்வாயில் திறந்துவிட வேண்டும். இதை 16-12-70ஆம் தேதியிட்ட அரசு ஆணை எண் 2584 கூறுகிறது.

இதன் மூலமாக நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் தாலுகாவில் சுமார் 15 ஆயிரத்து 597 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பயன்பெறும். 52 குளங்கள் மூலமாக மறைமுகமாக 1013 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது, 52 குளங்களுக்கும் தேவையான தண்ணீரை ஒரு டிஎம்சி தண்ணீர் மூலம் நிரப்பி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி ராதாபுரம் தாலுகா பகுதியில் கொஞ்சம் உள்ளது.

இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி 207.19 சதுர கிலோமீட்டர்கள், ஆழம் 14.6 மீட்டர்கள் (48 அடி). அணையின் நீளம் 425.5 மீட்டர்கள், உயரம் 120.7 மீட்டர்கள். இங்கு பேச்சியம்மன் எனும் சிறு கோயில் ஒன்று கட்டப்பட்டு தெய்வ வழிபாடு நடைபெற்று வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சிப்பாறை_அணை&oldid=3800755" இலிருந்து மீள்விக்கப்பட்டது