பெருங்காஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருங்காஞ்சி என்பது புறநானூற்றுப் பாடல்களுக்குத் திணை-துறை வகுத்தோர் குறிப்பிட்டுக் காட்டிய துறைகளில் ஒன்று.

பாடலகள்[தொகு]

புறநானூற்றில் வரும் 194, 357, 359, 360, 362, 363, 364, 365, 366 எண் கொண்ட ஒன்பது பாடல்கள் பெருங்காஞ்சி என்னும் துறையைச் சேர்ந்தவை .

தொல்காப்பியர்[தொகு]

தொல்காப்பியர் இதனைத் தனியாகக் குறிப்பிடவில்லை. 'காஞ்சி தானே பெருந்திணைப் புறனே' என்று குறிப்பிட்டுவிட்டுக், காஞ்சித் திணைக்கு விளக்கம் தருகையில் காஞ்சித் திணை என்பது நிலையில்லாத உலகைப்பற்றிப் பேசுவது என்கிறார். (தொல்காப்பியம் 1024)

புறப்பொருள் வெண்பா மாலை[தொகு]

ஐயனாரிதனார் தாம் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலில் காஞ்சித்திணைக்கு என்று ஒரு படலம் அமைத்துள்ளார். அதில் வரும் துறைகள் என்று 22 குறிப்பிடுகிறார். அவற்றுள் ஒன்று 'பெருங்காஞ்சி'.

மறவர் தம் தம் ஆற்றலைப் போர்ப்படைக்கு நடுவில் வெளிப்படுத்துவது பெருங்காஞ்சி என்று இந்நூல் தெரிவிக்கிறது. [1] இதனை விளக்கும் வெண்பா மறவனின் ஆற்றலைக் கண்டு யானைப்படை கதிர் அறுத்த தினைத்தட்டை போல் நின்றன என்று குறிப்பிடுகிறது.

தொல்காப்பியக் கருத்தைத் தழுவிப் பொதுவியல் என்னும் என்னும் பகுதியில் காஞ்சிப் பொதுவியல் பால் என்னும் விதியை வகுத்துக்கொண்டு ஆறு துறைகளைப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. இவற்றில் ஒன்றாக வரும் பெருங்காஞ்சி என்னும் துறையானது நில உலகில் நிலையாமையைக் கூறுவது என விளக்கம் கூறுகிறது. [2]

காஞ்சித் திணையில் வரும் பெருங்காஞ்சித் துறையில் அரசன் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். பொதுவியலில் வரும் இதே பெயர் கொண்ட துறையில் யாருடைய பெயரும் குறிப்பிடப்பட்டிருக்காது.

அடிப்படை[தொகு]

தொல்காப்பியர் இந்தத் துறையைப் பெயரிட்டுக் காட்டவில்லை. புறநானூற்றைத் தொகுத்தவர் இந்தத் துறையைப் பெயரிட்டுக் காட்டியுள்ளார். இதனைப் பின்பற்றி ஐயனாரிதனார் துறைப்பெயர் காட்டியுள்ளார். பன்னிரு படலம் என்னும் நூல் மறைந்துபோன தமிழ் நூல்களில் ஒன்று. இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு புறநானூற்றைத் தொகுத்தவர் இந்த ஒன்பது பாடல்களுக்குப் பெருங்காஞ்சி என்னும் பெயரைச் சூட்டினார் எனத் தெரியவருகிறது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. தாங்கு திறன் மறவர் தத்தம் ஆற்றல்,
    வீங்கு பெரும் படையின் வெளிப்படுத்தன்று.நூற்பா 66
  2. மலை ஓங்கிய மா நிலத்து
    நிலையாமை நெறி உரைத்தன்று. (நூற்பா 270)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்காஞ்சி&oldid=3317142" இலிருந்து மீள்விக்கப்பட்டது