நந்தினி சேவியர்
தே. சேவியர் என்ற இயற்பெயர் கொண்ட நந்தினி சேவியர் (பி. மே 25, 1949) ஈழத்துப் படைப்பாளிகளில் ஒருவர். 1967 இல் இருந்து எழுதிவருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, விமர்சனக்கட்டுரை ஆகிய துறைகளில் தமது ஆளுமையைச் செலுத்தி வருகிறார்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கை வரலாறு
சேவியர் யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருகோணமலையில் வசிக்கிறார். கலை இலக்கியத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.
பாடசாலைக்கல்வியை மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை,சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திருஇருதயக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். பின்னர் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சீனச்சார்பு) வாலிப சங்க இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர். இலக்கியச் செயற்பாடுகளுடன் சமூகச்செயற்பாடுகளிலும் முன்நின்று உழைத்தவர்.
[தொகு] இலக்கியப் பங்களிப்பு
சிறுகதைத்துறையிலேயே நன்கு அறியப்பட்டவர். நந்தினி சேவியர் என்ற பெயரிலேயே அதிகமும் எழுதிவருகிறார். இவருடைய பத்தி எழுத்துக்கள் மற்றும் கட்டுரைகள் சில வ.தேவசகாயம், தாவீது கிறிஸ்ரோ ஆகிய பெயர்களிலும் வெளிவந்துள்ளன.
நாவல்கள் குறுநாவல்கள் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் ஆகியவற்றை எழுதியிருந்தாலும் அவை இன்னமும் நூல்வடிவம் பெறவில்லை. இவரின் சிறுகதைகள் மாத்திரமே இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
இவருடைய படைப்புக்கள் தாயகம், மல்லிகை, வாகை, அலை, புதுசு, இதயம், ஒளி,சிந்தாமணி, வீரகேசரி, தொழிலாளி, சுதந்திரன், ஈழமுரசு, ஈழநாடு ஆகிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.
இலங்கை வடமாகாண கல்வி அமைச்சு கலை இலக்கியச் செயற்பாடுகளுக்கு இவர் செய்த பங்களிப்பு முக்கியமானது.
மேகங்கள், கடற்கரையில் தென்னை மரங்கள் நிற்கின்றன ஆகிய நாவல்களையும் ஒரு வயதுபோன மனிதரின் வாரிசுகள் என்ற குறுநாவலையும் எழுதியுள்ளார். ஆனால் அவை இன்னமும் பிரசுர வடிவம் பெறவில்லை.
[தொகு] பாடநூலில் பங்களிப்பு
2012 ஆம் ஆண்டிலிருந்து 'தரம் 10 தமிழ்மொழியும் இலக்கியமும்' என்ற பாடநூலில் "நந்தினிசேவியர் சிறுகதைகள்" என்ற முருகையனின் கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது.
[தொகு] ஆய்வரங்கு
தமிழ்நாட்டில் செப்ரெம்பர் 2000 இல் காலச்சுவடும் சரிநிகரும் இணைந்து நடாத்திய தமிழினி 2000 மாநாட்டில் கலந்து கொண்டு 'இருபதாம் நூற்றாண்டில் ஈழத்துத் தமிழ் மார்க்சிய இலக்கியம்' என்ற கட்டுரையை சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார்.
[தொகு] வெளிவந்த நூல்கள்
- அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் (சிறுதைத்தொகுப்பு)பதிப்பு 1993, வெளியீடு - தேசிய கலை இலக்கியப் பேரவை
- நெல்லிமரப் பள்ளிக்கூடம் (சிறுகதைத் தொகுப்பு) பதிப்பு 2011, வெளியீடு கொடகே.
[தொகு] நேர்காணல்கள்
- 'ஓடும்போது இருக்கும் சமத்துவம் உணவு பரிமாறிக் கொள்வதில் இல்லை' தலித் இதழ், நேர்கண்டவர்- ரவிக்குமார்.
- 'ரோம் நகரம் எரிய பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனாக எம்மால் இருக்கமுடியாது'. சுட்டும்விழி இதழ் - 2004
- 'எழுத்தாளர் நந்தினி சேவியருடன்' கலைமுகம் இதழ் - 15
- 'நந்தினி சேவியர் ஓர் இடைமறிப்பு' வி.கௌரிபாலன் (பிரசுரமாகாத நேர்காணல் _ஆதாரம் :-ஞானம், இதழ் - 114)
[தொகு] முக்கியமான கட்டுரைகள்
[தொகு] நந்தினி சேவியர் பற்றியது
- "பேச்சுக்கும் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே வித்தியாசமில்லாதவரான நந்தினி சேவியர்", கலாநிதி செ.யோகராசா, மல்லிகை அக்டோபர் 2007
- அட்டைப்பட அதிதி, செல்லத்துரை சுதர்சன் எழுதியது, ஞானம் நவம்பர் 2009 இதழ் 114.
- 'நந்தினி சேவியர் கதைகள் கருத்தியல்களின் பதிவுகள்' -முஹ்சீன்
- (உரை)எம்.ஏ நுஹ்மான் - 'அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' சிறுகதைத்தொகுப்புப் பற்றி 1993 டிசம்பர் இலங்கை வானொலி தேசிய சேவை கலைக்கோலம் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை
[தொகு] நந்தினி சேவியர் எழுதிய கட்டுரைகள் சில
- கடந்த நூற்றாண்டில் ஈழத்து மார்க்சிய இலக்கியம் (2000)
- ஈழத்தின் இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள் (தினக்குரல் 2006)
- புதுமைப்பித்தனை மீறிய கதை சொல்லும் இலாவகம் (தினக்குரல் 12.11.2006)
- தெரிந்தும் தெரியாதவையும் (தினகரன் 2006)
- எழுத்தாயுத வீரர்களும் திடசங்கற்பமும் (தினகரன் 2006)
- இலக்கியச் சஞ்சிகைகளும் சர்ச்சைகளும் (வீரகேசரி 2006)
[தொகு] பெற்ற கெளரவங்கள்
- ஈழநாடு பத்திரிகையின் 10வது ஆண்டு நிறைவையொட்டி அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட நாவல் போட்டியில் ‘மேகங்கள்’ என்ற நாவல் இரண்டாம் பரிசு பெற்றது.
- பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் 50 வது ஆண்டு நிறைவையொட்டி நடத்திய நாவல் போட்டியில் ‘ஒரு வயதுபோன மனிதரின் வாரிசுகள்’ என்ற குறுநாவல் தங்கப் பதக்கத்தை முதற்பரிசாகப் பெற்றது.
- 1993 இல் வெளிவந்த சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான முதற்பரிசை விபவி சுதந்திர இலக்கிய அமைப்பு 'அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' என்ற நூலுக்கு வழங்கியது.
- உள்ளுராட்சித் திணைக்களம் நடத்திய ‘தமிழின்பக் கண்காட்சி’ யில் 'அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' நூலுக்கு முதற்பரிசு வழங்கியது.
- இவரது இலக்கியப் பங்களிப்புக்காக 2011 இல் கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது கிடைத்தது.