தேவசகாயம் பிள்ளை
| அருளாளர் தேவசகாயம் பிள்ளை |
|
|---|---|
| மறைசாட்சி | |
| பிறப்பு | ஏப்ரல் 27, 1712 கன்னியாகுமரி மாவட்டம், இந்தியா |
| இறப்பு | சனவரி 14 1752 (அகவை 39) ஆரல்வாய்மொழி, இந்தியா |
| ஏற்கும் சபை/சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
| அருளாளர் பட்டம் | திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் பெயரால் கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ-ஆல் 2 டிசம்பர் 2012, புனித சவேரியார் கத்தீடிரல், கோட்டாறு மறைமாவட்டம் |
| முக்கிய திருத்தலங்கள் | புனித சவேரியார் கத்தீடிரல், கோட்டாறு மறைமாவட்டம் |
| திருவிழா | 14 சனவரி[1] |
| சித்தரிக்கப்படும் வகை | சங்கிலியால் கட்டப்பட்டவாறு |
முத்திப்பேறு பெற்ற தேவசகாயம் பிள்ளை (Blessed Devasahayam Pillai) இன்றைய குமரி மாவட்டத்தின் நட்டாலம் கிராமத்தில் 1712இல், ஏப்பிரல் 23ஆம் நாள் நாயர் குல இந்துக் குடும்பத்தில் பிறந்து, கத்தோலிக்க கிறித்தவ சமயத்தைத் தழுவி மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். அவரது இயற்பெயர் நீலகண்ட பிள்ளை. கத்தோலிக்க சபையில் திருமுழுக்குப் பெற்றபோது அவருக்கு "கடவுளின் கருணை" என்னும் பொருள்படும் "லாசர்" (Lazarus) என்னும் பெயர் வழங்கப்பட்டது. அதுவே தமிழில் "தேவசகாயம்" என்று வழங்கப்படுகிறது.
இவர் கத்தோலிக்க கிறித்தவர்களால் ஒரு மறைச்சாட்சியாக (martyr) கருதப்படுகின்றார். குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க அமைப்பாகிய கோட்டாறு மறைமாவட்ட கிறித்தவர்கள் இவருக்கு புனிதர் பட்டம் அளிக்கப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இவர் 1752ஆம் ஆண்டு சனவரி 14ஆம் நாள், ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் அன்றைய திருவாங்கூர் ஆட்சியாளர்களின் ஆணைப்படி சுட்டுக் கொல்லப்பட்டார்.
தேவசகாயம் பிள்ளை இறந்த இடம் இன்று தேவசகாயம் மவுண்ட் என்றும், ஆரல் குருசடி என்றும் அழைக்கப்படுகிறது.
அவர் இறந்த இடத்திற்குச் சென்று மக்கள் இறைவேண்டல் நடத்தத் தொடங்கினார்கள். இவ்வாறு, அதிகாரப்பூர்வமாக "மறைச்சாட்சி" என்னும் பட்டம் அவருக்கு வழங்கப்படுவதற்கு முன்னரே பொதுமக்கள் பார்வையிலும் செயல்பாட்டிலும் அவர் மறைச்சாட்சியாகவே கருதப்பட்டார். அவரைக் கத்தோலிக்க திருச்சபை அதிகாரப்பூர்வமாக மறைச்சாட்சி என்றும் "முத்திப்பேறு பெற்றவர்" (அருளாளர் - Blessed) 2012, திசம்பர் 2ஆம் நாள் பிரகடனம் செய்தது.[2][3]
இந்நிகழ்ச்சி கோட்டாறு மறைமாவட்டத்துக்கு உட்பட்ட நாகர்கோவில் கார்மேல் மேனிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடந்தேறியது.[4][5]
பிறப்பு [தொகு]
மறை சாட்சி தேவசகாயம் பிள்ளை இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில் 1712ஆம் ஆண்டு, ஏப்பிரல் 23ஆம் நாளன்று நாயர் குலத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் நீலகண்ட பிள்ளை என்பதாகும். சிறுவயதிலேயே சமசுகிருதம், கலை ஆகியவற்றை படித்து அறிந்தார். பெரியவர் ஆனதும் வில் வித்தை, வர்ம கலைகள், போரிற்கான ஆயுதங்களை பயன்படுத்தும் முறைகளையும் படித்து அறிந்தார்.
