பல்குன்றக் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்குன்றக் கோட்டம் என்பது சங்ககாலத்தில் செங்கண்மா என்னும் ஊரைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய ஆட்சிப் பகுதி.

பத்துப்பாட்டு என்பது சங்ககால நூல்கள் 10 அடங்கிய ஒரு தொகுப்பு. அந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று மலைபடுகடாம். இந்த நூலைப் பாடியவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் புலவர். அவர் அந்த நூலில் நன்னன் என்னும் வள்ளலிடம் தான் பெற்றுவந்த கொடையின் பெருமையைக் கூறிக் கூத்தர்களை அவனிடம் ஆற்றுப்படுத்துகிறார். அந்த நன்னன் இன்னான் என்று கூறும் அந்த நூலின் கொளுக்குறிப்பு அவன் பெயரைச் “பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன்” எனக் குறிப்பிடுகிறது. இதில் செங்கண்மா என்பது அவன் இருந்த ஊர். அந்த ஊர் பல்குன்றக் கோட்டம் என்னும் ஆட்சிப் பகுப்பின் கீழ் இருந்தது.

இந்தப் பல்குன்றக் கோட்டம் எது என்பதில் இருவேறு கருத்துகள் உள்ளன. அது பல குன்றங்கள் நிறைந்த பகுதி என்பதை அதன் பெயர் தெளிவுபடுத்துகிறது.

திருவண்ணாமலையை அடுத்துள்ள செங்கம் என்னும் ஊர்தான் சங்ககாலச் செங்கண்மா என்று குறிப்பிடுகின்றனர். [1]

செங்கண்மா செல்லும்போது ‘ஆரிப் படுகர்’ அளிக்கும் விருந்தைப் பெறலாம், வழுக்குப்பாறை ஆறுகளைக் கடந்து செல்லவேண்டும் என்பது போன்ற குறிப்புகள் நூலில் வருவதால் செங்கண்மா என்பது சேரநாட்டின்கண்ணதோர் ஊர் ஆகலாம் எனக் கருதுவாரும் உண்டு. [2]

அடிக்குறிப்பு[தொகு]

  1. டாக்டர் மா இராசமாணிக்கனார், பத்துப்பாட்டு ஆராய்ச்சி, சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு,
  2. பொதுவன் அடிகள், பத்துப்பாட்டு செய்தி உரை 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்குன்றக்_கோட்டம்&oldid=894647" இலிருந்து மீள்விக்கப்பட்டது