பால்கன் போர்த்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்கன் போர்த்தொடர்
நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் பகுதி

கிரீட் தீவில் ஜெர்மானிய வான்குடை வீரர்கள்
நாள் அக்டோபர் 28, 1940 – ஜூன் 1, 1941
இடம் அல்பேனியா, யுகோஸ்லாவியா, கிரீசு
தெளிவான அச்சு வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
அல்பேனியா, யுகோஸ்லாவியா மற்றும் கிரீசு அச்சு நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டன
பிரிவினர்
அச்சு நாடுகள்:
 ஜெர்மனி
 இத்தாலி

 அங்கேரி
 பல்கேரியா
 உருமேனியா

நேச நாடுகள்:
 யூகோஸ்லாவியா
 கிரேக்க நாடு
 ஐக்கிய இராச்சியம்
 ஆத்திரேலியா
 நியூசிலாந்து
தளபதிகள், தலைவர்கள்
நாட்சி ஜெர்மனி வில்லெம் லிஸ்ட்
நாட்சி ஜெர்மனி மேக்சிமில்லியன் வோன் வெய்க்ஸ்
நாட்சி ஜெர்மனி கர்ட் ஸ்டூடண்ட்
இத்தாலி யூகோ காவலெரோ
இத்தாலி ஜியோவானி மெஸ்சே
யூகோஸ்லாவிய இராச்சியம் மிலோராட் பெட்ரோவிக்
கிரேக்க நாடு அலெக்சாந்தர் பாபகோஸ்
ஐக்கிய இராச்சியம் ஹென்ரி வில்சன்
பலம்
நாட்சி ஜெர்மனி 680,000
இத்தாலி 565,000
யூகோஸ்லாவிய இராச்சியம் 850,000
கிரேக்க நாடு 430,000
ஐக்கிய இராச்சியம் 62,612

இரண்டாம் உலகப் போரில் பால்கன் போர்த்தொடர் (Balkans Campaign) என்பது அச்சு நாடுகள் பால்கன் குடா பகுதியைக் கைப்பற்ற நடத்திய படையெடுப்புகளையும் அவற்றால் விளைந்த சண்டைகளையும் குறிக்கின்றது. அக்டோபர் 28, 1940 - ஜூன் 1, 1941 காலகட்டத்தில் நிகழ்ந்த இப்போர்த்தொடர், நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும். இப்போர்த்தொடரில் அச்சுப் படைகள் அல்பேனியா, யுகோஸ்லாவியா, கிரீசு ஆகிய நாடுகளைக் கைப்பற்றி ஆக்கிரமித்தன.

பின்புலம்[தொகு]

பாசிச சர்வாதிகாரி முசோலினியின் தலைமையிலான இத்தாலி அச்சு நாடுகள் கூட்டணியில் நாசி ஜெர்மனிக்கு அடுத்தபடியான நிலையை பெற்றிருந்தது. இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் மேற்கு ஐரோப்பாவில் ஜெர்மானியப் படைகளுக்குக் கிடைத்த தொடர் வெற்றியினைக் கண்ட முசோலினி அதே போல இத்தாலிக்கும் நிகழ வேண்டுமென விரும்பினார். பிற நாடுகளைக் கைப்பற்றி இத்தாலியின் பரப்பளவை அதிகரிக்க ஆசைப்பட்டார். 1939ல் அல்பேனியா நாட்டினை இத்தாலிய படைகள் இத்தாலியின் அல்பேனிய ஆக்கிரமிப்பு ஆக்கிரமித்தன. அடுத்து கிரேக்க நாட்டினைக் கைப்பற்ற முடிவு செய்தார். மேற்குப் போர்முனையில் சண்டை ஓயுமுன்னர், ஜெர்மனியின் கவனம் கிழக்கு நோக்கித் திரும்பியது. சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுக்க இட்லர் முடிவு செய்தார். இப்படையெடுப்புக்குத் துணையாக இருக்க பல்கேரியா, ரொமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தியும் வலியுறுத்தியும் அச்சுக் கூட்டணியில் சேரச் செய்தார். பால்கன் குடா பகுதியில் இருந்த யுகோஸ்லாவியா மட்டும் ஜெர்மானிய வற்புறுத்தல்களுக்கு இணங்க மறுத்து வந்தது. இப்படி இருவேறு காரணங்களால் அச்சு நாடுகளின் கவனம் பால்கன் பகுதி மீது திரும்பியது.

