தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி (The Indian Fine Arts Society, Chennai) சென்னை தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு இசை நடன சபா ஆகும். (இதனை தமிழில் இந்திய நுண்கலைக் கழகம் எனக் கூறலாம்.)

தோற்றம்[தொகு]

இது 1932 ஆம் ஆண்டு சனவரி 14 ஆம் நாள் தொடங்கப் பட்டது. இதனை நிறுவியவர்கள் பி. வி. கோபாலகிருஷ்ணராவ் (B. V. Gopalakrishna Rao) மற்றும் வயலின் மேதை டி. செளடையா[1] ஆகியோராவர்.

நோக்கம்[தொகு]

இந்திய நுண்கலைகளான இசை, நடனம், நாடகம் போன்ற கலைகளை எழுச்சி பெறச் செய்வதும் அந்தந்த துறையில் உள்ள கலைஞர்களை ஊக்குவிப்பதும் சென்னை தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் நோக்கமாகும்.

செயற்பாடுகள்[தொகு]

வருடாவருடம் சென்னையில் டிசம்பர் இசைவிழா காலத்தின்போது இசை மாநாடு, இசைவிழா என்பவற்றை கழகம் நடத்துகிறது. சுமார் 20 நாட்கள் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இதில் ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பக்தி இசை, விரிவுரைகள், செய்து காட்டல்கள் (Demonstration), வாய்ப்பாட்டு, வீணை, வயலின், சக்ஸபோன், புல்லாங்குழல் தனிக் கச்சேரிகள், நடனம், பரதநாட்டியம் போன்ற ஆறு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
பின்வரும் நிகழ்ச்சிகளும் ஒவ்வொரு வருடமும் கழகத்தால் நடத்தப் படுகின்றன.

  1. தியாகராஜர் ஆராதனை
  2. சுவாதித் திருநாள் நினைவு நாள்
  3. ஜி. என். பாலசுப்பிரமணியம் நினைவு நாள்
  4. புரந்தரதாசர் நினைவு நாள்
  5. சியாமா சாஸ்திரிகள் நினைவு நாள்
  6. பாபநாசம் சிவன் நினைவு நாள்
  7. அன்னமாச்சாரியார் நினைவு நாள்
  8. முத்துசுவாமி தீட்சிதர் நினைவு நாள்

விருதுகள் வழங்கல்[தொகு]

ஒவ்வொரு வருடமும் இசை மாநாட்டின் தொடக்க நாளன்று தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி ஒரு வாய்ப்பாட்டு அல்லது வாத்திய இசைக் கலைஞருக்கு சங்கீத கலாசிகாமணி விருது வழங்குகின்றது.
அது போல மாநாட்டின் இறுதி நாளன்று ஒரு நடனக் கலைஞருக்கு நாட்டிய கலாசிகாமணி விருதை வழங்குகின்றது.
இந்த இரண்டு விருதுகளும் ஒவ்வொன்றும் ஒரு தங்கப் பதக்கத்தையும் ஒரு பொற்கிழியையும் (பணமுடிப்பு) கொண்டதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. (T. Chowdiah) Tirumakudalu Chowdiah (ஆங்கிலம்)

வெளி இணைப்புகள்[தொகு]