தொல்காப்பியம் புணரியல் செய்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தொல்காப்பியம் - புணரியல் செய்திகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரமும் 9 இயல்களாக உள்ளது. முதலாவது எழுத்ததிகாரத்தில் நான்காவது இயலாக அமைந்துள்ளது, புணரியல். இந்த இயலில் 40 நூற்பாக்கள் உள்ளன.

எழுத்துகள் 33.
அவற்றில் மொழியின் முதலெழுத்தாக நிற்கும் எழுத்துகள் 22.
மொழியின் இறுதியில் நிற்கும் எழுத்துகள் 24.
24 ஈற்றோடு 22 முதல் சேரும்போது என்ன ஆகும் என்பதைக் கூறுவது புணரியல்

புணர்ச்சியின் பாகுபாடுகள்[தொகு]

எழுத்து நோக்கு

உயிர் முன் உயிர்
உயிர் முன் மெய்
மெய் முன் உயிர்
மெய் முன் மெய்

மொழி நோக்கு

பெயரொடு பெயர்
பெயரொடு தொழில்
தொழிலொடு பெயர்
தொழிலொடு தொழில்

திணை நோக்கு

நிலைமொழி உயர்திணை
நிலைமொழி அஃறிணை

பொருள் நோக்கு

வேற்றுமைப் பொருள்
வேற்றுமை அல்லாத அல்வழிப்பொருள்

புணர்ச்சியில் நிகழ்வன[தொகு]

இயல்பு
திரிபு

மெய்பிறிதாதல்
மிகுதல்
குன்றல்

புணர்ச்சியில் தோன்றும் சாரியை[தொகு]

அக்கு, அம், அற்று, அன், ஆன், இக்கு, இன், ஒன், வற்று, பிற

எழுத்துச் சாரியை[தொகு]

எழுத்துகள் இவ்வாறு சாரியை பெற்று வரும்.

  • காரம்
மகாரம் (ம), ஆகாரம் (ஆ)
  • கரம்
அகரம் (அ),
  • கான்
மஃகான் (ம), ஐகான் (ஐ), ஔகான் (ஔ)

உடம்படுமெய்[தொகு]

தொல்காப்பியர் உடம்படுமெய் ஒலிகள் குறித்துப் புணரியலில் சுருக்கமாகப் பேசியிருக்கிறார்.

   “எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே

   உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்” (புணரியல், நூ. 38)

(மொழி - சொல்; உருவு - வடிவு; கொளல் - சேர்த்துக் கொள்ளுதல்; வரையார் - நீக்கார்.) ‘எல்லா உயிர் ஈற்றுச் சொற்களுக்கும் முன்னர், உயிரை முதலாகக் கொண்ட சொற்கள் வரும்பொழுது, அவ்விரு சொற்களுக்கும் இடையே உடம்படுமெய்யினது வடிவைச் சேர்த்துக் கொள்ளுதலை நீக்கார்’ என்பது இந்நூற்பாவின் பொருளாகும். இந்நூற்பாவில் தொல்காப்பியர், நிலைமொழியின் இறுதி உயிர்க்கும் வருமொழியின் முதல் உயிர்க்கும் இடையே உடம்படுமெய் வரும் என்று பொதுப்படக் கூறியுள்ளாரே தவிர, எந்தெந்த மெய்கள் உடம்படுமெய்யாக வரும் என்று கூறவில்லை. இருப்பினும் இந்நூற்பாவிற்கு உரை வரைந்த இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தொல்காப்பியர் உடம்படுமெய் என்று குறிப்பிடுவது யகரமும், வகரமும் ஆகும் எனக் கொள்கின்றனர்.

அவ்வுரையாசிரியர்கள் இருவரும், இந்நூற்பாவில் தொல்காப்பியர் வரையார் (நீக்கார்) என்று கூறியிருப்பது கொண்டு, உடம்படுமெய் இரண்டு உயிர்களுக்கு இடையே கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்பதில்லை எனவும், கிளி அரிது, மூங்கா இல்லை (மூங்கா- கீரி) என்றாற் போல அமைந்து வரும் சொற்றொடர்களில் இரண்டு உயிர்களுக்கு இடையில் உடம்படுமெய் இல்லாமலும் வரலாம் எனவும் கருத்துத் தெரிவிக்கின்றனர். உரையாசிரியர்களின் இக்கருத்தை இக்கால மொழியியலாரும் உடன்படுகின்றனர். இவ்வாறு தொல்காப்பியரது நூற்பாவிற்கு விளக்கம் காண வாய்ப்பிருந்தாலும் கூட, ஒருமொழிச் சந்தியில் உடம்படுமெய் இல்லாமல் சொற்கள் வருவது தமிழ்மொழியில் இல்லை.

சான்று: கிளி + ஆ = கிளியா. 

