நில உச்சவரம்புச் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நில உச்சவரம்பு (Ceiling on Land Holding) என்பது தனி நபர்கள் வைத்திருக்கும் நில உடைமைக்கு உச்சவரம்பை நிர்ணயித்து அதற்கு மேற்பட்ட உபரி நிலங்களை அரசு கையகப் படுத்தும் முறை ஏதுவாக 1958ல் இந்திய அரசால் கொண்டு வரப்பெற்ற சட்டம் ஆகும். வேளாண்மையைச் சீர்திருத்தும் நோக்கத்துடன் குடிவாரச் சட்டங்கள் தவிர வேறுபல நடவடிக்கைகளும் இந்திய அரசால் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று நில உடைமைகளுக்கு உச்சவரம்பை நிர்ணயிப்பதாகும். ஒரு குடும்பம் அல்லது தனிநபருக்குரிய உயர்ந்த பட்ச நிலங்கள் என தீர்மானித்து அதற்கு மேல் உள்ள நிலத்தை அதற்குறிய இழப்பீட்டுத் தொகையை நில உடமையாளருக்கு வழங்கி கையகப்படுத்தும் நிலங்களை உபரி என வகை படுத்திக்கொள்ளும் நடைமுறைக்கு உரியவாறு ஏற்படுத்தப்பட்டது நில உச்சவரம்பு சட்டம் என்கிறோம். இது இரண்டு பிரிவுகளாகும். 1. தற்போதுள்ள உடைமைகள் மீது உச்சவரம்பு நிர்ணயிப்பது. 2. எதிர்காலத்தில் வாங்கப்படும் நிலங்கள் மீது உச்சவரம்பு நிர்ணயிப்பது.

நில உச்சவரம்புச் சட்டத்தின் இயல்புகள்[தொகு]

இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் மாநில அரசுகள் நில உச்சவரம்புச் சட்டங்களை இயற்றின. ஆனால் நில உச்சவரம்பின் அளவு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டது. 1972-ல் நடந்த மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தில் நாடுமுழுவதும் ஒரே மாதிரியான நில உச்சவரம்பு அளவே கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் நில உச்சவரம்புச் சட்டங்கள் கீழ்வரும் இயல்புகளைக் கொண்டுள்ளன.

  • 1972-ஆம் ஆண்டிற்கு முன் ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபரும் குறிப்பிட்ட அளவு நிலம் வைத்துக் கொள்ள நில உச்சவரம்பு குடும்பம் முழுவதற்குமே பொருந்துவதாக உள்ளது. குடும்பம் என்பது கணவன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் கொண்டது. ஒரு குடும்பத்தில் ஐந்து நபர்களுக்கு அதிகமான நபருக்கு அதிகப்படியான நிலம் அனுமதிக்கப்படும்.
  • 1972-க்கு முன் உயர்ந்த பட்ச நில அளவும் அதிகமாக இருந்தது. சான்றாக ஆந்திரப்பிரதேசத்தில் 25 முதல் 200 ஏக்கராகவும், தமிழ்நாட்டில் 12 முதல் 60 ஏக்கராகவும் இருந்தது. இது 1972-க்குப் பின் சீரமைக்கப்பட்டது. இருபோக சாகுபடிக்கு நீர்ப்பாசன வசதியைக் கொண்ட பகுதிகளில் ஒரு குடும்பத்திற்கான உச்சவரம்பு 20 ஏக்கராகவும்; தனியார் நீர்ப்பாசன வசதியைக் கொண்ட நிலங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு உச்சவரம்பு 40 ஏக்கராகவும்; பிற நிலங்களுக்கு 60 ஏக்கராகவும் உள்ளது.
  • 1972-க்கு முன் நிலஉச்ச வரம்பிலிருந்து பலவகையான சிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதனால் நில உச்சவரம்புச் சட்டங்கள் தோல்வியுற்றன. 1972-க்குப் பின் இயற்றப்பட்ட சட்டங்களில் விலக்கு அளிக்கப்பட்ட நிலங்களில் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டது.

