பறம்புமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குறிஞ்சியும் மருதமும்

பறம்பு மலை சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் [1] எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது. ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும் என்று கபிலர் பாடல் [2] குறிப்பிடுவது போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது. [3]

பறம்பின் முகடு [4]

பொருளடக்கம்

இருப்பிடம் [தொகு]

பறம்பு மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக 7 கி.மீ தொலைவில் உள்ளது. மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பொன்னமராவதி ஆகிய நகரங்களிலிருந்து பேருந்தில் செல்ல முடியும்.

திருக்கொடுங்குன்றம் என்னும் பிரான்மலை

பறம்பு மலை வளம் [தொகு]

பறம்புமலை
  • பறம்புநாடு ‘பெரும்பெயர்ப் பறம்பு’ எனப் பலராலும் போற்றப்பட்டது. [5]
  • பறம்புநாடு 300 ஊர்களைக் கொண்டது. [6]
  • பறம்பு நாடானது அறை [7], பொறை [8] முதலானவற்றைக் கொண்டது. இந்த நாட்டிலிருந்த ஒரு குளம் எட்டாம் நாள் பிறைநிலா போல வளைவாக இருந்தது. [9]
  • பறம்பு மலையில் ஓர் ஊரிலிருந்த ‘பனிச்சுனை’ நீர் மிகவும் சுவையானது. [10] [11] இந்தச் சுனைநீர் எப்போதாவது மட்டுமே கிட்டும். [12]
  • பறம்பு மலை முற்றுகையின்போது பாரி வளர்த்த பறவைகள் பறந்து சென்று நெற்கதிர்களை அவனுக்குக் கொண்டுவந்து தந்தன. [13]
  • பறம்பு மலையில் குறத்தியர் மூட்டிய சந்தனப் புகை பக்கத்தில் உள்ள வேங்கைப் பூக்களோடு சேர்ந்து மணக்கும்.[14]
  • பறம்புமலை மூங்கில்-நெல், பலாப்பழம், வள்ளிக்கிழங்கு, தேன் ஆகிய நான்கும் விளையும் உழவர் உழாத நான்கு வளங்களை உடையது. கபிலர் புறம் 109

பறம்பு நாடு [தொகு]

பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டது பறம்பு நாடு. இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இந்நாடு பறம்புநாடு, பாரிநாடு, பறநாடு [15] எனவும் வழங்கப்படும். இது சங்க காலத்திலிருந்து புகழ் பெற்றிருந்தது. இந்த நாட்டை வேள்பாரி. கி.பி 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்டான். வேளிர் குலத் தலைவனாக விளங்கிய இவன் ஈரத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவன் பாரி மன்னன். அதனுடைய எல்லைகளாக,

  • தென்னெல்லை - திருமோகூர் முதல் கீழ் மேலோடிய வையையாற்றங்கரை - பறம்புக்குடி
  • கிழக்கெல்லை - பறம்புக்குடி- காளையார் கோயில் - முத்து நாடு - அனுமந்தக் குடி- பறம்பு வயல்
  • வடவெல்லை - பறம்பு வயல் - கானாடுகாத்தான், சோனாபட்டு - திருக்கோளக்குடி - பூலாங்குறிச்சி - இடையாற்றூர் குடுமியான் மலைப்புறம் - பறம்பூர்
  • மேற்கெல்லை - பறம்பூர் - மருங்காபுரி - துவரங்குறிச்சி - நத்தம் மலைகளின் கிழக்குப் பகுதி - அழகர் மலைக் கிழக்குப் பகுதி - பறம்புக் கண்மாய் - திருமோகூர்

எனக் கொள்வர். பிற்காலத்தில் இப்பறம்பு நாடு பாண்டி மண்டலத்தின் ஒரு பகுதியாக மாறியது. [16]

பாடிய புலவர்கள் [தொகு]

சங்க காலத்து நல்லிசைப் புலவர்களான கபிலர், ஔவையார், மிளைக்கந்தனார், நக்கீரர், புறத்திணை நன்னாகனார், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார் முதலியோர் வள்ளல் பாரியையும் பறம்பு மலையையும் பாடியுள்ளனர். பக்தி இலக்கியக் காலத்து திருஞான சம்பந்தரும், அருணகிரி நாதரும் பாடியுள்ளனா்.

கல்வெட்டுச் சான்றுகள் [தொகு]

இப்பறம்பு மலை தற்காலத்தில் பிரான்மலை என்று வழங்கப் பெறுகிறது. இங்குள்ள விசுவநாதர் கோயில் கருவறை வடக்குப்புற அடிப்படைச் சுவரில்,

...... இந்நாட்டு அறுநூற்றுவனேரிப் பற்றில்
பாரிசுரமும் இக்களங்களில்

என்று குறிக்கப் பெற்றுள்ளது.

