தீபச்செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தீபச்செல்வன்

பிறப்பு
அக்டோபர் 24, 1983(1983-10-24)
இரத்தினபுரம், கிளிநொச்சி, இலங்கை
கல்வி நிலையம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
எழுதிய காலம் 2005-தற்காலம்
இலக்கிய வகை கவிதை, கட்டுரை
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம், பாழ் நகரத்தின் பொழுது, ஈழம் மக்களின் கனவு
http://deebam.blogspot.com

தீபச்செல்வன் (பிறப்பு: அக்டோபர் 24, 1983) ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் வசித்து வருகிறார். கவிதைகள், கதைகள், களச்செய்தியறிக்கை, பத்தி எழுத்து, ஓவியங்கள், வீடியோ விவரணம், புகைப்படங்கள், ஆவணப்படம், வானொலிப்பெட்டகம், ஊடகவியல், விமர்சனங்கள் என பல துறைகளில் இயங்கிவருகிறார். போர், அரசியல், மாணவத்துவம், தனிமனித உணர்வுகள் என்று இவர் எழுதிவருகிறார். இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனம் 2010ம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாலர்களுக்கான விருது வழங்களில் தீபச்செல்வனுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[1]. சிறந்த கவிதைக்கான கணையாழி விருது இவருக்கு 2013 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் செயலாளராக 2008/2009 இல் பதவி வகித்த இவர் யாழ் பல்கலைக்கழக தமிழ் துறையில் சிறப்பு பட்டம் பெற்று தற்பொழுது யாழ் பல்கலைக்கழக ஊடக பிரிவில் வருகை விரிவுரையாளராக பணிபுரிகிறார். அத்தோடு சுயாதீன ஊடகவியலாளராகவும் இயங்குகிறார். கிளிநொச்சி நகர வாழ்க்கையை பற்றி ‘கிளிநொச்சியின் கதை' என்ற இரு கட்டுரைகளை எழுதியுள்ளார். கவிதைகள் தவிர, விமர்சனம், ஓவியம், புகைப்படம் போன்ற பங்களிப்புகளையும் செய்து வருகிறார். 'தீபம்' என்கிற பெயரில் வலைப்பதிவு ஒன்றும் எழுதிவருகிறார்.

இவர் எழுதியவற்றுள்: "கிளிநொச்சி", "யாழ் நகரம்", "முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி", "கிணற்றினுள் இறங்கிய கிராமம்", "குழந்தைகளை இழுத்துச்செல்லும் பாம்புகள்", "பதுங்குகுழியில் பிறந்த குழந்தை", ஆகிய கவிதைகள் முக்கியமானவை. ஈழத்தின் பத்திரிகை சஞ்சிகைகள் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. தமிழின் அதிகமான இணைய சஞ்சிகைகளில் எழுதி வருபவர். இவரின் தீபம் இணைய இதழில் "கீறல் பட்ட முகங்கள்", "பல்லி அறை", ஆகிய தளங்களில் கவிதைகள் வெளியாகுகின்றன.

பொருளடக்கம்

வாழ்க்கைக் குறிப்பு [தொகு]

தீபச்செல்வன், 1983 இல் அக்டோபர் 24இல் ஈழத்தில் கிளிநொச்சியில் இரத்தினபுரத்தில் பிறந்தவர். ஆரம்பக்கல்வியை கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தொடங்கி, 1996 இல் ஈழப்போர் காரணமாக இடம்பெயர்ந்து கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் மணியங்குளத்தில் இடம்பெயர்ந்திருந்து வந்திருந்த பாடசாலையான உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்து படித்தார்.

2001 இல் இவரது சகோதரன் பிரசன்னா (வீரவேங்கை வெள்ளையன்) முகமாலையில் நடைபெற்ற போரில் மரணம் அடைந்தார். அக்காலத்தில் கிளிநொச்சி விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டிருந்தது. மீண்டும் கிளிநொச்சிக்குத் திரும்பி கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தரக் கலைப்பிரிவில் படித்துப் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் தலைமைப் பதவி வகித்தார்.

