புவி வெப்பநிலை அதிகரிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புவிப்பரப்பின் சராசரி வெப்பநிலையில் கடந்த 150 ஆண்டுகளில்  ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்
புவிப்பரப்பின் சராசரி வெப்பநிலையில் கடந்த 150 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்

புவி வெப்பநிலை அதிகரிப்பு (Global warming) என்பது காலப்போக்கில் புவியின் வளிமண்டலம் மற்றும் கடல்களின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும் நிகழ்வைக் குறிக்கும் சொல்லாகும்.

பெரும்பாலும் மனிதர்களின் செயற்பாடுகளினால் கடந்த 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தற்போது வரை புவியின் சராசரி வெப்பநிலை 0.6 ± 0.2 செல்சியஸ் அளவு வரை கூடுதலாகியிருக்கிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

பொருளடக்கம்

[தொகு] பைங்குடில் விளைவு (Green House Effect)

முதன்மைக் கட்டுரை: பைங்குடில் விளைவு

குளிர் நிலப்பகுதிகளில் பயிர்த்தொழில் செய்யப் பயன்படும் ஒரு கூடாரம் அல்லது கொட்டகை போன்ற அமைப்பே பைங்குடில் ஆகும். இதன் கூரையானது கண்ணாடி போன்ற சூரிய ஒளியை ஊடுறுவச்செய்யும் பொருளால் செய்யப்பட்டிருக்கும். இந்த கூரையின் மற்றொரு பயன்பாடு, இதன் வழி புகும் சூரிய ஒளிக்கற்றையையும் அதனால் ஏற்படும் வெப்பத்தையும் வெளியே விடாமல் தடுப்பது. இதனால் வெளியில் வெகுவாகக் குளிராக இருந்தாலும், குடிலினுள் விவசாயத்திற்கு ஏற்ற ஒளிநிலையையும் வெப்பநிலையையும் பராமரிக்கலாம். இதுபோன்று சூரிய சக்தியை தடுத்து வெப்பநிலையை அதிகரிப்பதை பைங்குடில் விளைவு என்பர். உண்மையில் இது வெப்பம் சிக்குறும் ஓர் விளைவு.

[தொகு] வளி மண்டலம்

ஏறத்தாழ 12500 கிமீ விட்டமுள்ள புவியைச் சுற்றி மென்மையாக படர்ந்திருக்கும் வளிமண்டலத்தின் தடிமன் வெறும் 100 கிமீ (அதிலும் மூச்சுக்குத் (சுவாசிக்கத்) தகுந்த வளிமண்டலத்தின் தடிமன் வெறும் 7-8 கிமீ மட்டுமே). இந்த வளிமண்டலத்தில் பெரும்பான்மையாக இருப்பது நைட்ரஜன் (78%), ஆக்சிஜன் (20%), நீராவி (0 to 3%), கார்பன்-டை-ஆக்ஸைடு (0.038%) மற்றும் இதர வளிமங்கள். இவற்றில் அகச்சிவப்புக் கதிர்களை உள்வாங்கி தன்வெப்பநிலையை அதிகரிக்கும் தன்மை கொண்ட வாயுக்கள் பைங்குடில் வாயுக்கள் (Greenhouse Gas) எனப்படும். கரியமிலம் (அல்லது கார்பன் டை ஆக்சைடு அல்லது CO2), மீத்தேன், ஈத்தேன், நீராவி போன்றவற்றிற்கு இத்தன்மை உண்டு. இந்த வாயுக்கள் இவற்றின் பைங்குடில் விளைவை ஏற்படுத்தும் தன்மையால் புவியின் வெப்பநிலையை தீர்மானிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் முக்கியமானது கரியமிலம். காரணம் வளிமண்டலத்தில் இதன் பங்கு அதிகம்.

[தொகு] பைங்குடில் விளைவும் தட்பவெப்பநிலை மாற்றமும் (Climate Change)

புவியின் வெப்பநிலைக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடுக்கும் உள்ள தொடர்பு பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமானது பனிப்பாறைகள் மீதான ஆராய்ச்சி. பல இலட்சம் ஆண்டுகள் முன்னிலிருந்து இன்று வரை வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவையும், அதே சமயத்தில் சராசரி வெப்பநிலையையும் தீர்மானிக்க ஆராய்ச்சியாளர்கள் பனிக்கட்டி படிவுகளை பயன்படுத்துகிறார்கள். அண்டார்டிகா, ஆர்டிகா, கிரீன்லாந்து போன்ற இடங்களில் உள்ள பனிப்பாளங்கள் பல இலட்சம் ஆண்டுகளாக உருவாகி வருகின்றன. இப்பாளங்களின் ஓவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு காலகட்டத்தை சார்ந்ததாக இருக்கும். இப்பனி அடுக்குகள் அந்த சமயத்தில் நிலவி வந்த காற்றுக் குமிழ்களையும் உள்ளடக்கியிருக்கும். இக்காற்றுக் குமிழ்களை ஆராய்வதன் மூலம் அக்கால கட்டத்தில் வளிமண்டலத்தில் எவ்வளவு கார்பன்-டை-ஆக்ஸைடு இருந்தது என்பதை அறியலாம். அதேபோல ஹைட்ரஜன் / ஆக்சிஜன் ஓரிடத்தான் (isotope) களை தீர்மானித்து அதன் மூலம் அக்காலகட்டத்தின் சராசரி வெப்பநிலையையும் தீர்மானிக்கலாம்.

சமீப காலங்களில் வளியில் கார்பன்-டை-ஆக்ஸைடின்(CO2) அளவு அதிகரித்திருப்பதை காட்டும் படம். மாதாந்திர CO2 அளவீடுகள் சிறிய அளவிலான ஏற்ற இறக்கத்தினை தெரிவிக்கின்றன. CO2 அளவு வடதுருவத்தின் கோடை / இளவேனிற்காலத்தில் குறையத் தொடங்குவதைக் இருப்பதைக் காணலாம். இக்காலத்தில் வளரும் தாவரங்கள்(புவியின் வடபாதியில்தான் அதிக நிலப்பரப்பும்/காடுகளும் உள்ளன) வளியில் உள்ள CO2 அளவைக் குறைக்கின்றன.
சமீப காலங்களில் வளியில் கார்பன்-டை-ஆக்ஸைடின்(CO2) அளவு அதிகரித்திருப்பதை காட்டும் படம். மாதாந்திர CO2 அளவீடுகள் சிறிய அளவிலான ஏற்ற இறக்கத்தினை தெரிவிக்கின்றன. CO2 அளவு வடதுருவத்தின் கோடை / இளவேனிற்காலத்தில் குறையத் தொடங்குவதைக் இருப்பதைக் காணலாம். இக்காலத்தில் வளரும் தாவரங்கள்(புவியின் வடபாதியில்தான் அதிக நிலப்பரப்பும்/காடுகளும் உள்ளன) வளியில் உள்ள CO2 அளவைக் குறைக்கின்றன.

எப்பொழுதெல்லாம் வளியில் கார்பன்-டை-ஆக்ஸைடின் பங்கு மிக குறைந்திருக்கிறதோ அப்பொழுதெல்லாம் பனியூழி ( Ice Age) எனப்படும் மிகக் குளிரான வெப்பநிலையே நிலவியிருந்திருக்கின்றது. பொதுவாக இயற்கையின் மறு சுழற்சி காரணமாக வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடின் பங்கு ஓரளவிற்கு சீராக இருக்கும் (சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையிலாவது). அதாவது, மனிதர்கள் மற்றும் விலங்குகள் கார்பன்-டை-ஆக்ஸைடை மூச்சுவிடும்பொழுது வெளியிடுகின்றனர். மரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன. இது போல பல முறைகளால் கார்பன்-டை-ஆக்ஸைடு உட்கொள்ளப்படுகிறது. இதனால் ஒரு சமநிலை நிலவுகிறது

பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவிவந்த இந்த பைங்குடில் வாயுக்களின், முக்கியமாக கார்பன்-டை-ஆக்ஸைடின், சீர்நிலை கடந்த 150 ஆண்டுகளாக வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. நிலக்கரியையும், பெட்ரோலிய எண்ணெய்களையும் இயந்திரங்களின் எரிபொருளாக ஏறக்குறைய 150 ஆண்டுகளாக மனிதர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இவை எரியும்போது அதிகம் வெளிவருவது கார்பன்-டை-ஆக்ஸைடும் நீராவியும். ஒரு கிலோ (1.3 லீட்டர்) பெட்ரோலை எரிக்கும் பொழுது ஏறக்குறைய 3.17 கிலோ கார்பன்-டை-ஆக்ஸைடு வளிமம் வெளிவருகிறது. இந்த கரிம எரிபொருள்களின் பயன்பாடும் அதன் விளைவாக வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவும் அண்மைக் காலத்தில் வெகுவாகக் கூடியிருக்கின்றன. இயந்திரமயமாக்கலுக்கு முன் சுமார் 270ppm ஆக இருந்த கார்பன்-டை-ஆக்ஸைடின் பங்கு 1960 இல் 313ppm ஆகவும் 2005 இல் 375ppm ஆகவும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாகவே புவியின் சராசரி வெப்பநிலையும் அதிகரித்திருப்பதாக (0.74 ± 0.18 °C ) பெரும்பான்மையான அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். கார்பன்-டை-ஆக்ஸைடின் பங்கு இதேபோல தொடர்ந்து அதிகரித்தால் இன்னும் வரும் நூறு ஆண்டுகளில் புவியின் சராசரி வெப்பநிலை ஏறக்குறைய 1.1 லிருந்து 6.4 °C வரை கூடலாம் எனக் கருதுகிறார்கள்.[1][2]

[தொகு] புவி சூடாதலின் விளைவுகள்

  1. புவிமுனைப் பனிப்பாறைகள் உருகுதல்
  2. கடல் மட்டம் அதிகரித்தல் அதனால் பெரும்பான்மையான மக்கள் வாழ்விடங்களை இழத்தல்
  3. அரிதான தாவர/விலங்கினங்கள் அழிதல்
  4. பருவ மழையில் பாதிப்பு
  5. வேளான்மையில் பாதிப்பு அதனால் உணவுத் தட்டுப்பாடு

[தொகு] உலக அளவில்

பனிப்பாறை உருகுதல், வேளான்மையையும், அதன் விளைவாக உணவு பாதுகாப்பையும் பாதிக்கும். 2020ம் ஆண்டுவாக்கில் ஆப்பிரிக்க கண்டத்தின் வேளான்மை உற்பத்தி 50% குறையலாம்.[3]

[தொகு] இந்தியாவில்

மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட இந்தியநாடு கடல் மட்டம் உயர்வால் அதிகமாகப் பாதிப்படையலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள். கங்கை, பிரம்மபுத்திரா கடலில் கலக்கும் பகுதிகளில் கடல் மட்டம் உயர்வு மற்றும் கடல் அரிப்பு ஏற்கனவே அவதானிக்கப்பட்டிருக்கிறது. பனிமலைகள் வேகமாக உருகுவதால், கங்கை போன்ற பனிமலைகளை மூலமாகக் கொண்ட வட இந்திய நதிகள் வற்றிவிடும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

  • இந்திய தொலையுணர் செய்மதிகளின் மூலம் பெறப்பட்ட தகவல்களை 1962ம் ஆண்டினதுடன் ஒப்பிடும் பொழுது இமயமலைத்தொடரின் பனிப்பாறைகளின் அளவு 3391 சதுர கிமீயிலிருந்து 2721 சதுர கிமீயாக குறைந்துள்ளதாக இஸ்ரோ ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், 1970ல் 4900 மீ உயரத்தில் இருந்த பனிக்கோடு(Snow Line -பனிமலைகளில் எந்த இடத்திற்கு மேல் ஒராண்டில் விழும் பனியின் அளவு கரையும் பனியினதை அதிகமாக இருக்கிறதோ அந்த எல்லைக் கோடு) 2006ல் 5300மீட்டருக்கு உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கிறார்கள். [4]

[தொகு] தமிழகத்தில்

காவிரி டெல்டா பகுதிகள் கடல்மட்டத்திலிருந்து மிகக்குறைந்த அளவே உயரத்திலுள்ளன. கடல்மட்டம் அதிகரிப்பால் இப்பகுதிகள் பாதிக்கப்படலாம். தமிழகத்தின் பயிர்த்தொழிலில் பருவமழைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புவி சூடாதலினால் அவற்றின் வலிமை கூடினாலோ அல்லது அவை பொய்த்துபோனாலோ அவை பயிர்த்தொழிலில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம்

[தொகு] புவி சூடாதலை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்

புவி சூடாதலினால் ஏற்படும் பாதிப்புகளின் தீவிரத்தைப் பற்றி பெரும்பான்மையான ஆராய்ச்சியாளர்கள் உடன்படுவதை கருத்தில்கொண்டு பல உலக நாடுகளும், அரசு சாரா அமைப்புகளும், தனி நபர்களும் புவி சூடாதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள். புவி சூடாதலைத் தடுப்பதற்கான உலக நாடுகளின் மிக முக்கியமான முன்னெடுப்பு, 1997 இல் ஜப்பானின் கியோட்டோ நகரில் நிறைவேற்றப்பட்ட கியோட்டோ தீர்மானம் ஆகும்[5]. இந்தத் தீர்மானம் கரியமிலத்தை வெளியீட்டை மட்டுப்படுத்துவதற்கான ஒவ்வொரு நாட்டிற்குமான குறிகோள்களை/அளவுகளை நியமிக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் கார்பன் வியாபாரம் எனப்படும் (Carbon Trading Scheme) கரியமில மாசுபடுத்தலுக்கான உரிமைகளை விற்கும்/வங்கும் முறையும் நடைமுறைக்கு வந்தது. பெரும்பான்மையான நாடுகள் இந்த ஒப்பந்ததை நிறைவேற்றிய நிலையில், உலகிலேயே மிக அதிக அளவில் கரியமிலத்தை வெளியிடும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் இதை இன்னும் நிறைவேற்றவில்லை. இந்த ஒப்பந்தம் 2012 இல் நிறைவுக்கு வருகிறது. அதன் பின்னர் இதைத் தொடரவேண்டிய ஓப்பந்தத்தை வடிவமைக்க உலக நாடுகள் மே 2007 இலிருந்து பேச்சு வார்த்தை நடத்திவருகிறார்கள்.

[தொகு] இந்தியாவில் புவி சூடாதலை ஆராய்வதற்கான நிறுவனங்கள்/மையங்கள்

புவி சூடாதலை ஆராய்வதற்கான இந்தியாவின் முதல் மையம் அண்ணா பல்கலைக்கழகத்தில் மார்ச் 2008 தொடங்கப்பட்டது. இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் புவி சூடாதலின் விளைவுகளை அவதானிக்கவும், விளைவுகளை மட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு அளிப்பதும் இதன் முக்கிய நோக்கம்.[6]

[தொகு] விமர்சனங்கள்

சிலர் புவி சூடாதல் மனிதர்களினால் ஏற்படவில்லை என்றும், அது சூரிய கதிரியக்க/வெப்பநிலை மாற்ற சுழற்சி போன்ற இயற்கையான காரணங்களினால் நிகழ்வது என்றும் கருதுகின்றார்கள். அரசியல், பொருளாதார பதிப்பு முதல் அறிவியல் வரை பல காரணங்களினடிப்படையில் சிலர் புவி சூடாதலை மாட்டுப்படுத்த எடுக்ககப்படும் நடவடிக்கைகளை எதிர்க்கிறார்கள்.[7]

[தொகு] உசாத்துணை நூல்கள்/கட்டுரைகள்/ஆவணங்கள்/இணைப்புகள்

  1. தட்ப வெப்ப நிலை மாற்றம் பற்றிய IPCCயின் அறிக்கைக்கள்
  2. The Weather Makers, by Tim Flannery
  3. http://www.hindu.com/thehindu/holnus/000200803041769.htm
  4. http://www.hinduonnet.com/thehindu/holnus/000200802280341.htm ஆங்கிலத்தில் "புவி சூடாதலுக்கான மேலும் வலுவான ஆதாரம். இமய மலை பனிமலை கரைவு"
  5. http://unfccc.int
  6. ஆங்கிலத்தில் First centre to monitor climate change comes up in Chennai. (html) The Hindu. இணைப்பு ஏப்ரல் 9,2008 அன்று அணுகப்பட்டது.
  7. The State of Fear Novel by Michael Crichton

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்