நூல் வகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூல் என்னும் சொல்லால் தொல்காப்பியமும், நன்னூலும் இலக்கண நூல்களைக் குறிப்பிடுகின்றன.

நூல் பற்றிய விளக்கம்[தொகு]

ஆடை போல் நெய்யப்படுவது[தொகு]
நூல் என்பது இழைநூலால் நெய்யப்படும் ஆடை போல், சொல்லால் நூற்கப்பட்ட செய்யுளால் புலவன் வாய் பாடும் மொழியறிவு.
நூலாடையாகிய உவமை புத்தகத்தைக் குறிக்கும் நூல் உவமேயம்
பஞ்சு மொழியின் சொற்கள்
இழைநூல் பனுவல் என்னும் செய்யுள்
சேயிழை என்னும் பாவு ஓட்டுபவன் செஞ்சொல் புலவன்
நெய்பவன் கை புலவனின் வாய்
பாவின் குறுக்கே ஓடும் கதிர் நூல் புலவனின் மதியாகிய அறிவு
  • நிரலோட்டத்தில் காணப்படும் செய்திகளைத் தரும் நூற்பா [1]
கோணலை நிமிர்த்திச் செய்த நிலைக்கால் போல் வாழ்க்கையை நிமிர்த்தித் தாங்குவது[தொகு]
நூலானது கோணல் மரத்தை நேராக்கிச் செய்த நிலைக்கால் போல மனத்திலுள்ள கோணலை நிமிர்த்தி வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும்.[2]

மொழியியல் பாங்கு[தொகு]

தொல்காப்பியம் நூலை மொழியியல் பாங்கில் பார்க்கிறது.

கருத்துப் பதிவுகள் அனைத்தையும் தொல்காப்பியம் 'செய்யுள்' [3][4] என்று குறிப்பிடுகிறது. நூல் செய்யுளால் அமையும் என்கிறது.[5] 7 வகையாக உள்ள செய்யுளில் [6] நூல் என்பது மொழியிலக்கணம்.
  • நூல் அமைதி
நூலில் சொல்லப்படும் இலக்கணம் தொடக்கம் முதல் முடிவு வரை காறுபாடு இல்லாமல் அமைந்திருக்க வேண்டும். சில இலக்கணங்களைத் தொகுத்துக் காட்ட வேண்டும். சிலவற்றைத் தெளிவுக்காகப் பிரித்துக் காட்ட வேண்டும். பொருளை உரையில் விரிவுபடுத்திக் கொள்ளும் வகையில் சுருக்கமாக இருத்தல் வேண்டும். எனினும் இலக்கணத்தை நுட்பமாக வெளிப்படுத்துதல் வேண்டும்.[7]
  • நூலின் உள்ளடக்கம்
    • இலக்கண நூலில் நான்கு வகை உறுப்புகள் இருக்கும்.[8]
    • ஒரு கருத்தைச் சொல்லும் சூத்திரம்,[9] ஓத்து [10], படலம் [11], பிண்டம் [12][13] என்பன அவை.

வரலாற்றுப் பார்வை[தொகு]

தொல்காப்பியமும், நன்னூலும் நூலை நூல் தோன்றிய வரலாற்றுக் கோணத்திலும் அணுகுகின்றன. நன்னூல் அத்துடன் அதில் நேரும் நிறை, குறை, உத்தி முதலான கண்ணோட்டத்திலும் அணுகுகிறது.

  • தொல்காப்பியம் நூலை முதல்நூல், வழிநூல் என்னும் இரண்டு வகையாகப் பார்க்கிறது.[14]
  • நன்னூல் முதல்நூல், வழிநூல், சார்புநூல் என்னும் மூன்று வகையில் ஒன்றாக நூல் விளங்கும் என்கிறது.
  • பிற்காலத்தில் மொழிபெயர்ப்பு நூல்களும் தோன்றி வளர்ந்துள்ளன.

நூல் அமையவேண்டிய பாங்கை நன்னூல் விளக்குகிறது.

நூலானது சிறப்புப் பாயிரம், பொதுப்பாயிரம் ஆகிய இரண்டு பாயிரங்களையோ, அவற்றுள் ஒன்றையோ கொண்டிருக்கும். நூலுக்குரிய ஏழு கோட்பாடுகளோடு இயங்கும். 10 குற்றங்களை நீக்கிப் 10 அழகமைதிகளும் கொண்டு இயங்கும். 32 வகையான உத்திகளைக் கையாளும். சூத்திரம், ஓத்து, படலம் ஆகியவற்றோடு காண்டிகை உரை, விருத்தி உரை ஆகிய விளக்கங்களையும் கொண்டு விளங்கும்.[15]

அடிக்குறிப்பு[தொகு]

  1. பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
    செஞ்சொல் புலவனே சேயிழையா-எஞ்சாத
    கையே வாயாகக் கதிரே மதியாக
    மையிலா நூல் முடியும் ஆறு (நன்னூல் 24)
  2. உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை
    புரத்தின் வளம் முருக்கிப் பொல்லா-மரத்தின்
    கனக்கோட்டம் தீர்க்கும்நூல் அஃதேபோல் மாந்தர்
    மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு (நன்னூல் 25)
  3. செய்யப்பட்டுள்ளது,
  4. கருத்துப்பயிர் வளரும் நிலம்
  5. பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே
    அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும்
    வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
    நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
    யாப்பின் வழியது என்மனார் புலவர். (தொல்காப்பியம், செய்யுளியல் 75)
  6. பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம்
  7. அவற்றுள்,
    நூல் எனப்படுவது நுவலும் காலை
    முதலும் முடிவும் மாறுகோள் இன்றி
    தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
    உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து
    நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே. (தொல்காப்பியம், செய்யுளியல் 159)
  8. அதுவேதானும் ஒரு நால் வகைத்தே. (தொல்காப்பியம், செய்யுளியல், 160)
  9. கருத்தைச் சூழ்ந்து சொல்லும் பகுதி
  10. ஒத்த ஓரினச் செய்திகளை ஒருமிக்கச் சொல்வது
  11. கொடி படர்வது போல அங்குமிங்கும் படர்ந்து செய்திகளைக் கூறுவது
  12. சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்று உறுப்பும் அடங்கியது
  13. அவற்றுள் ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்
    இன மொழி கிளந்த ஓத்தினானும்
    பொது மொழி கிளந்த படலத்தானும்
    மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும் என்று
    ஆங்கு அனை மரபின் இயலும் என்ப. (தொல்காப்பியம், செய்யுளியல், 161)
  14. மரபுநிலை திரியா மாட்சிய ஆகி, உரை படு நூல்தாம் இரு வகை இயல- முதலும் வழியும் என நுதலிய நெறியின. (தொல்காப்பியம் 3-639)
  15. நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு
    பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்
    நால்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி
    ஐ இரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு
    எண் நான்கு உத்தியின் ஓத்துப் படலம்
    என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை
    விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே (நன்னூல் 4)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூல்_வகை&oldid=2745864" இலிருந்து மீள்விக்கப்பட்டது