இவரது தாயார் மற்றும் தங்கை வன்னி இறுதி யுத்தக்களத்தில் வாழ்ந்தனர். அந்தக் காலத்தில் இவரை ஈழப்போராட்டத்திற்காக இயங்கியதன் காரணமாக இலங்கை இராணுவம் கடுமையாக எச்சரித்து வந்தது. 'இறுதி எச்சரிக்கை' என்ற சுவரொட்டி வாயிலாக யாழ் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த தீபச்செல்வனுடன் 14 பேருக்கு கொலை அச்சுறுத்தலை இலங்கை இராணுவம் விடுத்தது. பின்னர் சுற்றி வளைளப்புகளில் விசாரணை செய்யப்பட்டும் இராணுவ முகாங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டார். தடுப்புமுகாமில் இருந்து திரும்பிய தனது தாய் தங்கையுடன் தற்பொழுது தனது சொந்த ஊரான இரத்தினபுரம் கிளிநொச்சியில் மீள்குடியேறி வசித்து வருகிறார்.

தீபச்செல்வன், தமிழ்நாட்டிற்கு 2011-இல் இடம்பெயர்ந்தார். தமிழ்நாட்டில் சென்னை மெரீனாவில் வாசித்து வருகிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலை படித்து வருகிறார்.

எழுத்துலகில் [தொகு]

2005ஆம் ஆண்டு "சுடரொளி" பத்திரிகையில் இவரது முதல் கவிதை வெளியாகியிருந்தது. எனினும் முதன் முதலில் இவர் எழுதிய பேய்கள் என்ற கவிதை 2006ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அதே ஆண்டில் எழுதப்பட்ட கீறல்பட்ட முகங்கள், யாழ் நகரம் முதலிய கவிதைகள் மிகவும் முக்கியமானவை.

2007ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதைகளில் பதுங்குகுழியில் பிறந்த குழந்தை, கிளிநொச்சி முதலிய கவிதைகளும் வன்னிப்போர்க்கள வாழ்வைப் பற்றி அமைந்திருந்தன. 2008 ஆம் ஆண்டில் இவரது முதல் தொகுப்பான பதுங்குகுழியில் பிறந்த குழந்தை நூலை காலச்சுவடு வெளியிட்டிருந்தது.

2007இல் தீபம் என்ற வலைப்பதிவில் இவர் எழுதத் தொடங்கினார். திண்ணை, வார்ப்பு ஏனைய மின்னிதழ்களிலும் எழுதி வந்தார். இணையத்தில் பரவலாக இவரது கவிதைகள் வந்தன. பின்னர் தமிழக சிற்றிதழ்கள், புலம்பெயர் இதழ்கள் போன்றவற்றிலும் வன்னிப் போர் தொடர்பில் எழுதி வந்தார். வன்னிப் போர் பற்றிய ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம் என்ற நூலை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தபோது “பாழ் நகரத்தின் பொழுது” என்ற கவிதை நூலை எழுதினார்.

இவரது போருக்கு பிந்திய ஈழம் தொடர்பான உரையாடல்களும் கதைகளும் அடங்கிய ஈழம் மக்களின் கனவு என்ற நூலை தோழமை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் தீபச்செல்வனுடன் ஷோபாசக்தி நடத்திய நேர்காணல் இடம்பெற்றிருந்தது. கொளதமசித்தார்தன் நடத்திய நேர்காணலுடன் வன்னியின் சமகால நிலமைகள் தொடர்பிலான பல்வேறு பதிவுகளும் அந்த நூலில் அடங்குகின்றன.

ஊடகத்துறைப் பிரவேசம் [தொகு]

2006ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் விவரணப்படத் தயாரிப்பாளராக இணைந்தார். வன்னியில் போர்ச் சூழலில் இயங்கிய பாடசாலைகள், பதுங்குகுழிகளில் கல்வி கற்கும் மாணவர்களது எண்ணங்களையும் கல்வி நிலையையும் இவரது விவரணப்படங்கள் சித்திரிக்கன்றன. அதேவேளை தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள், கவிதை நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளார். தேசிய தொலைக்காட்சியில் செஞ்சோலை வடு என்ற ஆவணப்படத்தையும் எழுதி இயக்கியுள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் செய்திப் பிரிலும் பணியாற்றினார்.