கிரேக்க இத்தாலியப் போர்[தொகு]

இத்தாலி கிரீசை சரணடைந்து தனது மேலாண்மையை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தியது. கிரேக்கர்கள் இத்தாலியின் சரணடைவு ஆணையை நிராகரித்து விட்டதால் அக்டோபர் 28, 1940ல் இத்தாலியப் படைகள் கிரீசு மீது படையெடுத்தன. கிரீசைக் கைப்பற்றி அங்கொரு கைப்பாவை அரசை நிறுவுவதும், கிரீசின் பல பகுதிகளை இத்தாலியுடன் இணைப்பதும் முசோலினியின் குறிக்கோள். அல்பேனிய நிலப்பகுதியிலிருந்து நிகழ்ந்த இப்படையெடுப்பை எதிர்கொள்ள கிரேக்கப்படைகள் தயாராக இருந்தன. ஒரு மாத காலத்துக்குள் இத்தாலியப் படையெடுப்பை முறியடித்து விட்டன. நவம்பர் 14ம் தேதி ஒரு பெரும் எதிர்த் தாக்குதலையும் தொடங்கின. அடுத்த சில மாதங்களுக்கு அல்பேனிய - கிரீசு எல்லையில் கடும் சண்டை நடந்தது. ஆனால் எத்தரப்புக்கும் தெளிவான வெற்றி கிட்டாமல் தேக்க நிலை உருவானது. கிரேக்கப் படைகளின் கவனம் அல்பேனிய எல்லையில் இருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு வடக்கு கிரீசில் இத்தாலியப் படைகள் மார்ச் 9, 1941ல் இன்னொரு தாக்குதலைத் தொடங்கினர். ஆனால் பத்து நாட்களுக்குள் கிரேக்கப் படைகள் அத்தாக்குதலைச் சமாளித்து முறியடித்து விட்டன. இத்தாலியால் தனியாக கிரீசைத் தோற்கடிக்க இயலாது என்பதை ஒப்புக்கொண்ட முசோலினி, இட்லரின் உதவியை நாடினார். இட்லரின் ஆணைப்படி முசோலினிக்கு உதவ ஜெர்மானியப் படைகள் ஏப்ரல் 6ம் தேதி கிரீசு மீது படையெடுத்தன.

கள நிலவரம்[தொகு]

முதல் இத்தாலியத் தாக்குதல்
அக்டோபர் 28 – நவம்பர் 13, 1940.
கிரேக்க எதிர்த் தாக்குதல்
நவம்பர் 14, 1940 – மார்ச், 1941.
இரண்டாவது இத்தாலியத் தாக்குதல்
மார்ச் 9 – ஏப்ரல் 23, 1941.

யுகோசிலாவியப் படையெடுப்பு[தொகு]