நில உச்சவரம்பிற்கு ஆதரவான கருத்துகள்[தொகு]

  • நிலம் ஒரு பற்றாக்குறைப் பொருளாகும். இது ஒரு சிலரிடத்தில் மட்டும் இருப்பது சமூகத்தில் அநீதியை உருவாக்கும். எனவே நில உச்சவரம்புச் சட்டம் சமதர்ம சமுதாயம் ஏற்பட வழிவகுக்கும்.
  • மக்கள் தொகைப் பிரச்சினையால் அதிகரித்துவரும் வேளாண்மை செய்வோரின் நிலப்பசியைப் போக்கி அவர்கள் சொந்தமாகப் பயிர் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
  • நிலம் ஒரு சிலரிடம் மட்டுமே இருப்பதனால் கிராம வருமானத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். நில உச்சவரம்பில் நில உரிமையாளர்கள் அதிகரிப்பதால் நிலவருமானத்தைப் பலருக்குப் பகிர்ந்தளிக்க முடியும்
  • குத்தகையாளர்களும், தொழிலாளர்களும் நில உச்சவரம்பின் மூலம் நில உரிமையாளர்களாக மாறும் போது ஊக்கம் ஏற்பட்டு வேளாண்மை உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.
  • நில உச்சவரம்பு பெரு நிலக்கிழார்களை ஒழித்து சிறு நில உடைமையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால் நிலத்தொகுப்புப் பணியை எளிதாக்கி கூட்டுறவு பண்ணை முறையைச் செயல்படுத்த வழிவகுக்கும்

நில உச்சவரம்பிற்கு எதிரான கருத்துகள்[தொகு]

நில உரிமை அதிகப்படியான நிலமற்றோருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதனால் நில அளவு சிறியதாகிவிடும். சிறிய பண்னைகளில் பெரிய எந்திரங்களைப் பயன்படுத்த முடியாது அதனால் உற்பத்தி குறையும். மேலும் நிலத்தைப் பகிர்ந்து கொடுப்பதால் மட்டும் நிலமற்றோரின் வாழ்வு உயராது. அதில் பயிர் செய்வதற்கான வசதி அவர்களுக்கு இருக்க வேண்டும். உபரியான நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளும் போது அரசு இழப்புத்தொகை கொடுக்கவேண்டியுள்ளது. இது அரசுக்குச் சுமையாகும். நில உச்சவரன பகிர்வு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பது கடினம்.

பயன்கள்[தொகு]

நில உச்சவரம்பினைக் கொண்டு வந்ததன் காரணமாக நாடு முழுதும் பல இலட்சம் ஏக்கர்கள் நிலங்கள் உபரியாகக் கிடைத்தன. அவை நிலமற்ற விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. 1983 மார்ச் முடிய 45 இலட்சம் ஹெக்டேர் நிலம் உபரி என்று அறிவிக்கப்பட்டு அதில் 29 இலட்சம் ஹெக்டேர் நிலம் பெறப்பட்டு 19.8 இலட்சம் ஹெக்டேர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

உச்சவரம்புச் சட்டத்தின் தோல்வி[தொகு]

நில உச்சவரம்புச் சட்டத்தின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் இச்சட்டங்களை அமுலாக்குவதில் ஏற்பட்ட காலதாமதமே ஆகும். மேலும் எண்ணற்ற விதிவிலக்குகள், பொய்மாற்றுகள், நில உரிமை பற்றிய முழு விவரங்கள் இல்லாமை, பாகப் பிரிவினைகள், தாமதமான செயல்பாடு, அதிகாரிகளின் திறமையின்மை, ஊழல் போன்ற காரணங்களால் நில உச்சவரம்புச் சட்டம் இந்தியாவில் தோல்வியடைந்தது.

உசாத்துணை[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நில_உச்சவரம்புச்_சட்டம்&oldid=3370342" இலிருந்து மீள்விக்கப்பட்டது