ந. சிவசண்முகமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடேசன் சிவசண்முகமூர்த்தி

ந. சிவசண்முகமூர்த்தி (1942-2012) இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கதாப்பிரசங்கியார் ஆவார். இவர் பல நாடுகளிலும் சென்று தனது கதாப்பிரசங்கங்களை நடாத்தியுள்ளார். கதாப்பிரசங்கம் மட்டுமன்றி பண்ணிசை, நாட்டார் பாடல்களிலும் இவர் ஈடுபாடு கொண்டவர். சுழிபுரத்தின் புகழ்பூத்த சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் பழைய மாணவரும் முன்னாள் ஆசிரியரும் ஆவார்.

சிறு பிராயம்[தொகு]

சுழிபுரம் மேற்குப் பகுதியில் நடேசன், வள்ளியம்மை தம்பதியினரின் ஆறாவது பிள்ளையாக 1942 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி பிறந்தார். இவரது தந்தை ஒரு மலாயன் பென்சனியர். இவருக்கு மூன்று ஆண் சகோதரர்களும் இரண்டு பெண் சகோதரிகளும் உளார்.

ஆரம்பக் கல்வி[தொகு]

மூன்று வயதில் இவரது தந்தையிடம் தனது அடிப்படைக் கல்வியைப் பெற்றார். 1947 ஆம் ஆண்டு தொடக்கம் 1951 ஆம் ஆண்டு வரை சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியா சாலையில் கல்வி கற்றார். கரவெட்டி கதிர்காம உபாத்தியாயர், கரவெட்டி கந்தவனம் உபாத்தியாயர், மூளாய் மயில்வாகனம் உபாத்தியாயர் மற்றும் சுழிபுரம் ஐயா உபாத்தியாயர் இவருக்கு இங்கு கல்வியைப் போதித்தனர். இவர் படித்த காலங்களிலே இப்பாடசாலையே மிகவும் புகழ்பூத்த ஆரம்பப் பாடசாலை ஆகும். இங்கு சிவசண்முகமூர்த்திக்கு பஜனை, திருமுறை ஓதல், இசைநாடகங்கள், பேச்சுப்போட்டிகள் என பல்வேறு துறைகளைப்பற்றிய அனுபவ அறிவும், ஒழுக்கமும், கல்வியும் முறையாகப் போதிக்கப்பட்டது. இந்நிலையின் திருவாவடுதுறை ஆதீனத்தில் சமய சம்பந்தமான கல்வியிலும் பண்ணிசை ஓதுவதற்கும் சுழிபுரம் சிவலோகர் சேதுகாவலர் எனும் சைவப் புரவலர் விருப்பம் தெரிவித்தார். எனினும் சிறு வயதிலேயே பிள்ளையைப் பிரிந்து வாழப்போகிறோமே எனும் தயக்கத்தால் இவரது தந்தை மறுப்புத் தெரிவித்தார். தனது சொந்த ஊரிலேயே மகனை உயர்கல்வியை மேற்கொள்ள வைப்பதே இவரது தந்தையாரான நடேசனது நோக்கம் ஆகும்.

உசாத்துணை நூல்கள்[தொகு]

  • கதாப்பிரசங்கக் கலையும் நானும் - ந. சிவசண்முகமூர்த்தியின் மூன்று மாத நினைவினையொட்டி வெளியிடப்பட்ட அவரது பேட்டியைக் கொண்ட நினைவு நூல்

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._சிவசண்முகமூர்த்தி&oldid=2718432" இலிருந்து மீள்விக்கப்பட்டது