அச்சுத் தாக்குதலின் வரைபடம்

முசோலினிக்கு உதவுவதைத் தவிர கிரீசிலுள்ள வானூர்தி ஓடுதளங்களில் இருந்து நேச நாட்டு வான்படைகள் ரொமேனியா நாட்டு எண்ணெய்க் கிணறுகளைத் தாக்குவதைத் தவிர்க்கவும் ஜெர்மானியர்கள் விரும்பினர். அந்த எண்ணெய்க் கிணறுகளில் இருந்து தான் ஜெர்மனியின் போர்த் தேவைகளுக்கான எரிபொருள் கிடைத்துக் கொண்டிருந்தது. எனவே அவற்றைப் பாதுகாக்க கிரீசைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஜெர்மானியர்கள் விரும்பினர். கிரீசுக்கு வடகே உள்ள நாடுகளில் ரொமேனியா, பல்கேரியா, அங்கேரி ஆகிய மூன்று நாடுகளும் முன்னரே அச்சு நாட்டுக் கூட்டணியில் இணைந்து விட்டன. ஆனால் யுகோசிலாவியா மட்டும் தொடக்கத்தில் அவற்றுடன் இணைய மறுத்து வந்தது. ஜெர்மானிய வற்புறுத்தலால், மார்ச் 25, 1941 ல் யுகோசிலாவியின் அரசாட்சி பொறுப்பிலிருந்த இளவரசர் இரண்டாம் பால் ஒப்புக் கொண்டார். இதனை எதிர்த்த யுகோசிலாவிய இராணுவத்தினர் புரட்சி ஒன்றை நடத்தி அவரைப் பதவியிலிருந்து இறக்கினர். இப்புரட்சியால் கோபம் கொண்ட இட்லர் யுகோசிலாவியா மீது படையெடுக்க முடிவு செய்தார்.

ஏப்ரல் 6, 1941 அன்று ஜெர்மானியப் படைகள் யுகோசிலாவியா மீதும் கிரீசு மீதும் ஒரே நேரத்தில் படையெடுத்தன. அங்கேரி, பல்கேரியா, ரொமேனியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மூன்று புறங்களில் இருந்து ஜெர்மானியப் படைகள் யுகோசியாவியாவைத் தாக்கின. இத்தாக்குதலில் இத்தாலிய மற்றும் அங்கேரியப் படைப்பிரிவுகளும் பங்கேற்றன. திடீரென நிகழ்ந்த இத்தாக்குதலாலும், யுகோசிலாவிய மக்களிடையே ஜெர்மனியை எதிர்ப்பது குறித்து செர்பிய-குரோஷிய இனக்குழுக்களிடையே இரு வேறு கருத்துகள் நிலவியதாலும், யுகோசிலாவியப் படைகள் நிலைகுலைந்தன. படையெடுப்பின் முதல் நாள் ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே யுகோசிலாவியத் தலைநகர் பெல்கிரேட் மீது ஒரு பெரும் குண்டுவீச்சுத் தாக்குதல் நிகழ்த்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட இத்தாக்குதலில் பெல்கிரெட்டின் மையப் பகுதியும் இராணுவத் தலைமையகக் கட்டிடங்களும் நாசமாகின. இதனால் யுகோசிலாவியப் படைகளின் ஒருங்கிணைப்பு சீர்குலைந்தது. அடுத்த பதினோரு நாட்களில் யுகோசிலாவியப் படைகளை எளிதில் முறியடித்த அச்சுப் படைகள் பெல்கிரேடை சுற்றி வளைத்தன. ஏப்ரல் 17 அன்று யுகோசிலாவியா சரணடைந்தது. பின்னர் அந்நாட்டுப் பகுதிகள் ஜெர்மனி, இத்தாலி, அங்கேரி, மற்றும் பல்கேரிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஜெர்மனிக்கு ஆதரவான குரோவாசியா அச்சு ஆதரவுடன் தனி நாடானது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு (இரண்டாம் உலகப் போர் முடியும் வரை) யுகோசிலாவியா அச்சு நாடுகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது.

