தெலெஸ்போர் தோப்போ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேதகு

தெலெஸ்போர் ப்ளாசிடஸ் தோப்போ
ராஞ்சி உயர்மறைமாவட்டப் பேராயர்-கர்தினால்
வித்தீனியாவில் அமைந்த துன்புறும் இயேசுவின் திரு இதயக்கோவில் குரு-கர்தினால்
கர்தினால் தெலெஸ்போர் தோப்போ
சபைகத்தோலிக்க திருச்சபை
உயர் மறைமாவட்டம்ராஞ்சி
ஆட்சி துவக்கம்ஆகத்து 7, 1985
முன்னிருந்தவர்பேராயர் பயஸ் கெர்க்கெட்டா, சே.ச.
பிற பதவிகள்
  • தும்கா மறைமாவட்ட ஆயர் (1978-1984)
  • ராஞ்சி உயர்மறைமாவட்ட இணை ஆயர் (1984-1985)
  • இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் (2004-2008)
  • இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை (இலத்தீன்) தலைவர் (2003-2005)
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடுமே 3, 1969
ஆயர் ஃப்ரான்ஸ் ஃபோன் ஸ்ட்ரெங்க்-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவுஅக்டோபர் 7, 1978
பேராயர் பயஸ் கெர்கெட்டா-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டதுஅக்டோபர் 21, 2003
கர்தினால் குழாம் அணிகுருக்கள் அணி
பிற தகவல்கள்
பிறப்புஅக்டோபர் 15, 1939 (1939-10-15) (அகவை 84)
சைன்பூர், இந்தியா
குடியுரிமைஇந்தியா
சமயம்கத்தோலிக்க திருச்சபை
இல்லம்ராஞ்சி, இந்தியா
குறிக்கோளுரைஇலத்தீன்: Parare Viam Domini (ஆண்டவரின் வழியை ஆயத்தமாக்க)

கர்தினால் தெலெஸ்போர் ப்ளாசிடஸ் தோப்போ (Telesphore Placidus Cardinal Toppo) ராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் பேராயரும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இந்தியக் கர்தினால்களில் ஒருவரும் ஆவார்[1].

பிறப்பும் படிப்பும்[தொகு]

தெலெஸ்போர் தோப்போ இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சைன்பூர் என்னும் இடத்தில் 1939ஆம் ஆண்டு அக்தோபர் மாதம் 15ஆம் நாள் பிறந்தார். இந்தியாவில் பழங்குடி மக்கள் நடுவிலிருந்து கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் நபர் இவர் ஆவார்.

தெலெஸ்போர் தோப்போ தம் பெற்றோருக்குப் பிறந்த பத்து குழந்தைகளுள் எட்டாவதாகப் பிறந்தவர்.

ராஞ்சியில் அமைந்துள்ள புனித ஆல்பர்ட் பெரிய குருத்துவக் கல்லூரியில் மெய்யியல் பயின்றார். ராஞ்சி புனித சேவியர் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். உரோமை நகரில் அமைந்துள்ள திருத்தந்தை உர்பன் பல்கலைக்கழகத்தில் இறையியல் படிப்பை நிறைவுசெய்தார்.

குருப்பட்டமும் குருத்துவப் பணியும்[தொகு]

தெலெஸ்போர் தோப்போ 1969ஆம் ஆண்டு, மே மாதம் 3ஆம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

தம் குருத்துவப் பணிக் காலத்தில் தோப்போ முதலில் தோர்ப்பா நகரில் புனித யோசேப்பு மேநிலைப் பள்ளியில் துணை ஆசிரியராகவும் பின்னர் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தார். பின்னர் "லீவென்ஸ்" கைத்தொழில் கூடத்தை நிறுவி அதன் இயக்குநராகச் செயல்பட்டார்.

ஆயராக நியமனம்[தொகு]

திருத்தந்தை ஆறாம் பவுல் தெலெஸ்போர் தோப்போவை தும்கா மறைமாவட்டத்தின் ஆயராக சூன் 8, 1978 நியமித்தார். தோப்போ அக்டோபர் 7, 1978இல் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். தோப்போ ராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் இணை ஆயராக 1984, நவம்பர் மாதம் 8ஆம் நாள் நியமிக்கப்பட்டார். பின்னர் அதே உயர்மறைமாவட்டத்தின் பேராயராக 1985, ஆகத்து 7ஆம் நாள் நியமிக்கப்பட்டு, அதே மாதம் 25ஆம் நாள் பொறுப்பேற்றார்.

கர்தினால் பதவி[தொகு]

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தெலெஸ்போர் தோப்போவை 2003, அக்டோபர் 21ஆம் நாள் கர்தினால் நிலைக்கு உயர்த்தினார். அத்தருணத்தில் அவருக்கு வித்தீனியாவில் அமைந்த துன்புறும் இயேசுவின் திரு இதயக்கோவில் குரு-கர்தினால் என்னும் பட்டமும் வழங்கப்பட்டது.

பிற பதவிகளும் ஆற்றிய பணிகளும்[தொகு]

கர்தினால் தோப்போ இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக 2004-2008 ஆண்டுகளில் பணியாற்றினார். அதுபோலவே இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை (இலத்தீன்) என்னும் அமைப்பின் தலைவராக 2003இலிருந்து 2005 வரை செயல்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறப்பான விதத்தில் சமூகப் பணி ஆற்றியதற்காக அவருக்கு 2002ஆம் ஆண்டில் "ஜார்க்கண்ட் ரத்தன் பரிசு" வழங்கப்பட்டது.

கர்தினால் தோப்போ பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். இந்தி, ஆங்கிலம் தவிர ஓரான் (Oraon), சாத்ரி (Sadri) என்னும் மொழிகளையும் இத்தாலிய மொழியையும் நன்கு அறிந்தவர்.

பதினாறாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அந்நிகழ்வில் கலந்துகொண்டு வாக்களித்தவர்களுள் கர்தினால் தோப்போவும் ஒருவராவார்.

2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உரோமையில் நடந்த ஆயர் மன்றத்தின் பதினொன்றாம் பொது மாநாட்டு அவைக்குத் தலைமை தாங்கினார். அந்த அவை "நற்கருணை: திருச்சபையின் வாழ்வுக்கும் பணிக்கும் ஊற்றும் சிகரமும்" என்னும் பொருள் பற்றி விவாதித்தது.

திருச்சபை அமைப்புகளில் பங்கேற்பு[தொகு]

கர்தினால் தோப்போ கீழ்வரும் வத்திக்கான் மைய அலுவலகங்களில் உறுப்பினராகச் செயல்படுகின்றார்:

  • நற்செய்தி அறிவிப்புப் பேராயம்
  • பல்சமய உரையாடல் மற்றும் பண்பாடு செயலகம்
  • மறைச் சமூகப் பணிக்கான நிதி மையம்

ஆதாரங்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலெஸ்போர்_தோப்போ&oldid=3479299" இலிருந்து மீள்விக்கப்பட்டது