கிளி, ஆ என்னும் இருசொற்கள் கிளியா என ஒரு சொல்லாகப் புணர்ச்சியில் இணைந்து விடுவதால் இதனை ஒருமொழிச் சந்தி என்பர். (மொழி - சொல்; சந்தி - புணர்ச்சி). ஒருமொழிச் சந்தியில் இவ்வாறு உடம்படுமெய்யுடன் வருவதே நல்ல மொழிநடையாகக் கருதப்படுகிறது. இதை விடுத்து, கிளி + ஆ = கிளிஆ என்று உடம்படுமெய் இல்லாமல் சொல் அமைவது வழக்கல்ல. அதே நேரம் கிளி + அன்று என்பது, கிளியன்று என உடம்படுமெய் பெற்றோ, கிளிஅன்று என உடம்படுமெய் பெறாமலோ அமையலாம். கிளி + அன்று = கிளியன்று எனவும், கிளி அன்று எனவும் இருசொல்லாகவே இணைந்து வருவதால் இவை இரண்டும் இருமொழிச் சந்தி எனப்படும். இவ்வாறு கட்டாயம் வரவேண்டிய இடத்தில் உடம்படுமெய் பெற்றும், கட்டாயம் இல்லாத இடத்தில் உடம்படுமெய் பெற்றும் பெறாமலும் வரலாம் என்ற விளக்கத்தைக் கூறுவதற்கு ஏற்ற வகையில் தொல்காப்பியரின் இந்நூற்பா இடம் தருகிறது.

தொல்காப்பியர் காலத்தில் இரண்டு உயிர்கள் ஒன்று சேர்ந்து, உடம்படுமெய் எதுவும் பெறாமல் வழங்கியதற்கு அவரது நூலிலேயே சில சான்றுகள் காணப்படுகின்றன. தற்காலத்தில் நாய் என்று நாம் குறிப்பிடும் சொல், தொல்காப்பியர் காலத்தில் நாய் எனவும், நாஇ எனவும் இருவேறு வடிவில் வழங்கியது. இதனை,

“இகர யகரம் இறுதி விரவும்” (மொழிமரபு, நூ.25)

என்ற தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பாவால் அறியலாம். ‘நாஇ’ என்ற சொல் உடம்படுமெய் பெற்ற வருவதாக இருந்தால், நாயி (நா+ய்+இ) என யகர உடம்படுமெய் பெற்றே வரவேண்டும். ஆனால், உடம்படுமெய் பெறாமல் ‘நாஇ’ என்று வழங்கியுள்ளது. ‘நாஇ’ என்ற சொல்லில் உடம்படுமெய் இல்லாமலேயே ஆ, இ என்னும் இரண்டு உயிர்கள் இணைந்து நிற்பதைக் காணலாம்.

அதுபோலத் தொல்காப்பியர் காலத்தில் ‘தேஎம்’ என்ற சொல்லிலும், ‘கோஒன்’ என்ற சொல்லிலும் உடம்படுமெய் இல்லாமலேயே இரண்டு உயிர்கள் சேர்ந்து வருவதைக் காண்கிறோம். (தேஎம்- தேயம், நாடு, இடம்; கோஒன் - அரசன் அல்லது தலைவன்). இவ்விரு சொற்களையும் சிலர் அளபெடைச் சொற்கள் என்று கூறுவர். அது பொருந்தாது. ஏனெனில் இவ்விரு சொற்களில், ‘கோஒன்’ என்ற சொல்லில் உள்ள ‘ஒன்’ என்பதைச் சாரியை என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

சான்று: கோ + கை = கோஒன்கை (அரசனது கை)

மேலே கூறியவற்றால் தொல்காப்பியம் தோன்றிய காலத்தில் உடம்படுமெய் ஒலிகளின் வருகை என்பது விருப்பநிலையிலே இருந்தது எனலாம்

பொதுச்செய்திகள்[தொகு]

  • மெய் ஈறு புள்ளி பெறும்.
  • குற்றியலுகரமும் புள்ளி பெறும்.
  • உயிர்மெய் எழுத்தில் முடியும் சொற்களை உயிர் இறுதி எனக் கொள்ளவேண்டும்.
  • நிலைமொழி, குறித்துவரு கிளவி (=வருமொழி) என்னும் குறியீடுகளை மனத்தில் கொள்ளவேண்டும்.
  • நிறுத்த சொல்லும், குறித்துவரு கிளவியும் அடையொடு தோன்றினும் பொருள்நிலைக்கு ஏற்கப்படும்.
  • மருவியல் மொழியும் ஏற்கப்படும்.
  • வேற்றுமை உருபுகள் - ஐ, ஒடு, கு, இன், அது, கண்
  • எழுத்தோரன்ன பொருள்தெரி புணர்ச்சி
குன்றேறாமா - குன்று ஏறு ஆமா - குன்று ஏறா மா
செம்பொன்பதின்றொடி - செம்பு ஒன்பதின் தொடி, செம்பொன் பத்து தொடி

சிறப்புச் செய்திகள்[தொகு]

நிலைமொழியிலும், வருமொழியிலும் சேரும் மாற்றங்கள் பற்றியவை

நிலைமொழி[தொகு]

