தமிழ்த்தாய் வாழ்த்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நீராருங் கடலுடுத்த இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Tamil Thaai Vaalthu

ஆங்கிலம்: Invocation to Mother Tamil
தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்நாடு மாநிலம் song
இயற்றியவர்பெ. சுந்தரம் பிள்ளை
இசைம. சு. விசுவநாதன்
சேர்க்கப்பட்டது1970

தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது. இந்திய தேசிய கீதம் இறுதியில் பாடப்படும்.

தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பவராவார். இவர் 1891-இல் எழுதி வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி இப்பாடலாகும்.[1]

வரலாறு

தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தனாரின் நீராரும் கடலுடுத்த பாடலைப் பாட வேண்டும் என்ற கோரிக்கை 1913-ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக 1914 முதல் கரந்தைத் தமிழ் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் பாடிவந்தனர். அதேபோலப் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தாய்சங்கமாக ஏற்று ஆங்காங்கே உருவாக்கப்பட்ட சங்கங்களின் விழாக்களிலும் தொடக்கப் பாடலாக இப்பாடல் பாடப்பட்டு வந்தது. தமிழ்நாடு அரசு இப்பாடலைத் தமிழக அரசின் பாடலாக ஏற்குமாறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

1967 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சரான கா. ந. அண்ணாதுரை தமிழ் மொழியின் வளர்ச்சிப்போக்கை முன்னெடுக்கும் விதமாகத் தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி விழாக்களில் பாட ஏதுவாகத் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தேர்ந்தெடுக்க ஆலோசனை செய்தார். ஆலோசனையின் முடிவில் மனோன்மணீயம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த பாடலும், கரந்தை கவியரசு இயற்றிய வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே என்ற பாடலும் பரிந்துரைக்கப்பட்டன. நீராரும் கடலுடுத்த பாடலில் வரும் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் வரிகளில் வரும் திராவிட என்ற சொல் அண்ணாதுரையை ஈர்த்தது.[2] எனவே அப்பாடலையே அரசுபூர்வமாகத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவிருந்த நிலையில் 1969-இல் அண்ணா இறந்தார்.

இதன்பிறகு மு. கருணாநிதி முதலமைச்சராகத் பொறுப்பேற்றதையடுத்து, ஆரியம் போலத் தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்று இப்பாடலை 1970 மார்ச்சு 11 அன்று தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.[3] 2021-ஆம் ஆண்டு திசம்பர் 17-தேதி அன்று மு. க. ஸ்டாலின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழக அரசு தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாகத் தமிழ்த்தாய் வாழ்த்தை அறிவித்தது. [4]

2021 திசம்பரில் வெளியிட்ட தமிழ்நாடு அரசாணையில் நீராரும் கடலுடுத்த பாடலைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கல்வி நிலையங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் விழா நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் கட்டாயம் பாடவேண்டும். பாடலைப் பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் (மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு) இப்பாடலை 55 விநாடிகளில் முல்லைப்பாணி எனும் பண்ணில் (மோகனராகம்) மூன்றன் நடையில் (திசுரம்) பாடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.[5]

பாடல் வரிகள்

இப்பாடலின் பொருள், நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

இப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமேயாகும். அவர் எழுதிய மெய்ப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழிசைக் குறிப்பு :- இப்பாடல் முல்லைப்பாணி எனும் பண்ணில் அமைந்துள்ளது. மூன்றன் நடை தாளத்தில் அமைந்துள்ளது. முல்லைப்பாணி, முல்லத்தீம்பாணி, முல்லையந்தீங்குழல் (முல்லை அம் தீம் குழல்), சிறுமுல்லை, சாதாரி, தாரப்பண், காந்தாரப் பண், ஆசான், ஆசான் திறம் என பல்வேறு பெயர்கள் கொண்டுள்ளது. தமிழிசையின் முதல் பெரும்பண் செம்பாலை எனும் முல்லைப்பண் (அரிகாம்போதி / MixoLydian). இந்த முல்லைப்பண்ணின் திறப்பண் தான் சிறுமுல்லை (மோகனம் / Major Pentatonic). எனவே இது தமிழிசையின் முதல் சிறுபண். முல்லைப்பண், சிறுமுல்லை இரண்டு பண்களையும் தமிழர்கள் மிக உயர்வான இடத்தில் வைத்துக் கொண்டாடினர் எனும் உண்மையை நாம் தமிழ் இலக்கியங்களில் காணலாம்[6]. உலகெங்கிலும் பல நாகரிகங்களிலும், இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பிருந்து இன்றுவரை இந்த சிறுமுல்லைப்பண் மிகவும் புகழ்பெற்று பயன்பாட்டில் உள்ளது[7][8]. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இப்பண்ணைத் தெரிவு செய்தது பாராட்டுக்குரிய செயல். தமிழிசைப் பண்கள் குறித்து இந்தப் பக்கத்தில் பழந்தமிழ் இசை#பழந்தமிழிசையில் பண்கள் காணலாம்.

பாடப்பட்ட சில சிறப்பான தருணங்கள்

மேற்கோள்கள்

  1. "பாயிரம் -தமிழ்த் தெய்வ வணக்கம் - தமிழ் இணையக் கல்விக்கழகம்".
  2. "தமிழ்த்தாய் வாழ்த்து: ஒரு நூற்றாண்டு வரலாறு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.
  3. "Memo No.3584/70-4" இம் மூலத்தில் இருந்து 2018-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180125133904/https://tamil.oneindia.com/img/bbc/2018/01/x_99739152_tamilanthem.jpg.pagespeed.ic.Oeggf9ohSy.jpg. 
  4. "தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு -இந்து தமிழ் திசை".
  5. "தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடலாக அறிவிப்பு: பாடும்போது எழுந்து நிற்க அரசு உத்தரவு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-12-19.
  6. "முல்லைப்பாணி என்கிற மோகன ராகம் - திரு.நா.மம்மது".
  7. "Is the Pentatonic Universal? A few reflections on Pentatonism".
  8. "Five Notes To Rule Them All: The Power of Pentatonic Scale".
  9. "வாடிகன் நகரில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து... தேவசகாயம் பிள்ளைக்கு இன்று புனிதர் பட்டம்". News18 Tamil. 2022-05-15. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்த்தாய்_வாழ்த்து&oldid=3918440" இலிருந்து மீள்விக்கப்பட்டது