பண்டைய எகிப்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பண்டை எகிப்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பண்டை எகிப்திய நாகரிகத்தின் முக்கிய குறியீடாகத் திகழ்வது பிரமிட்டுக்களாகும்.

பண்டைய எகிப்து வடக்கு ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில், நைல் ஆற்றின் கீழ் பகுதிகளில் செறிந்து அமைந்திருந்த ஒரு பழங்கால நாகரிகம் ஆகும். இது இன்றைய எகிப்து நாட்டுள் அடங்குகிறது. இந் நாகரிகம் கீழ் எகிப்தும், மேல் எகிப்தும் முதல் பாரோவின் கீழ் ஒன்றிணைந்த போது கிமு 3150 அளவில் தொடங்கியது எனலாம். இது மூன்று ஆயிரவாண்டுகளாக வளர்ச்சியடைந்தது. இதன் வரலாறு பல உறுதியான அரசுகளைக் கொண்ட காலப்பகுதிகளையும் இடையிடையே நிலையற்ற இடைக் காலங்களையும் கொண்டு அமைந்திருந்தது. புதிய அரசு எனப்பட்ட இறுதி அரசின் முடிவுடன் இந் நாகரிகம் மெதுவான ஆனால் உறுதியான இறங்குமுக நிலையை அடைந்தது. இக் காலத்தில் இப் பகுதி பல வெளிச் சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. கிமு 31 ஆம் ஆண்டில், தொடக்க ரோமப் பேரரசு எகிப்தைக் கைப்பற்றி அதனைப் பேரரசின் ஒரு மாகாணம் ஆக்கியபோது பாரோக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

வரலாறு[தொகு]

பண்டைய எகிப்தில் மனித வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கதுமான உயிர்நாடி நைல் நதி ஆகும். [1]

அரசும் பொருளாதாரமும்[தொகு]

முக்கிய நகரங்களைக் காட்டும் பண்டை எகிப்தின் நிலப்படம். (c. 3150 BC to 30 BC)

நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கின் நிலைமைக்கு ஏற்ப மாறிக்கொள்வதன் மூலம் எகிப்திய நாகரிகம் சிறப்புற்று விளங்கியது. கட்டுப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனம் வளமான இப் பகுதியில் மிகையான விளைவைக் கொடுத்தது. இது சமுதாய, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தூண்டியது. பயன்பாட்டுக்கான வளங்கள் அதிகமாக இருந்ததால், அரச நிவாகத்தின் சார்பில் இடம்பெற்ற கனிம அகழ்ந்தெடுப்புக்கள், தனியான எழுத்து முறையின் வளர்ச்சி, அமைப்புமுறையிலான ஒன்றிணைந்த கட்டுமானம், வேளாண்மைத் திட்டங்கள், சூழவுள்ள பகுதிகளுடனான வணிகம், எதிரிகளைத் தோற்கடித்து எகிப்தின் மேலாண்மையை நிலைநிறுத்திய படைகள் என்பவை சாத்தியமாயின. இத்தகைய நடவடிக்கைகளைத் தூண்டி ஒழுங்குபடுத்துவதற்காகச் செல்வாக்குள்ள அதிகாரிகள் குழுவும், சமயத் தலைவர்களும், நிர்வாகிகளும், தெய்வீகத் தன்மை கொண்டவராகக் கருதப்பட்ட பாரோக்களின் (மன்னர்) கீழ் இயங்கினர். இவர்கள் விரிவான சமய நம்பிக்கைகளின் துணையுடன் மக்களை ஒழுங்குபடுத்தி மக்கள் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினர்.

பாரோக்கள்[தொகு]

பண்டைய எகிப்தை ஆண்ட மன்னர்கள் பாரோ (Pharaoh) என்று அழைக்கப்பட்டனர். பண்டைக் காலத்திலே பாரோக்களுக்கு ஆட்சியதிகாரம் தெய்வத்திடம் இருந்து கொடுக்கப்பட்டதாக நம்பப்பட்டது. இவர்களுக்காகவே எகிப்தில் பாரிய பிரமிட்டுக்களும் நிர்மாணிக்கப்பட்டன. கிமு 31 ஆம் ஆண்டில், தொடக்க ரோமப் பேரரசு எகிப்தைக் கைப்பற்றி அதனைப் பேரரசின் ஒரு மாகாணம் ஆக்கியபோது பாரோக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாரோக்களின் இறப்பின் போது அவர்களின் சடலங்கள் படகில் நைல் நதியூடாக பிரமிட்டுக்களுக்கு கொண்டு செல்லப்படும், இவ்வாரு கொண்டு செல்லப்படும் ஊர்வலத்தை இறுதிப் பிரயாணம் என அழைப்பர்.

பண்பாடும் தொழில்நுட்பமும்[தொகு]

பண்டை எகிப்தியர்களின் சாதனைகளுள், கணித முறை, கற்கள் உடைப்பு, நில அளவை, கட்டுமான நுட்பங்கள், கண்ணாடித் தொழில்நுட்பம், மருத்துவ முறை, இலக்கியம், நீர்ப்பாசனம், வேளாண்மைத் தொழில்நுட்பம் என்பவை அடங்கும். வரலாற்றில் மிகமுந்திய அமைதி ஒப்பந்தமும் இங்கேயே மேற்கொள்ளப்பட்டது. பண்டை எகிப்து ஒரு நிலையான பாரம்பரியத்தை விட்டுச் சென்றது. பிற நாட்டவரும் அவர்களுடைய கட்டிடங்களைப் பார்த்துக் கட்டினர். அவர்களுடைய கலைப் பொருட்கள் உலகம் முழுவதும் உலாவந்தன. அவர்களுடைய பாரிய நினைவுச் சின்னங்கள் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளையும், எழுத்தாளர்களையும் பல நூற்றாண்டுகளாகக் கவர்ந்து வருகின்றன.