அதன் பின்னர் இவர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையான பத்மநாபபுரம் கோட்டையில் பணியில் அமர்த்தப்பட்டார். அதன் பின்பு இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்சந்தைக்கு அருகே உள்ள மேக்கோடு என்னும் ஊரைச் சேர்ந்த பர்கவியம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது.
மனமாற்றம் [தொகு]
1741இல் குளச்சல் துறைமுகத்தை பிடிக்க வந்த டச்சு படைகள் மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. டச்சு படைத்தலைவரான கத்தோலிக்க மதத்தை சார்ந்த பெனடிக்டுஸ் தே டிலனாய் (Benedictus De Lennoy), அவருடைய படைகளுடன் சிறைப்பிடிக்கப்பட்டார். இந்த வெற்றியின் நினைவாக நாட்டப்பட்ட தூண் இன்றும் குளச்சல் பகுதியில் இருக்கிறது.
நாளடைவில் இந்த டிலன்னாய் நீலகண்ட பிள்ளையின் நண்பரானார். ஒருநாள் நீலகண்ட பிள்ளை மிகுந்த சோகமாய் இருப்பதை கண்ட அவர் நலம் விசாரித்தார் . அப்போது நீலகண்ட பிள்ளை குடும்பத்தில் நிறைய துக்க காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும், தங்கள் கால் நடைகள் இறந்து போவதாகவும். பயிர்கள் நாசம் அடைந்து போவதாகவும், பொருளாதார ரீதியாக பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது திருவிவிலியத்தில் உள்ள யோபுவின் கதையை சொல்லி கிறித்தவத்தை டிலனாய் அவருக்கு அறிமுகப்படுத்தினார். நாளடைவில் கிறித்தவத்தின் மீது நல்ல நம்பிக்கை வந்ததும் திருமுழுக்குப் பெற்று கிறித்தவராக நீலகண்ட பிள்ளை விருப்பம் கொண்டார். திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கன்குளம் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த ஜோவான்னி பத்தீஸ்தா புத்தாரி (Giovanni Battista Buttari) நீலகண்ட பிள்ளைக்குத் திருமுழுக்கு வழங்கி, "தேவசகாயம்" என்னும் பொருள்தருகின்ற "இலாசர்" (Lazarus) என்னும் பெயரைச் சூட்டினார்.
கத்தோலிக்க மதத்திற்கு மாறியதும் தேவசகாயம் பிள்ளை பலரிடமும் இயேசு கிறித்துவை பற்றிப் போதித்து, பலரை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றினார். அவரின் மனைவியும் ஞானப்பூ எனும் பெயருடன் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க கிறித்தவர் ஆனார்.
இறப்பு [தொகு]
இவர் இந்து பாரம்பரிய நாயர் குடும்பங்களில் இருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். எனவே இவருக்கெதிராக பல பொய் குற்றச்சாட்டுகள் அரசாங்க அதிகாரிகளால் சுமத்தப்பட்டன. பலரும் அவரை மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாறும்படி நிர்ப்பந்தித்தார்கள். மேலும் மிகக் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். கிறித்துவுக்காக தனது உயிரையும் கொடுக்க அணியமான தேவசகாயம் தம் கிறித்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்.
இதனால் கோபம்கொண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா அவரை மரண தண்டனைக்காக சிறையில் அடைத்தார். அவருடைய உடம்பில் கரும்புள்ளியும், செம்புள்ளியும் குத்தப்பட்டன. கைகள் பின்புறமாக கட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிவிக்கப்பட்டு எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து அவரை கேவலப்படுத்தும் படியாகவும் கிறிஸ்தவத்திற்கு மாறினால் இப்படித்தான் மற்றவருக்கும் இருக்கும் என்பதற்கு பாடமாகவும் அவரை ஊர்ஊராக அழைத்து சென்றார்கள்.
14, சனவரி, 1752-ஆம் ஆண்டு தென் திருவாங்கூர் மன்னராக ஆட்சி செய்த மார்த்தாண்ட வர்மா காலத்தில், குமரி மாவட்டத்தில், ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்பட்டார். தான் இறப்பதற்கு முன்பாக தன்னை சந்தித்த குருவிடமிருந்து நற்கருணை பெற்றுகொண்டார். தேவசகாயம் பிள்ளையின் உடல் காட்டிலேயே எறியப்பட்டது. குமரி மாவட்ட கத்தோலிக்க மக்கள் அவரது உடல் பகுதிகளை எடுத்து, நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் கோவிலில் அடக்கம் செய்தனர்.