  • ஆலிலை - ஆல்+இலை - உயிர் வரும்போது மெய் தனித்து நிற்காது.
  • ஆல் இலை என்று விலகியும் நிற்கும்.
  • உடம்படுமெய்
மாவிலை - வ் - மா இலை - மாமரம் என்பது பெயர்ச்சொல்
மாயிருஞாலம் - ய் - மா இரு ஞாலம் - மா என்பது பெருமைப்பொருள் உணர்த்தும் உரிச்சொல்
ஆவோடு - வ் - பசுவோடு
ஆயிடை - ய் - அ என்பது சுட்டு. இது ஆ என நீண்டது.
  • பான் என்பது ன் எழுத்தில் முடியும் அளவுப்பெயர்
உயிரெழுத்து வரும்போது ன் என்பது ற் ஆகும்
பான் (= பத்து)
பதிற்றகல் (10 சிட்டி அளவு), பதிற்றுழக்கு (10 உழக்கு)
பதிற்றொன்று (பதினொன்று), பதிற்றேழு (பதினேழு)

வருமொழி[தொகு]

சொல்லாகவும், வேற்றுமை உருபாகவும், சாரியையாகவும் வருவன பற்றியவை.
வேற்றுமை உருபு மறைந்து, வேற்றுமைப்பொருள் தோன்ற நிலைமொழியும், வருமொழியும் பணம் தொகையாவதுபோல் தொகைபடும் வேற்றுமைத்தொகையும் இங்குக் கொள்ளப்படும்.

வேற்றுமை[தொகு]

  • வேற்றுமை உருபு பெயரை வழிமொழிந்து வரும்.
சாத்தனை, சாத்தனொடு என வரும். to him என்பது போல் வராது. (சாத்தன் என்னும் சொல் எருதைக் குறித்தால் அஃறிணை. சாத்தன் என்பானைக் குறித்தால் உயர்திணை) (சாத்தன் என்பது விரவுப்பெயர்)
  • கு - வேற்றுமை உருபு வரின்
ஊர்க்கு - மிக்கது விரவுத்திணை முன் (ஊர் என்னும் சொல் இடத்தைக் குறிக்கும்போது அஃறிணை, ஊரிலுள்ள மக்களைக் குறிக்கும்போது உயர்திணை)
நீர்க்கு - மிக்கது அஃறிணை முன்
அரசர்க்கு - மிக்கது உயர்திணை முன்
  • கண் - வேற்றுமை உருபு வரின்
ஊர்க்கண் - மிக்கது
நீர்க்கண் - மிக்கது
(தங்கண், எங்கண் - தம், எம் என்பவற்றின் இனத்திரிபு)
அரசர்கண் - இயல்பு
  • அது என்னும் ஆறன் உருபு - அ முனை கெடும்.
எனது (என்+அது), நமது (நம்+அது)
  • ஆன்+தொழில்மொழி
பரணியாற் கொண்டான் (பரணி+ஆன்+கொண்டான்)

சாரியை[தொகு]

  • சாரியையானது வேற்றுமை உருபோ, பொருளோ வரும்போது பெயரின் வழியே வரும்.
ஆடூஉவின் கை, மகடூஉவின் கை (உயர்திணை வழியே இன் சாரியை)
ஆன் கோடு, ஆவின் கோடு, ஆன் பால், ஆவின் பால் (ஆ = பசு - அஃறிணை)
  • அக்கு - (அ)க்(கு) - சாரியை
குன்றக் கூகை, மன்றப் பெண்ணை
  • அத்து - (அ)த்து - சாரியை
மகத்துக்கை (மக+அத்து+கை) (மகன் - ஆண்பால், மகள் - பெண்பால், மக - ஒன்றன்பால்)
கலத்துக்குறை - ஐந்தாம் வேற்றுமை உருபு தொகைநிலை
  • அம் - (அ)ம் - இனமாகத் திரிதல் - சாரியை
புளியங்கோடு, புளியஞ்செதில், புளியந்தழை, புளியம்பழம் (வல்லினம் வரும்போது)
புளிய ஞெரி, புளிய வட்டு (மெல்லினம், இடையினம் வரும்போது)
  • இக்கு - (இ)க்கு - சாரியை
ஆடிக்குக் கொண்டான் (ஆடி மாத்ததில் கொண்டான்)
சித்திரைக்குக் கொண்டான். (சித்திரை மாத்ததில் கொண்டான்)
  • இன் என்பதன் முனை கெடும்.
ஆனை (ஆ+இன்+ஐ), ஆவினை (ஆ+இன்+ஐ) - வேற்றுமை விரி
ஆன் கோடு (ஆ+இன்+கோடு), ஆவின் கோடு (ஆ+இன்+கோடு) - வேற்றுமைத்தொகை
  • இன் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு வரும்போது இன் சாரியை இல்லை
விளவின் கோடு, பலவின் கோடு
  • இன் சாரியை - கு வரும்போது
விளவிற்கு (விள+இன்+கு), கோஒற்கு (கோ+ஒன்+கு)
  • வற்று - அற்று (சாரியை) அவை என்னும் சொல் முன் வற்று என்னும் சாரியை அற்று என நின்று புணரும்
அவையற்றை - அவை+வற்று+ஐ) - வேற்றுமை உருபு
அவற்றுக்கோடு - அவை+வற்று+கோடு - வேற்றுமைத்தொகை

இணைப்புகள்[தொகு]