மருத்துவம்[தொகு]

பண்டைக் காலத்தில் எகிப்தியர்கள் மேம்பட்ட மருத்துவ அறிவைக் கொண்டிருந்தனர். அவர்களால் அக்கலத்திலேயே அறுவைச் சிகிச்சைகளை மேற்கொளவும் உடைந்த எலும்புகளைப் பொருத்தவும் முடிந்தது. அத்துடன் அவர்கள் பல மருந்துகளைப் பற்றியும் நன்றாக அறிந்திருந்தனர். பண்டைக் கால எகிப்தியர் தேன் மற்றும் தாய்ப்பால் போன்றவையும் மருந்துகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.

சமயக் கடவுள்கள்[தொகு]

பண்டைய எகிப்தியர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை வழிபட்டு வந்தனர். அக் கடவுள்களுள் முக்கியமான கடவுள் ரே (Re) எனும் சூரியக் கடவுள் ஆவார். எகிப்தியக் கடவுள்களின் அதிபதியாக அமுன் (amun) என்பவர் கருதப்பட்டார். அமுன் கடவுளுக்கும் ரே கடவுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கருதப்பட்டது. இதன் காரணமாக அமுன் அமுன்-ரே எனவும் அழைக்கப்பட்டார். காற்றின் கடவுள் சூ(Shu) என்பவர் ஆவார். வானத்தின் கடவுளாக நட்(Nut) எனும் பெண் தெய்வம் வணங்கப்பட்டார். நட் எனும் பெண் தெய்வத்தின் சகோதரனும் கணவனும் ஆன ஜெப் (Geb) என்பவர் பூமியின் கடவுளாக வணங்கப்பட்டார். இக் கடவுளின் சிரிப்பினாலேயே பூமியில் பூமி அதிர்வுகள் ஏற்படுவதாக பண்டைய எகிப்தியர்களால் நம்பப்பட்டது. இசிஸ் (Isis), எனும் கடவுள் மாயாயாலங்களின் கடவுளாகக் கருதப்பட்டார். ஹதொர் (Hathor) எனும் பெண் தெய்வம் மகிழ்ச்சிக்கான கடவுள் ஆவார். ஹதொர் இசைக்கும் நடனத்திற்கும்,ஆன தெய்வமாகவும் கருதப்பட்டார். மரணத்திற்கான கடவுளாக ஒசிரிஸ் (Osiris) எனும் கடவுள் கருதப்பட்டார். ஒசிரிஸ் தெய்வத்தின் தாய் வானத்தின் கடவுள் நட் என்பவராவார். மாயாயாலங்களின் கடவுளாகக் கருதப்பட்ட இசிஸ் (Isis) எனும் பெண் தெய்வமும் நட் தெய்வத்தின் மகள் ஆவார். அனைத்துக் கடவுள்களுடனும் சூரியக் கடவுளான ரே என்பவரோடு தொடர்பு இருந்தது.

பிரமிட்டுக்கள்[தொகு]

பாரிய அளவினால் ஆன பிரமிட்டுக்கள் பண்டைய எகிப்தின் ஆட்சியாளர்களான பாரோக்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டன. கிசாவின் பெரிய பிரமிட்டான கூபுவின் பிரமீட்டு 147 மீற்றர் உயரம் கொண்டது, 2.3 மில்லியன் கற்தொகுதிகள் அளவில் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கற்களினதும் எடை 2.5 தொன் அளவில் காணப்பட்டன.

எழுத்துக் கலை[தொகு]

பண்டைய எகிப்தின் எழுத்துருவங்கள்

பண்டைய எகிப்தின் எழுதும் முறை ஹெய்ரோகிலிபிக் (hieroglyphic) என அழைக்கப்பட்டது. இவ்வாறான எழுத்துக்கள் கோவில்களிலும் பிரமிட்டுக்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு 700க்கும் மேற்பட்ட எழுத்துருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு எழுத்துருவங்களும் ஒவ்வொரு பொருளையும் எடுத்தியம்புகின்றன, இவை பிக்டோகிராம் (pictogram) என அழைக்கப்படுகின்றன. பல பிக்டோகிராம்கள் சேர்ந்து ஒவ்வொரு ஒலிகளையும் எடுத்தியம்புகின்றன, ஒவ்வொரு ஒலிகளின் கூட்டங்களும் போனோகிராம் (phonograms)என அழைக்கப்படுகின்றன. இப் போனோகிராம்களே ஒவ்வொரு புதிய பற்பல சொற்களையும் உருவாக்க மூலாதாரமாய் அமைகின்றன.

  1. Shaw (2002) pp. 17, 67–69
"http://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைய_எகிப்து&oldid=1667913" இருந்து மீள்விக்கப்பட்டது