பீசா பொதுச்சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீசா பொதுச்சங்கம் 1409இல் நடந்த போது அவிஞ்ஞோன் (சிகப்பு), உரோமை (நீலம்) ஆகிய திருந்ததையகளுக்கு ஆதரவளித்தோர்.

பீசா பொதுச்சங்கம் என்பது ஏற்கப்படாத கத்தோலிக்க திருச்சபையின் பொதுச்சங்கமாகும். 1409இல் மேற்கு சமயப்பிளவினை முடிவுக்கு கொணர இது இத்தாலியின் பீசா நகரில் கூடியது. இது அச்சமயம் திருத்தந்தை பதவி கோரிய பதின்மூன்றாம் பெனடிக்ட் மற்றும் பன்னிரண்டாம் கிரகோரி ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டதாக அறிவித்து,[1] ஐந்தாம் அலெக்சாண்டரை திருத்தந்தையாக தேர்வு செய்தது.

இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு விழாநாளில் பீசா உயர் மறைமாவட்ட பேராலயத்தில் கூடிய இச்சங்கத்தில் 4 மறைமுதுவர்கள், 22 கர்தினால்கள் மற்றும் 80 ஆயர்கள் இருந்தனர். மேலும் வர இயலாத 100 ஆயர்களின் பதில் ஆட்களாக குருக்களும், 87 ஆதீனத் தலைவர்களும், 41 துறவற அமைப்புகளின் தலைவர்களும், 300 இறையியல் மற்றும் திருச்சபை சட்ட வல்லுநர்களும் குழுமியிருந்தனர். இவர்களோடு எல்லா ஐரோப்பிய கிறித்தவ நாடுகளின் பதில் ஆட்களும் இருந்தனர். இதில் திருத்தந்தை பதவி கோரியவர்களோ அல்லது அவர்களின் பதில் ஆட்களோ பங்கேற்காததால் அவர்கள் சங்கத்தை இழிவு படுத்தியதாக சங்கத்தின் நான்காம் அமர்வில் (contempt of court) குற்றஞ்சாட்டப்பட்டனர். பின்னர் திருத்தந்தை பதவி கோரும் இருவரில் உண்மையான வாரிசு யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

சங்கத்தின் முடிவில் திருச்சபையின் அதி உயர் நன்மைக்காகவும் (Salus populi suprema lex esto) அதன் ஒற்றுமையை காக்கவும் கர்தினால்களே முடிவு எடுக்கும் அதிகாரம் உடையவர் என அறிக்கையிடப்பட்டது. இது திருத்தந்தையின் அதிகாரத்துக்கு நேரடியாக விடப்பட்ட சவாலாகக்கருதப்பட்டதால் சீர்திருத்தத் திருச்சபையினர் இச்சங்கத்தை கிறித்தவ சீரமைப்பின் முதல் படியாகப்பார்த்தனர்.

இச்சங்கம் யாரையும் எதிர்த்தோ அல்லது திரிபுக்கொள்கையினை பரப்பவோ கூட்டப்படாததாலும், இதில் பங்கேற்றவர்களுக்கு இருந்த அதிகாரம், நல்லெண்ணம், ஒருமித்தமுடிவு மற்றும் அரச ஆதரவு பெற்றிருந்ததால் இது மற்ற செல்லா சங்கங்களைவிடவும் தனித்துவம் உடையது ஆகும்.

இச்சங்கத்தின் முடிவில் நடந்த ஐந்தாம் அலெக்சாண்டரின் தேர்தலில் 14 உரோமை கர்தினால்களும் 10 அவிஞ்ஞோன் கர்தினால்களும் பங்கேற்றனர். இதன் முடிவை பதின்மூன்றாம் பெனடிக்டும் பன்னிரண்டாம் கிரகோரியும் ஏற்காததால் இது மேற்கு சமயப்பிளவினை மேலும் சிக்கலாக்கியது. இது காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்துக்கு காரணியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. [http://britannica.com/EBchecked/topic/461681/Council-of-Pisa Council of Pisa]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீசா_பொதுச்சங்கம்&oldid=1817864" இலிருந்து மீள்விக்கப்பட்டது