புனிதர் பட்ட நடவடிக்கைகள் [தொகு]
தேவசகாயம் பிள்ளை கிறித்தவ மத நம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டார் என்னும் செய்தி அடங்கிய அறிக்கையை அப்போது கொச்சி ஆயராக இருந்த கிளெமென்சு யோசப் (Clemens Joseph) என்பவர் 1756இல் உரோமையில் திருத்தந்தையிடம் கையளித்தார். இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட அந்த அறிக்கையும் அதன் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புகளும் உள்ளன.[6]
பின்னர் 1993இல் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் அளிக்க முயற்சி மேற்கொள்வது பொருத்தம் என்று கருதி அதற்கான நடவடிக்கைகளை கோட்டாறு மறைமாவட்ட ஆயர் தொடங்கினார். அவரின் வேண்டுகோள்படி, 2004ஆம் ஆண்டு தமிழ் நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை, அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் இணைந்து, தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உரோமைத் தலைமைப் பீடத்துக்கு வேண்டுகோள் விடுத்தது. இதன் முதல் படியாக இவர் இறை ஊழியர் என அறிவிக்கப்பட்டார்.
ஜூன் 2012இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், தேவசகாயம் பிள்ளை உறுதியான விசுவாச வாழ்வு (heroic virtues) வாழ்ந்தார் என அறிக்கையிடும் புனிதர் பட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கும் பேராயத்தின் (Congregation for the Causes of Saints) ஆவணத்தில் கையொப்பம் இட்டு இவரை வணக்கத்திற்குரியவர் நிலைக்கு உயர்த்தினார்.[7][8]
கேரளத்தைச் சார்ந்த புத்தன்பரம்பில் தொம்மச்சன் என்பவரும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளையும் துறவறத்தைத் தழுவியவர்கள் அல்ல, மாறாக பொதுநிலையினர் என்பது குறிப்பிடத்தக்கது. [9]
மறைசாட்சி பட்டம் அளிக்கும் விழா [தொகு]
2012ஆம் ஆண்டு, திசம்பர் மாதம் 2ஆம் நாள், தேவசகாயம் பிள்ளை அடக்கம் செய்யப்பட்டுள்ள கோட்டாறு மறைமாவட்ட சவேரியார் முதன்மைக் கோவிலை அடுத்துள்ள கார்மேல் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின்போது தேவசகாயம் பிள்ளை "மறைச்சாட்சி" (martyr) என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு "முத்திப்பேறு பெற்றவர்" (Blessed) என்னும் பட்டமும் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வெளியிட்ட அறிக்கையைத் திருத்தந்தை பதிலாளாகச் செயல்பட்ட கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ வாசித்தளித்தார்.
இச்சிறப்பு நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்கிய கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ என்பவர் உரோமையிலிருந்து கோட்டாற்றுக்கு வருகை தந்தார். அந்நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்தும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் பல கத்தோலிக்க சமயத் தலைவர்களும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் கலந்துகொண்டனர். தேவசகாயம் பிள்ளை பக்தி கிறித்தவர் அல்லாத பிற சமயத்தினர் நடுவிலும் நீண்ட காலமாக இருந்துவருவதைத் தொடர்ந்து பல சமயத்தினர் சிறப்பு விழாவில் பங்கேற்றனர்.
மறைச்சாட்சி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டோர் [தொகு]
கத்தோலிக்க சமயத் தலைவர்களுள் 40க்கும் மேலான ஆயர்களும், நூற்றுக்கணக்கான குருக்களும் கன்னியரும் துறவியரும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.[10] விழாவில் பங்கேற்ற தலைமைப் பணியாளர்களுள் கீழ்வருவோர் அடங்குவர்:
- கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ (திருத்தந்தைப் பதிலாள்)
- கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் (மும்பை பேராயர்)
- கர்தினால் தெலஸ்போர் தோப்போ (ராஞ்சி பேராயர்)
- கர்தினால் ஜோர்ஜ் ஆலஞ்சேரி (சீரோ-மலபார் கத்தோலிக்க சபை தலைமைப் பேராயர்)
- தலைமைப் பேராயர் பசேலியோஸ் கிளீமிஸ் கத்தோலிக்கோஸ் (சீரோ-மலங்கரை கத்தோலிக்க சபை தலைமைப் பேராயர்)
- பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ (திருத்தந்தைத் தூதர், புது தில்லி)
- ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் (கோட்டாறு மறைமாவட்ட ஆயர்)
மேலே குறிப்பிடப்பட்ட கத்தோலிக்க சமயத் தலைவர்கள் தவிர, கன்னியாகுமரி மாவட்டத்தின் அரசியல் தலைவர்கள் பலரும் மறைச்சாட்சி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர். அவர்களுள் K.T. பச்சைமால் (வனத்துறை அமைச்சர்), J. ஹெலன் டேவிட்சன் (கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர்), A. நாஞ்சில் முருகேசன் (நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர்) உள்ளடங்குவர்.