அதே கோயில் பின்புறம் முகப்பு அடிப்படை முகப்புப் பட்டைத் தொடரில்,

..... இந்நாட்டு அறுநூற்றுவனேரிப் பற்றில்
பாரிசுரமும் இவ்ஊர்களில் ....

என்றும் இரு கல்வெட்டுகள் இருக்கின்றன.

பாரி ஆண்ட பறம்பு மலையின் விளிம்பு

தற்காலச் செய்திகள் [தொகு]

பாரிவேட்டை என்ற பெயரில் ஒரு வேட்டை இப்போதும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இம்மலையிலிருந்து 15 கி.மீ. எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வேட்டையை மரபாக நடத்தி வருகின்றனா். இம்மலைக்குத் தெற்கே கூத்துப் பாரிப் பொட்டல் என்று ஓர் இடம் இருக்கிறது. இப்பெயர் கூத்தையும் பாரியையும் தொடர்புபடுத்தி உணர்த்துவதாய் உள்ளது. பாரிவேட்டைக்குச் சென்று திரும்பும் போதில் இங்கு கூத்து நடக்கும். முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்ததை நினைவுபடுத்தி இன்றும் இப்பகுதிகளில் கொடி தளும்பினால் குடி தளும்பும் என்னும் சொலவடை வழக்கில் இருந்து வருகிறது. இப்பகுதியில் குழந்தைகளுக்கு பாரி, கபிலன், முல்லைக்கொடி, நல்லமங்கை, அங்கவை, சங்கவை என்னும் பெயர்கள் வைக்கப்படுகின்றன.

சான்றாதாரம் [தொகு]

கவிஞர் மரு. பரமகுரு எழுதிய பறம்புமலை திருக்கொடுங்குன்றம் வரலாறு என்னும் நூலிலிருந்து தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்: [தொகு]

http://parambumalai.blogspot.com/

அடிக்குறிப்பு [தொகு]

  1. மூங்கில் நெல்லாகிய திருநெல் விளையும் குன்றம்
  2. புறநானூறு 114
  3. 2012 ஆம் ஆண்டிற்கான அறிஞர் எனக் குடியரசுத் தலைவரின் விருது பெற்ற கல்வெட்டியல் அறிஞர் கோவிந்தராசனார் கண்ணகி கோயில் இருக்குமிடத்தைக் கண்டறிந்து கூறியவர். இவர் இப்போதுள்ள பிரான்மலையே பறம்புமலை என்பதையும் உறுதி செய்துள்ளார். இதனை ஏற்றுக் குன்றக்குடி அடிகளார் இவ்வூரில் ஆண்டுதோறும் 'பாரிவிழா' நடத்திவருகிறார்.
  4. சங்ககாலப் பனிச்சுனையுடன்
  5. கபிலர், புறம் 113
  6. முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு; (கபிலர், புறம் 110)
  7. சிறுபாறைகள்
  8. பெரும்பாறைகள்
  9. அறையும் பொறையும் மணந்த தலைய,
    எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்
    தெள் நீர்ச் சிறு குளம் கீள்வது மாதோ
    கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
    தேர் வண் பாரி தண் பறம்பு நாடே! (கபிலர், புறம் 118)
  10. பாரிப் பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர் ஓர் ஊர் உடைமையின். (புறத்திணை நன்னாகனார், புறம் 176)
  11. பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனிர் (மிளைக் கந்தன். குறுந்தொகை 196)
  12. பாரி பறம்பின் பனிச் சுனை போல,
    காண்டற்கு அரியள் (கபிலர் புறம் 370)
  13. உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின்
    நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
    முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
    இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப்
    படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு, (ஔவையார், அகநானூறு 303)
  14. குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி
    ஆரம் ஆதலின், அம் புகை அயலது
    சாரல் வேங்கைப் பூஞ் சினைத் தவழும்
    பறம்பு (கபிலர், புறம் 108)
  15. நறுநீல நெய்தலும் கொட்டியும் தீண்டிப்
    பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரிப்
    பறநாட்டுப் பெண்டிர் அடி (யாப்பருங்கல விருத்தி மேற்கோள் பாடல்)
  16. புரிசைப் புறத்தினில் சேரனும் சோழனும், போர்புரிய
    இரியச் சயங்கொண்டபோழ்தினில் யாமினி ஈங்கிவனைப்
    பரிசிற்கு நல்ல கவிபாடி னால்வரும் பாக்யமென்றே
    வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டிய மண்டலமே (பாண்டி மண்டலச் சதகச் செய்யுள்)
"http://ta.wikipedia.org/w/index.php?title=பறம்புமலை&oldid=1399391" இருந்து மீள்விக்கப்பட்டது