பீனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காற்றாடியுடன் கூடிய ஒருவகைப் "பீனி"

பீனி (beanie) என்பது, தலையை மூடி அணியப்படும் விளிம்பற்ற ஒரு வகைத் தொப்பி. இதற்கு முன் மறைப்பு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஒரு காலத்தில் பள்ளிச் சிறுவரின் விருப்பத்துக்கு உரியதாக இருந்தது.

அமைப்பு[தொகு]

பீனி வகைத் தொப்பிகளைப் பல சிறிய முக்கோண வடிவிலான துணிகளை இணைத்துச் செய்கின்றனர். இம் முக்கோணத் துணிகள் ஒவ்வொன்றினதும் ஒரு உச்சி தொப்பியின் உச்சியில் ஒன்றாக இணைந்து அதில் ஒரு பொத்தான் இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முக்கோணத்தினதும் இரண்டு பக்கங்கள் அதற்கு அடுத்துள்ள துணிகளின் பக்கங்களுடன் தையல் மூலம் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றைத் துணிகளால் மட்டுமன்றி தோல்களினாலும், அது போன்ற பிற பொருட்களாலும் கூட உருவாக்குவது உண்டு.

சொற்பிறப்பு[தொகு]

"பீனி" என்னும் சொல், மத்தியகாலப் பல்கலைக் கழகங்கள் சிலவற்றில் மாணவர்கள் அணிந்த மஞ்சள் நிறத் தொப்பி வகையொன்றின் பெயரில் இருந்து பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது. இத் தொப்பிகள் முதலில் "மஞ்சள் அலகு" எனப் பொருள்படும் "பீயோனசு" (bejaunus) என்னும் சொல்லால் குறிக்கப்பட்டது. பின்னர் இது "பீனசு" (beanus) என்றானது. இச் சொல் அக்காலத்தில் இத் தொப்பிகளையும், புதிய மாணவர்களையும் குறித்தது. "பீனசு" என்னும் இச் சொல்லே பிற்காலத்து பள்ளிகளில் அணியப்பட்ட "பீனி" ஆக உருமாறியது. கனடா, நியூசிலாந்து, ஆசுத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற சில நாடுகளில் பின்னல் தொப்பி வகையான "துக்" (tuque) எனும் தொப்பியையும் "பீனி" என அழைப்பது உண்டு.

வரலாறு[தொகு]

உடல் உழைப்பாளிகளான உருக்கியிணைப்போர், எந்திரம் பழுதுபார்ப்போர் போன்றோர் தமது தலைமுடியை மூடிக்கொள்ளவும், அதேவேளை விளிம்புள்ள பிற தொப்பிகள் வேலை செய்வதற்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதாலும், சற்றுப் பெரிய "பீனி" வகைத் தொப்பிகளை அணிந்து வந்தனர். ஏறத்தாழ ஒரு அங்குல அளவுக்கு முன்புறத்தில் நீட்டிக் கொண்டிருந்த விளிம்புகளைக் கொண்ட பீனீக்களும் புழக்கத்தில் இருந்தன. இவ்வகையில் இருந்தே நீண்ட முன் மறைப்புக்களுடன் கூடிய பிற்கால அடிப்பந்துத் தொப்பிகள் வளர்ச்சியடைந்தன.


1940களின் நடுக் கூற்றில், அடிப்பந்துத் தொப்பிகளைப் போன்ற முன்மறைப்புக் கொண்ட பருத்தியால் ஆன தொப்பிகள் அறிமுகமானதால், பீனிக்களின் புழக்கம் குறைந்தது. எனினும், 1950 களிலும், அதற்குப் பின்னரும் கல்லூரிகளின் புதிய மாணவரும், பிற தோழமைக் குழுக்களும் பீனிக்களை அணிந்தனர். இது ஒரு மென்மையான அடங்கிப் போகும் தன்மையாகக் கருதப்பட்டது. லீகை பல்கலைக் கழகத்தில் புதிய மாணவர்கள் பீனியை அணிய வேண்டியிருந்தது. பிராங்ளின் அன்ட் மார்சல், கெட்டிசுபர்க் அங் ரட்கர்சு போன்ற கல்லூரிகளை உள்ளடக்கிய பல கல்லூரிகளிலும் இந்த நடைமுறை இருந்ததாகத் தெரிகிறது. அமெரிக்காவின் கன்சாசு மாநிலத்தின் அட்சிசனில் உள்ள பெனடிக்டைன் கல்லூரியில் இன்றும் ஒரு கிழமைக்குப் புதிய மாணவர்கள் பீனித் தொப்பி அணிந்துவரும் மரபு நடைமுறையில் உள்ளது.


1990களில் பீனிக்கள் மீண்டும் புழக்கத்துக்கு வந்தன. இக் காலத்தில் பிரபலமான "கிரஞ்ச்" இசைப் பண்பாடு சார்ந்த உடைப் பழக்க வழக்கங்கள் பிரபலமானதும், பல வகையான பனிக்கால விளையாட்டுகள் பிரபலமானதும் இதற்கான காரணங்கள்.

காற்றாடிப் பீனி[தொகு]

1940களின் பிற்பகுதியில், "சயன்சு ஃபிக்சன் ஃபான்சீன்" எனப்படும் அறிவியல் கற்பனைக்கதை ரசிகர்குழாமினால் வெளியிடப்பட்ட சஞ்சிகையின் ஓவியரும் அக் காலத்தில் ஒரு உயர் பள்ளி மாணவனுமான ரே நெல்சன் என்பவர் காற்றாடி பொருத்திய பீனியை அணிந்து வந்தார். "விசிறிகள்" (fans) எனப்பட்ட, இவர் போன்ற ரசிகர் குழாமினருக்கு சிறுபிள்ளைத்தனம் கொண்டவர்கள் என்ற பொதுவான கருத்து இருந்ததால், ஒரு அறிவியல் கற்பனைக்கதை விசிறியான தன்னைத்தானே கேலி செய்து கொள்வதற்காக ஒரு "விசிறியை" (காற்றாடி) தனது தொப்பியில் பொருத்திக்கொண்டார். காற்றாடி பொருத்திய பீனி நகைச்சுவைப் படக்கதைகள் மூலம் பரவலான புழக்கத்துக்கு வந்தது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனி&oldid=1362527" இலிருந்து மீள்விக்கப்பட்டது