மாரிட்டா நடவடிக்கை[தொகு]

கிரீசு சண்டை வரைபடம்

யுகோசிலாவியா மீது படையெடுத்த அன்றே கிரீசையும் ஜெர்மானியப் படைகள் தாக்கின. இத்தாக்குதல் மாரிட்டா நடவடிக்கைஎன்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 6, 1941 அன்று பல்கேரியா மற்றும் யூகோஸ்லாவியா நாட்டுப் பகுதிகளிலிருந்து ஜெர்மானியப் படைகள் கிரீசைத் தாக்கின. கிரீசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருந்த பிரிட்டன் தனது படைகளையும் பொதுநலவாயப் படைகளையும் கிரேக்கப் படைகளின் உதவிக்கு அனுப்பியது. ஆனால் ஜெர்மானியப் படைபலத்தைச் சமாளிக்க முடியாமல் நேச நாட்டுப் படைகள் பின்வாங்கின. மூன்று வார சண்டைக்குப் பின்னர் ஜெர்மானியப் படைகள் பெருவெற்றி பெற்றன. கிரீசிலிருந்த பிரித்தானியப் படைகள் பின்வாங்கி கடல்வழியாகத் தப்பின. கிரேக்கத் தலைநகர் ஏதென்சின் வீழ்ச்சியுடன் ஏப்ரல் 30ம் தேதி கிரீசு சண்டை முடிவுக்கு வந்தது. கிரேக்க அரசும் மன்னர் இரண்டாம் ஜார்ஜும் கிரீட் தீவுக்குத் தப்பினர். மே 1941ல் ஜெர்மானியப் படைகள் கிரீட்டைத் தாக்கிக் கைப்பற்றின. அடுத்த நான்காண்டுகளுக்கு கிரீசு நாசி ஜெர்மனி, இத்தாலி மற்றும் பல்கேரியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது.

கிரீட் சண்டை[தொகு]

கிரீசு முழுமையாகக் கைப்பற்றப்படும் முன்னர் கிரேக்க அரசும், மன்னர் இரண்டாம் ஜார்ஜும் தலைநகர் ஏதென்சை விட்டு வெளியேறி கிரீட் தீவுக்கு இடம் பெயர்ந்தனர். சில தீவுகளைத் தவிர கிரேக்க மூவலந்தீவில் அனைத்து பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர் அடுத்து கிரீட் தீவினை ஜெர்மானியர்கள் தாக்கினர். அத்தீவில் கிரேக்கப்படைகளைத் தவிர பிரித்தானிய மற்றும் பொதுநலவாயப் படைகளும் நிறுத்தப்பட்டிருந்தன. பிரித்தானியக் கடற்படை பெரும் பலத்துடன் தீவினைப் பாதுகாத்ததால் வான்வழியாக படைகளைத் தரையிறக்கி கிரீட்டைக் கைப்பற்ற ஜெர்மானியர்கள் முயன்றனர்.

கிரீட் மீது ஜெர்மானிய வான்குடைப் படைப்பிரிவுகளின் தாக்குதல்

மே 20, 1941ல் கிரீட் மீதான ஜெர்மானியத் தாக்குதல் தொடங்கியது. ஃபால்ஷிர்ம்யேகர் என்றழைக்கப்பட்ட ஜெர்மானிய வான்குடைப் படைப்பிரிவுகள் வானூர்தி வழியாக கிரீட்டின் பல பகுதிகளில் தரையிரங்கி பல முக்கிய இடங்களைக் கைப்பற்றின. ஆனால் அவற்றுக்கு கிரேக்க, நேச நாட்டுப் படைகள் மற்றும் கிரீட்டின் பொதுமக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போரில் வான்குடை படைப்பிரிவுகள் பெருமளவில் ஒரு தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை. மேலும், ஜெர்மானியப் படைகளை, அவை தாக்கும் நாட்டின் பொதுமக்கள் பெருமளவில் எதிர்த்துத் தாக்கியதும் இதுவே முதல் முறை. இத்தாக்குதலில் இரு தரப்பிலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. முதல் நாள் தாக்குதலில் ஜெர்மானியர்களால் தங்களுக்கு விதிக்கப்பட்ட முக்கிய இலக்குகள் எதனையும் கைப்பற்ற இயலவில்லை. ஆனால் அடுத்த சில நாட்களில் பல விமான ஓடுதளங்கள் கைப்பற்றப்பட்டு, அவற்றின் மூலம் புதிய துணைப் படைப்பிரிவுகள் கிரீட்டுக்கு அனுப்பப்பட்டன. கிரீட்டில் ஜெர்மானியப் படைகளின் எண்ணிக்கை அதிகமானதால் அவற்றைச் சமாளிக்க முடியாத நேச நாட்டுத் தளபதிகள் கிரீட்டிலிருந்து பின் வாங்க முடிவு செய்தனர். மே 27ம் தேதி ஜெர்மானியப் படைகளுக்குத் துணையாக 3000 பேர் கொண்ட ஒரு இத்தாலியப் படைப்பிரிவும் கிரீட்டில் கடல்வழியாகத் தரையிறங்கி முன்னேறத் தொடங்கியது. அடுத்த மூன்று நாட்களில் கிரீட்டிலிருந்த நேச நாட்டுப் படைகள் கடல்வழியாக எகிப்துக்குக் காலி செய்யப்பட்டன. கிரேக்க அரசர் இரண்டாம் ஜார்ஜும் கிரீட்டிலிருந்து தப்பினார். ஜூன் 1ம் தேதி கிரீட்டில் எஞ்சியிருந்த கிரேக்க மற்றும் நேச நாட்டுப் படைகள் சரணடைந்து கிரீட் சண்டை முடிவுக்கு வந்தது.

தாக்கம்[தொகு]

ஆக்கிரமிக்கப்பட்ட கிரீசு
ஆக்கிரமிக்கப்பட்ட யுகோசிலாவியா

பால்கன் போர்த்தொடரின் முடிவில் பால்கன் குடா முழுவதும் அச்சு நாடுகளின் கட்டுப்பாட்டில் வந்தது. எனினும் கிரீசிலும், யுகோசிலாவியாவிலும் உள்ளூர் எதிர்ப்புப் படைகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அச்சு ஆக்கிரமிப்புப் படைகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் எதிர்த்து கொரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர்.

பால்கன் போர்த்தொடரினால் இரண்டாம் உலக்ப் போரின் போக்கு பெருமளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக கிரீசு மற்றும் கிரீட் சண்டைகள் போரின் போக்கினைப் பெருமளவில் பாதித்தன. கிரீசு மீது படையெடுத்ததால் தான் சோவியத் ஒன்றியம் மீதான ஜெர்மானியத் தாக்குதல் தாமதமடைந்தது எனவும் இத்தாமதமே ஜெர்மனி இரண்டாம் உலகப் போரில் தோற்கக் காரணம் என்றும் வரலாற்றாளர்களுள் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். மற்றொரு தரப்பினர் கிரீசுக்கு பிரித்தானியப் படைகளை அனுப்பியது ஒரு தேவையற்ற முயற்சியென்றும், மேல்நிலை உத்தியளவில் ஒரு பெரும் தவறு என்றும் கருதுகின்றனர். கிரீட் சண்டையே உலகில் வான்குடைப் படைப்பிரிவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் பெரும் படையெடுப்பு. இது ஜெர்மானியர்களுக்குப் பெருவெற்றியில் முடிவடைந்ததாலும் அப்படைப்பிரிவுகளுக்கு ஏற்பட்ட பேரிழப்புகளால் இட்லர் இனி இத்தகு பெரும் தாக்குதல்களில் அவற்றை ஈடுபடுத்தக் கூடாது என தன் தளபதிகளுக்கு ஆணையிட்டு விட்டார். அதே வேளை ஜெர்மானிய வான்குடைப் படைகளின் திறனை உணர்ந்து கொண்ட நேச நாட்டு தளபதிகள் தங்கள் படைகளிலும் இத்தகு படைப்பிரிவுகளை உருவாக்கும் பணிகளைத் தொடங்கினர். தற்காலப் படைத்துறைகளில் வான்குடைப் படைப்பிரிவுகள் இன்றியமையா அங்கங்களாக உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்கன்_போர்த்தொடர்&oldid=3220682" இலிருந்து மீள்விக்கப்பட்டது