தேசிக விநாயகம் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தேசிக விநாயகம் பிள்ளை
பிறப்பு ஆகஸ்ட் 27, 1876
இறப்பு செப்டம்பர் 26 1954 (அகவை 78)
அறியப்படுவது கவிஞர்
பெற்றோர் சிவதானுப்பிள்ளை, ஆதிலட்சுமி

தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள்... என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

சிவதானுப்பிள்ளை-ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரையே வைத்தார் சிவதானுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எப்.ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901 ல் மணம் முடித்தார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதானுவை தனது மகன் போலவே வளர்த்தார்.

[தொகு] மொழிபெயர்ப்பாளர்

எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி'யைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.

[தொகு] ஆராய்ச்சியாளர்

ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.

[தொகு] விருதுகள்

24 டிசம்பர் 1940 ல் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம் வழங்கினார். 1943 ல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1952 ல் கவிமணிக்கு தேருரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.

[தொகு] கவிமணியின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகள்

  • கல்கி எழுதி சிவாஜி கணேசன் நடித்த கள்வனின் காதலி என்ற படத்தில் "வெயிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு" எனும் கவிமணியின் பாடலை பயன்படுத்திக்கொண்டனர். அதற்கு கொடுப்பதற்காக ஒரு பெருந்தொகையை எடுத்துக்கொண்டு சின்ன அண்ணாமலையும் சிவாஜி கணேசனும் கவிமணியை சந்திக்க அவரது இல்லமான புத்தன் சந்தைக்கு சென்றனர். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த கவிமணி சிவாஜியைப் பார்த்து தம்பி யார் என்று கேட்டார். பதட்டத்துடன் சின்ன அண்ணாமலை இவர்தான் சிவாஜி கணேசன் என்று சொல்லவும் கவிமணி அப்படியா தம்பி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டார்.
  • கவிமணிக்கு சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை. அதனால் அவருக்கு சிவாஜி கணேசனைத் தெரியவில்லை. பாடலுக்காக ஒரு பெருந்தொகையை சிவாஜி கொடுக்கவும் அதை வாங்க மறுத்து இந்த பாடல் நான் எப்போதோ எழுதியது அதற்கு இது தேவை இல்லை தம்பி என்று மறுத்து விட்டார் கவிமணி. கலைவாணரின் முயற்சியால் கவிமணியின் பாடல்கள் பைத்தியக்காரன், மணமகள், முதல் தேதி போன்ற படங்களில் இடம் பெற்றது.
  • ஒருமுறை ம.பொ.சி கவிமணியை சந்தித்துவிட்டு செல்லும்போது என்னை மறந்து விடாதீர்கள் என்றார் அதற்கு கவிமணி எப்படி மறப்பது எல்லோருக்கும் முகத்தில் மீசை இருக்கும் உங்களுக்கோ மீசையில் அல்லவா முகம் இருக்கிறது என்று சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தார்.
  • ஒருமுறை நாதஸ்வர வித்வான் டி. என். ராஜரத்தினம் பிள்ளை கவிமணியை சந்திக்க சென்றார். அப்போது இருவருக்கும் குளிர்பானம் வந்தது. அப்போது கவிமணி ஸ்ட்ராவை காட்டி எப்போதும் நாதஸ்வரம் ஊதுவீர்கள் தற்போது இதை ஊதுங்கள் என்று நகைச்சுவையாகக் கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார் கவிமணி.

[தொகு] கவிமணியின் நூல்கள்

  • ஆசிய ஜோதி , (1941)
  • மலரும் மாலையும், (1938)
  • மருமக்கள்வழி மான்மியம், (1942)
  • கதர் பிறந்த கதை, (1947)
  • உமார் கய்யாம் பாடல்கள், (1945)
  • தேவியின் கீர்த்தனங்கள்
  • குழுந்தைச்செல்வம்
  • கவிமணியின் உரைமணிகள்

[தொகு] ஆதாரம்

  • திருவேங்கிமலை சரவணன், தலை நிமிர்ந்த தமிழர்கள் (குமுதம் வெளியிடு )
  • முல்லை நிலையம் வெளியிட்ட மலரும் மாலையும் என்ற நூலில் உள்ள ஆசிரியர் குறிப்பு
"http://ta.wikipedia.org/w/index.php?title=தேசிக_விநாயகம்_பிள்ளை&oldid=912294" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்