நாயாறு கடலடித் தாக்குதல், மார்ச் 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முல்லைத்தீவு, நாயாறு கடற்பரப்பில் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சனிக்கிழமை 22 ஆம் திகதியன்று அதிகாலை 2 மணியளவில் இலங்கைக் கடற்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் கரும்புலியினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடலடித் தாக்குதல் கையாளப்பட்டது. அதிகாலை 2:10 மணியளவில் இலங்கைக் கடற்படையினரின் பி 438 என்ற தொடர் இலக்கத்தினைக் கொண்ட அதிவேக டோறா பீரங்கிப்படகு 3 கடற்கரும்புலிகளான லெப்டினன்ட் கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா ஆகியோரின் கரும்புலித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. இத்தாக்குதலில் இப்பீரங்கிப் படகில் சென்ற 14 இலங்கைக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நடந்த இச்சமர் அதிகாலை 2:45 மணிவரை நடைபெற்றது. மூழ்கடிக்கப்பட்ட படகில் இருந்த அதிகாரி மற்றும் 6 கடற்படையினர் தப்பியுள்ளனர் எனவும் 10 கடற்படையினர் காணாமல் போயுள்ளனர் எனவும் படகின் கீழ்ப்பகுதியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு அப்பகுதி பிரிந்து மூழ்கியதாகவும் தப்பிய இலங்கைக் கடற்படையினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட கடலடித் தாக்குதல் வெடிகருவியினால் அத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என இலங்கைக் கடற்படையினர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.