2005 முதல் ஈழநாதம் பத்திரிகையில் கவிதைகளுடன் ஈழத்துச் சினிமா தொடர்பில் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார். தொடர்ச்சியாக கவிதைகளை எழுதி வந்த தீபச்செல்வன் 2009 இல் கிளிநொச்சி இலங்கைப்படைகளால் கைப்பற்றப்பட்ட போது கிளிநொச்சியின் கதை என்ற கட்டுரையை எழுதினார். அதன் பின்னர் உன்னதம் இதழில் ஈழம் தடுப்பு முகாங்கள் நேரடி ரிப்போர்ட் என்ற கட்டுரையை எழுதினார். அதன் பின்னர் தொடர்ச்சியாக ஈழ மக்களின் கதைகளை சொல்லும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

2009இல் பல்கலைக்கழக கல்வியை முடித்துக் கொண்டு சுயாதீன ஊடகவியலாளராக இயங்கத் தொடங்கினார். போரின் பின்னரான ஈழமும் மக்களின் மீள்குடியமர்வு, தடுப்புமுகாம் மக்களின் வாழ்வை, வன்னிப்பெருநிலத்தின் இருப்பு, நில அபகரிப்பு, சிங்கள பௌத்த ஆதிக்கம், இராணுவத்தன்மையின் திணிப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக களத்திலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்களில் எழுதி வருகிறார்.

குளோபல் தமிழ் செய்திகள் இணையத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பெயர்களில் வன்னி மக்களின் வாழ்க்கை நிலைகள் தொடர்பிலும் ஈழத்தின் நிலமைகள் தொடர்பிலும் எழுதி வருகிறார். கட்டுரை, புகைப்படம், வீடியோ ஆவணம் முதலிய துறைகளில் இயங்கி வருகிறார். பெருநிலத்தின் கதைகள் என்ற தலைப்பில் வன்னியில் வாழ்க்கையை தெடராக எழுதுகிறார். தமிழ்வின் போன்ற ஏனைய இணைங்களிலும் இவரது கட்டுரைகள், புகைப்படங்கள், செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர் எழுதிய செய்திகள், செய்திக்கட்டுரைகள், விவரணக்கட்டுரைகள், கதைகள் என்பன உள்நாட்டில் உள்ள தினக்குரல், உதயன், சுடரொளி, இருக்கிறம் முதலிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. சாந்தபுரம் [2] பொன்னகர் [3], இரத்தினபுரம் [4] போன்ற கிராமங்களை அபகரிக்க முற்பட்ட பொழுது இவர் எழுதிய நேரடியான மக்கள் கதைகள்[5] அதிர்வுகளை உருவாக்கி மக்களுக்கு நிலங்களைக் கிடைக்கச் செய்துள்ளன.[6] ஊடகத்துறையில் இவர் புகைப்படம், செய்திகள், செய்திக்கட்டுரைகள், நேரடி அறிக்கைகள், மக்கள் கதைகள், வீடியோ விவரணங்கள், வானொலிப்பெட்டகங்கள் போன்ற பல்வேறு துறையில் இயங்குகிறார்.

மணவத் தலைமைத்துவம் [தொகு]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் போர் கடந்த காலப்பகுதியில் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். 2008ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆண்டின் இறுதிவரை மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பதவியான செயலாளர் பதவியை வகித்தார்.

இலங்கை அரசபடைகளின் எச்சரிக்கை [தொகு]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் போர் கடந்த காலப்பகுதியில் பொதுச்செயலாளராக பதவி வகித்த பொழுது இலங்கை அரச படைகள் இவருக்கு கொலை எச்சரிக்கை விடுத்தது. இவருடன் 14 பேருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஊடகத் துறையில் சாதனை விருதுகள் [தொகு]

2010ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாலர்[7] என்ற இரண்டு விருதுகளை பெற்றுள்ளார். நெருக்கடிச் சூழலில் செய்தித் தேடலுக்காக 2010ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாலர் என்ற விருதையும் 2010ஆம் ஆண்டின் சிறந்த புகைப்பட ஊடகவியளாலர் என்ற விருதையும் பெற்றுள்ளார். வன்னியில் ஏற்பட்ட நிலப்பிரச்சினை சார்ந்த பதிவுகளை நெருக்கடிகளின் மத்தியில் எழுதியமைக்காகவே[8] இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இந்த விருதுகளை வழங்கியிருக்கிறது.

நெருக்கடிச் சூழலில் செய்தி சேகரித்தமைக்கான 2011ம் சிறந்த ஊடகவியலாளர் விருதை மீண்டும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வழங்கியுள்ளது.

திரைப்படத்தில் பணி [தொகு]

விக்கரம், அனுஷ்கா, நாசர் மற்றும் சந்தானம் நடித்த படம் தாண்டவம். இப் படத்தில் நாசர் இலங்கைத் தமிழராக நடித்துள்ளார். புலம்பெயர்ந்து லண்டனில் உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ள நாசருக்கு இலங்கைப் பேச்சு மொழியை சொல்லிக் கொடுத்திருக்கிறார் தீபச்செல்வன்.[9] இலங்கைத் தமிழ் மக்கள் பேசும் சொற்களை மிகவும் அழகாக இந்தப் படத்தில் நாசர் பேசுகின்றார்.

எழுதிய நூல்கள் [தொகு]

  • பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, வெளியீடு 2008 : காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்
  • ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம், வெளியீடு 2009 : உயிர்மை பதிப்பகம், சென்னை
  • பாழ் நகரத்தின் பொழுது, வெளியீடு 2010 : காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்
  • ஈழம் மக்களின் கனவு, வெளியீடு 2010 : தோழமை பதிப்பகம், தமிழ்நாடு
  • பெருநிலம், வெளியீடு 2011 : காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு
  • ஈழம் போர்நிலம், வெளியீடு 2011 : தோழமை பதிப்பகம், தமிழ்நாடு
  • மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு, வெளியீடு 2011 : ஆழி பதிப்பகம், தமிழ்நாடு
  • கூடார நிழல், வெளியீடு 2012 : உயிர்மை பதிப்பகம், சென்னை, தமிழ்நாடு
  • கிளிநொச்சி போர்தின்ற நகரம், வெளியீடு 2013 : எழுநா வெளியீடு
  • எதற்கு ஈழம்?, வெளியீடு 2013 : தோழமை பதிப்பகம், தமிழ்நாடு
  • PRAY FOR MY LAND, வெளியீடு 2013 : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு

பிறரது தொகுப்பு நூல்களில் அடங்குபவை [தொகு]

  • முள்ளிவாய்க்காலுக்குப் பின் - ஆழி பதிப்பகம் 2011

குட்டிரேவதி தொகுத்த கவிதை நூலில் இவரது கவிதைகள் இடம்பெறுகின்றன.

  • நான் எப்பொழுது அடிமையாயிருந்தேன் - கறுப்புப்பிரதிகள் பதிப்பகம் 2011

ஷோபாசக்தி தொகுத்த நேர்காணல் தொகுதி நூலில் இவரது நேர்காணல் இடம்பெறுகிறது.

  • சிதறுண்ட காலக்கடிகாரம் - 2011

சித்தாந்தன், கேதீஸ். ரமேஷ் தொகுத்த ஈழத்து முப்பது கவிஞர்கள் கவிதை நூலில் இவரதுகவிதை இடம்பெறுகிறது.

மேற்கோள்கள் [தொகு]

  1. ஊடகவியளாளர் தீபச்செல்வனுக்கு இரண்டு விருதுகள்
  2. சாந்தபுரம் :‐ நிலத்திற்காய் அழும் சனங்களின் குரல்கள்�
  3. நிலம் சென்ற பொன்னகர் மக்கள்
  4. மழைக்கு இடம்பெயர மறுத்த மக்கள்
  5. மழையும் வெயிலும் கொல்லும் இரத்தினபுரம் மக்கள்
  6. நிலம் திரும்பிய சாந்தபுரம் மக்களின் துயரப் புன்னகை ‐
  7. நெருக்கடிச் சூழலில் ஊடகப் பணியாற்றியமைக்காக இரண்டு விருதுகளைப் பெற்ற தீபச்செல்வன்!
  8. 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஊடகத்துறைக்கான 2 விருதுகள்!
  9. நாசரை இலங்கை தமிழ் பேசவைத்த தீபச்செல்வன்!
"http://ta.wikipedia.org/w/index.php?title=தீபச்செல்வன்&oldid=1405501" இருந்து மீள்விக்கப்பட்டது