பி. கலிஃபுல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிஃபுல்லா ராவுத்தர் சாகிப்
புதுக்கோட்டையின் திவான்
ஆட்சியாளர்ராஜகோபால தொண்டைமான் (1941-1947)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1888
புதுக்கோட்டை, புதுக்கோட்டை சமஸ்தானம், பிரிட்டிசு இந்தியா
இறப்பு(1950-02-10)10 பெப்ரவரி 1950
திருச்சிராப்பள்ளி, இந்தியா
தேசியம்பிரிட்டிசு இந்தியா
பெற்றோர்தந்தை - பிச்சை முகமது இராவுத்தர் தாய் - அமீரம்மாள்
முன்னாள் கல்லூரிசென்னை பல்கலைக்கழகம்
வேலைவழக்கறிஞர், நிர்வாகி
தொழில்அரசியல்வாதி

கான் பகதூர் பி. கலிஃபுல்லா சாகிப் பகதூர்,புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவானாக இருந்தார், சென்னை மாகாணத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி; முசுலிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். 1937ல் ஏற்பட்ட கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவின் இடைக்கால அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவர் ஒரு இராவுத்தர். வழக்கறிஞராகப் பணியாற்றிய கலிஃபுல்லா 1930களில் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1937 தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரியார் ஈ. வெ. ராமசாமியின் நண்பரான இவர் 1937-40ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவளித்தார்.[1][2][3][4]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கலிபுல்லா சாகிப் 1888ம் ஆண்டு இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தின் இலுப்பூரில் ஒரு செல்வந்தர் வீட்டு சீமானாய் பிறந்தார். தந்தை பிச்சை முகமது ராவுத்தர்- தாய் அமீரம்மாள். உடன் பிறந்தோர் ஆண்கள் ஐவர்- பெண்கள் இருவர். இவருடைய சகோதரர் சர்புதீன் சாகிப் பிற்காலத்தில் திருச்சி, சேலம் மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார்.[5]

கல்வி[தொகு]

திருச்சியில் ஆரம்பக் கல்வி பயின்ற கலிபுல்லா சாகிப் 1913ம் ஆண்டு முதுகலை பட்டத்தை சென்னை பல்கலைக் கழகத்தில் பெற்றார். சென்னை மாகாணத்திலேயே எம்.ஏ., பட்டம் பெற்ற முதல் இஸ்லாமியர் கலிபுல்லா சாகிப்தான். பட்டம் பெற்ற முதல் இஸ்லாமியர் என்பதால் இவர் தந்தை இவருடைய நண்பர்களுக்கு ஒரு விருந்தளித்தார். 247 பேருக்கு கொடுக்கப்பட்ட விருந்திற்கு ரூபாய் 27 செலவானதாக இவரது தந்தையாரின் குறிப்பின் மூலம் அறிய முடிகிறது. பின்னர் அதே ஆண்டு லண்டனில் பார் அட்லா படிப்பதற்காக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வராய் இருந்த ஆங்கிலப் பாதிரியார் ஒருவரின் கடும் முயற்சியால் நன்னம்பிக்கை முனை வழியாக லண்டனுக்கு கப்பலில் பயணம் சென்றார். லண்டண் சென்று சரியாக முப்பது நாளில் கலிபுல்லா சாகிப் அவர்களின் தந்தையார் பிச்சை ராவுத்தர் காலமானார். இதனால் கலிபுல்லா சாகிப் நாடு திரும்பினார். பின்னர் முதலாம் உலகப்போர் தொடங்கிவிட்டபடியால் அவரால் திரும்ப லண்டன் செல்ல இயலவில்லை. எனவே, சென்னையில் 1929ம் ஆண்டு தனது வழக்கறிஞர் படிப்பை முடித்தார்.[5]

அரசியல் வாழ்க்கை[தொகு]

1920களில் இருந்தே நீதிக்கட்சியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் கலிபுல்லா சாகிப். தந்தை பெரியார், கி.ஆ.பெ.விஸ்வநாதம், பி.டி.ராஜன், சர்.ஏ.பி.டி.பன்னீர்செல்வம் ஆகியோர் கலிபுல்லா சாகிபின் நட்பு வட்டத்திற்குள் இருந்தனர். திருச்சியில் அவர் இருந்தபோது திருச்சி நகர்மன்றத் தலைவராக இருமுறை பணியாற்றினார். திருச்சி நகர்மன்றத் தலைவராக இருந்த முதல் இஸ்லாமியரும் அவரே. மிகத் திறம்பட பணியாற்றிய அவர் 1930-ம் ஆண்டு முஸ்லிம் லீக் சார்பில் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937ம் ஆண்டு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

இவர் 1950 பிப்ரவரி 10 அன்று இறந்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. More, J.B.P (1997). Political Evolution of Muslims in Tamil Nadu and Madras 1930–1947. Orient Blackswan. பக். 140–151. ISBN 8125011927 ISBN 9788125011927. இணையக் கணினி நூலக மையம்:37770527. http://books.google.com/books?id=QDht7OyOjXMC. 
  2. Justice Party Golden Jubilee Souvenir, 1968. 
  3. The Indian geographical journal , Volumes 7-8. 1933. பக். 46. http://books.google.com/books?id=D5ktAAAAMAAJ&q=p+khalifullah&dq=p+khalifullah&hl=en&ei=WxtuTPy9DoiyvgOpxsBC&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CCgQ6AEwATgK. 
  4. Khursheed Kamal Aziz (1992). Public life in Muslim India, 1850-1947:. Vanguard. பக். 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789694021195. http://books.google.com/books?id=69K1AAAAIAAJ&q=p+khalifullah&dq=p+khalifullah&hl=en&ei=WxtuTPy9DoiyvgOpxsBC&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CDUQ6AEwBDgK. 
  5. 5.0 5.1 5.2 5.3 கே.எம்.சரீப். "திவான் கலிபுல்லா சாகிப்". keetru.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கலிஃபுல்லா&oldid=3779864" இலிருந்து மீள்விக்கப்பட்டது