விழாவின் சிறப்புக் கூறுகள் [தொகு]
தேவசகாயம் பிள்ளைக்கு முத்திப்பேறு பெற்ற பட்டமும் மறைச்சாட்சி நிலையும் வழங்கப்பட்ட விழாவின் சில சிறப்பு அம்சங்கள்[11]:
- கோட்டாறு மறைமாவட்டத்தின் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் மற்றும் முத்திப்பேறு பட்டத்திற்கான தயாரிப்புக் குழுவின் தலைவர் அருள்திரு A. கபிரியேல் ஆகிய இருவரும் உரோமையிலிருந்து வருகை தந்து விழாவுக்குத் திருத்தந்தை பெயரால் தலைமை ஏற்ற கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோவை அணுகி, பட்டமளிப்பு விழாவை நடத்துமாறு வேண்டினர்.
- ஆயர் ரெமிஜியுஸ் தேவசகாயம் பிள்ளையின் வாழ்க்கைக் குறிப்புகளை வாசித்தளித்தார்.
- திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கையொப்பமிட்டு அனுப்பியிருந்த அதிகாரப்பூர்வ இலத்தீன் மொழித் திருத்தூது மடலை (apostolic letter) அவரது பதிலாளாக வந்திருந்த கர்தினால் அமாத்தோ மக்கள் முன்னிலையில் வாசித்தார். அப்போது இதுவரை வணக்கத்துக்குரியவர் (Venerable) என்னும் பட்டம் கொடுக்கப்பட்டிருந்த தேவசகாயம் பிள்ளை இனிமேல் "முத்திப்பேறு பெற்றவர்" (அ) "அருளாளர்" (Blessed) என்று அழைக்கப்படுவார் என்றும், அவர் கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரப்பூர்வமாக "வேத சாட்சி" (அ) "மறைச்சாட்சி" (Martyr) பட்டம் பெறுகிறார் என்னும் அறிவித்தார்.
- முத்திப்பேறு பெற்ற தேவசகாயம் பிள்ளையின் வாழ்க்கையோடு தொடர்புடைய தலத் திருச்சபைகளில் (கோட்டாறு மறைமாவட்டம் உட்பட) அவரது ஆண்டுத் திருவிழா சனவரி 14ஆம் நாள் கொண்டாடுவதற்குத் திருச்சபைத் தலைவர்கள் ஏற்பாடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
- உரோமையிலிருந்த பெறப்பட்ட அதிகாரப்பூர்வ மடலின் தமிழ் மொழிபெயர்ப்பு கோட்டாறு ஆயர் ரெமிஜியுசால் வாசித்தளிக்கப்பட்டது.
- அதைத் தொடர்ந்து "தே தேயும்" (Te Deum) எனத் தொடங்குகின்ற இறைநன்றிப்பாடல் கத்தோலிக்க மரபுக்கு ஏற்ப இலத்தீன் மொழியில் பாடப்பட்டது.
- அப்போது தேவசகாயம் பிள்ளையின் முழு உயர உருவப்படமும் அவரது திருப்பண்டங்கள் சிலவும் பீடத்திற்குப் பவனியாகக் கொண்டுவரப்பட்டன. அவை பீடத்துக்கு அருகில் எரியும் மெழுகுதிரிகள் சூழ மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டன.
- திருப்பலிக்குத் தலைமை தாங்கிய கர்தினால் அமாத்தோ தேவசகாயம் பிள்ளையின் திரு உருவத்திற்கும் திருப்பண்டங்களுக்கும் வணக்கம் செலுத்தும் வகையில் தூபம் காட்டினார். அப்போது மறைச்சாட்சியின் புகழ் சாற்றும் பாடல் பாடப்பட்டது.
