பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். இவனை ஐந்து புலவர்கள் பாடியுள்ளனர்.

  • மதுரை மருதன் இளநாகனார் இவனுக்கு அறிவுரை கூறுகிறார். அரசன் வெற்றி படையால் அமைவது அன்று. அறநெறியால் அமைவது. தமர் என்றும், பிறர் என்றும் பார்க்காமல் ஞாயிறு போல் வெம்மளயும், திங்கள் போல் தண்மையும், மழை போல் கொடையும் உடையவனாக விளங்குவாயாக என அறிவுறுத்துகிறார்.[1]
  • மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் இவனை நாற்பெருங் கடவுள்களோடு ஒப்பிட்டுப் புகழ்கிறார்.[2]
  1. இவன் சினத்தால் ஏற்றூர்தி, செஞ்சடை, கணிச்சி(சூலம்) கொண்ட மணிமிடற்றோனை (சிவன், கூற்று) ஒத்தவன்.
  2. இவன் வலிமையில் சங்கு போன்ற மேனியும், நாஞ்சில் (கலப்பை)ப் படையும், பனைமரக் கொடியும் கொண்ட பலராமன் போன்றவன். [3]
  3. இவன் புகழில் மணிநிற மேனியும், கருடப்புள் ஊர்தியும் கொண்ட திருமாலை ஒத்தவன்.
  4. இவன் நினைத்ததை முடிப்பதில் மயில் ஊர்தியும், மயில் கொடியும் கொண்ட செய்யோன் (முருகன்) போன்றவன்.
  • காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் இவனது போர் வெறியைத் தணிக்கும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். உன் வீரர்கள் பகைவர் வயலைக் கவர்ந்துகொண்டாலும் கவர்ந்துகொள்ளட்டும். ஊரை எரி ஊட்டினாலும் ஊட்டட்டும். வாள் பகைவரை வீழ்த்தினாலும் வீழ்த்தட்டும். அவர்களது காவல்மரத்தை மட்டும் வெட்டவேண்டா. உன் யானைகளைக் கட்ட அவை உதவும்.[4]
  • ஆவூர் மூலங்கிழார் இவனை வாழ்த்திப் பாடிவிட்டுப் பரிசிலை அவனது மனைவியிடம் பெற்றுக்கொள்வதாகக் குறிப்பிடுகிறார். இது அரசியின் கொடைத்திறத்தைக் காட்டுவதாக உள்ளது.[5]
  • வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் இவனது மனைவியையும், மகனையும் வாழ்த்திப் பாடித் தனக்குப் பரிசில் நல்கும்படி வேண்டுகிறார். இவனது மனைவி, கழுத்தில் ‘சேயிழை’ அணிந்திருந்தாள் என இவர் குறிப்பிடுவது அவளது தாலியைக் குறிப்பதாகலாம். இவன் செல்வத்தை விரும்பாதவன். ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம் [6]

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறம் 55,
  2. புறம் 56
  3. வெண்ணிறம் பலராமனுக்கு உரியது. நாஞ்சில் கொடி பரசுராமனுக்கு உரியது. பனைக்கொடி பலராமனுக்கு (?) உரியது. பலராமன், பரசுராமன், திருமால் மூவரையும் ஒருவர் எனப் பரிபாடல் இரண்டாம் பாடல் காட்டுகிறது. இப்பாடலிலும் ஒருவரே என்னும் கருத்து காட்டப்பட்டுள்ள6து.
  4. புறம் 57
  5. புறம் 196
  6. புறம் 198