பயங்கரவாதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பயங்கரவாதம் (Terrorism) என்பது, சிறப்பாகக் கட்டாயப்படுத்தும் நோக்கில் ஒழுங்கமைந்த முறையில் அச்சமூட்டலைப் பயன்படுத்துவது ஆகும். இதற்கு, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணம் கிடையாது. பயங்கரவாதத்தின் மிகப் பொதுவான வரைவிலக்கணங்கள், கருத்தியல் சார்ந்த இலக்கொன்றை அடைவதற்காகப் பயத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடல், போரில் ஈடுபடாதவர்களை வேண்டுமென்றே இலக்குவைத்தல் அல்லது அவர்களது பாதுகாப்பைப் பொருட்படுத்தாது விடுதல் போன்றவற்றை உள்ளடக்குகின்றன. சில வரைவிலக்கணங்கள், சட்டத்துக்குப் புறம்பான வன்முறை, போர்கள் என்பவற்றையும் சேர்த்துக்கொள்கின்றன. பல நாடுகளும் இயக்கங்களும், தாம் அல்லது தமது கூட்டாளிகள் இதே நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதை வேறுபெயர்கள் சொல்லி அழைத்து நியாயப்படுத்துவதும், அதனை ஊக்குவிப்பதும் தமக்கு வேண்டாதவர்கள் செய்யும்போது அதைப் பயங்கரவாதம் என்பதும் உலக நடைமுறையாக உள்ளது.
பயங்கரவாதம் என்பது ஒரு மரபுசாராப் போர்முறையும், உளவியற் போர்முறையும் ஆகும். இச் சொல் அரசியலோடும் உணர்வுகளோடும் தொடர்புபட்டிருப்பதால் இதனைச் சரியாக வரையறுப்பது கடினமானது. 1988 ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்கப் படைத்துறை நடத்திய ஓர் ஆய்வின்படி பயங்கரவாதத்துக்கு நூற்றுக்கு மேற்பட்ட வரைவிலக்கணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஒருவர் பயங்கரவாதி எனப்படுவார்.
பயங்கரவாதத்தைப் பல வகையான அரசியல் இயக்கங்கள் தமது நோக்கங்களை அடைவதற்காகப் பயன்படுத்துகின்றன. இவற்றுள் இடதுசாரி, வதுசாரி இயக்கங்கள், மதக் குழுக்கள், புரட்சியாளர்கள், ஆளும் அரசுகள் போன்ற பலவும் அடங்கும். அரசு அல்லாத குழுக்கள் பரவலான ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பது போர்ச் சட்டங்களைப் பயன்படுத்துவதில் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.