- தேவசகாயம் பிள்ளை பிறந்து வளர்ந்த நிலமாகிய கோட்டாறு மறைமாவட்டத்தின் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தேவசகாயம் பிள்ளைக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்து, அவரை மறைச்சாட்சியாக அறிவித்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டுக்கு மறைமாவட்டத்தின் பெயரால் நன்றி நவின்றார்.
முத்திப்பேறு பெற்ற தேவசகாயம் பற்றி திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் உரை [தொகு]
கோட்டாறு மறைமாவட்டத்தின் நாகர்கோவில் நகரில் தேவசகாயம் பிள்ளை முத்திப்பேறு பெற்ற அறிவிப்பு 2012, திசம்பர் 2ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில், வத்திக்கான் நகரில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தாம் வழக்கமாக ஆற்றுகின்ற ஞாயிறு நண்பகல் உரையைத் தொடர்ந்து இத்தாலிய மொழியில் பின்வருமாறு கூறினார்:
"அன்பு சகோதரர்களே, சகோதரிகளே! பொதுநிலை சார்ந்த கிறித்தவ நம்பிக்கையாளராக 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைச்சாட்சியாக உயிர்நீத்த தேவசகாயம் பிள்ளை "முத்திப்பேறு பெற்றவர்" என்று இன்று இந்திய நாட்டின் கோட்டாறு மறைமாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. இந்தியாவின் திருச்சபையோடு அதன் மகிழ்ச்சியில் நாமும் பங்கேற்கிறோம். புதிதாக முத்திப்பேறு பெற்ற அவர் அந்த சீர்மிகு பெரு நாட்டில் வாழ்கின்ற கிறித்தவ மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்."
தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ஆங்கிலத்தில் பின்வருமாறு கூறினார்[12]:
"இங்கே குழுமியிருக்கின்ற உங்கள் அனைவரையும் என்னோடு சேர்ந்து இறைவேண்டல் செய்ய அழைக்கின்றேன். இன்று தேவசகாயம் பிள்ளை முத்திப்பேறு பெற்ற நிகழ்ச்சியைக் கொண்டாடுகின்ற கோட்டாறு மக்கள் அனைவருக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இன்று நாம் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இயேசு கிறிஸ்து நம்மிடையே வருகின்றார் என்பதை அது நினைவூட்டுகின்றது. இயேசு கிறிஸ்துவின் வருகையை நாம் எப்பொழுதும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். கிறிஸ்துவுக்குச் சாட்சி பகர்ந்த தேவசகாயம் பிள்ளை இதில் நமக்கு முன்மாதிரியாய் இருக்கின்றார். நமது நம்பிக்கையாய் உள்ள கிறிஸ்து நமது வாழ்வின் மையமாக அமைந்திட இப்புனித காலம் நமக்குத் துணைசெய்ய வேண்டும். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக!"
தேவசகாயம் பிள்ளையின் கல்லறை புதுப்பிக்கப்படல் [தொகு]
தேவசகாயம் பிள்ளைக்கு மறைச்சாட்சி பட்டம் அளிக்கும் நிகழ்வை முன்னிட்டு, கோட்டாறு மறைமாவட்ட சவேரியார் முதன்மைக் கோவிலில் தேவசகாயம் பிள்ளையின் கல்லறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2012, திசம்பர் 2ஆம் நாள் அக்கல்லறையைச் சந்தித்து அங்கு இறைவேண்டல் நிகழ்த்திட ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ Blessed Devasahayam Pillai
- ↑ முத்திப்பேறு பெற்ற பட்டம்.
- ↑ மறைச்சாட்சி
- ↑ விழா ஏற்பாடுகள் படிமங்கள்
- ↑ மறைச்சாட்சி பட்டவிழா
- ↑ தேவசகாயம் பிள்ளை கிறித்தவ நம்பிக்கை பொருட்டு கொல்லப்பட்ட முதல் அறிக்கை
- ↑ மறைச்சாட்சி பட்டம் வழங்க வத்திக்கான் ஆணை
- ↑ மறைச்சாட்சி தேவசகாயம்
- ↑ Two Indian laymen placed on sainthood road
- ↑ மறைச்சாட்சி பட்டமளிப்பு விழா
- ↑ தேவசகாயம் பிள்ளை விழா
- ↑ பதினாறாம் பெனடிக் உரை
| விக்கி ஊடக நடுவத்தில் தேவசகாயம் பிள்ளை தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |