புறத்திணை
பழந் தமிழ் இலக்கியங்கள் அகத்திணை, புறத்திணை என இரு வகைகளுக்குள் அடங்குகின்றன. பழந் தமிழர் வாழ்வியலில் போர், அரசியல் முதலியவை தொடர்பான வாழ்வு புற வாழ்வு எனப்படுகின்றது. மேற்படி புற வாழ்வு தொடர்பான ஒழுக்கம் புறத்திணை என வழங்கப்படுகின்றது. புற வாழ்வு அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்படும் இலக்கியங்களைப் புறத்திணை இலக்கியங்கள் என வகைப்படுத்துவது தமிழ் இலக்கிய மரபு.
பொருளடக்கம் |
புறத்திணைப் பிரிவுகள் [தொகு]
புறத்திணையில் உள்ள துறைப் பிரிவுகளைத் தொல்காப்பியர் ஏழு எனக் காட்டுகிறார். புறப்பொருள் வெண்பாமாலை 12 எனப் பகுத்துக் காட்டுகிறது.
தொல்காப்பிய நெறி [தொகு]
பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் அதன் பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை பற்றி விரிவாக விளக்கம் தருகின்றது. இதன்படி புறத்திணை பின்வருமாறு ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் ஒரு மன்னன் அந் நாட்டு எல்லையூடு புகுந்து ஆநிரைகளைக் (பசுக் கூட்டம்) கவர்ந்து செல்வதையும். அவ்வாறு களவாடிச் செல்லப்படும் ஆநிரைகளை மீட்டு வருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை வெட்சித் திணையுள் அடங்கும். மன்னனொருவன் வேற்று நாட்டின் மீது படை நடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது வஞ்சித் திணை. படை நடத்திச் செல்லும் அரசன் வேற்று நாட்டுக் கோட்டையை முற்றுகை இடுவதையும், அக் கோட்டையைப் பாதுகாத்து நிற்கும் பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது உழிஞைத் திணையாகும். படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர் செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுதல் தும்பைத் திணையுள் அடங்கும். மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுதல் வாகைத் திணையைச் சாரும். உலகத்தின் நிலையாமை தொடர்பான பொருள்களை விளக்குவது காஞ்சித் திணையுள்ளும், பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது பாடாண் திணையுள்ளும் அடங்குகின்றன.
புறப்பொருள் வெண்பாமாலை நெறி [தொகு]
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடான், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என 12 திணைகளாக இந்த நூல் பகுத்துக்காட்டுகிறது.
திவாகர நிகண்டு விளக்கம் [தொகு]
திவாகர நிகண்டு புறத்திணை கூறும் செய்திகளை எளிமைப்படுத்திக் காட்டுகிறது.
1 வெண்பாச் சூத்திரம்
- வெட்சி நிரைகவர்தல், மீட்டல் கரந்தையாம்
- வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் – உட்கார்
- எதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
- அதுவளைத்தல் ஆகும் உழிஞை.
2 ஆசிரியப்பாச் சூத்திரம்
- அதிரப் பொருவது தும்பை ஆகும்
- போர்க்களத்து மிக்கார் செருவென்றது வாகையாம்
- அத்திணைத் தொழிலும் அத்திணைப் பூவும்
- அப்பெயர் பெறுதல் அந்நிலத்து உரியவே