திறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திறை என்பது, பணிவு அல்லது அடங்கியிருத்தலுக்கு அடையாளமாக இன்னொருவருக்குக் கொடுக்கப்படும் பொருள் (செல்வம்) ஆகும். இது பணம், பொருள் போன்றவை மட்டுமின்றி, வலுக்கட்டாயமாக வலிமை குறைந்தவர் மீது திணிக்கப்படும் வணிக ஒப்பந்தங்கள் உருவிலும் இருக்கலாம். பொதுவாக, திறையைச் செலுத்தாவிட்டால் அதற்குரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்ற பயத்தின் அடிப்படையிலேயே திறை கொடுக்கப்படுகின்றது. முற்காலத்தில், வலிமை கொண்ட நாடுகள் மற்ற நாடுகளின் மீது படையெடுத்து அடிப்படுத்தியோ ஒப்பந்தங்கள் போன்ற வேறு வழிகள் மூலமோ அவற்றிடமிருந்து ஆண்டுதோறும் திறை பெறும் வழக்கம் இருந்தது. பொதுவாக, வலிமை குறைந்த நாடுகள், வலிமை கொண்ட நாடுகளுக்குத் திறை செலுத்தி வந்தன. இவ்வாறு திறை செலுத்திய நாடுகள் சிற்றரசுகள் எனப்பட்டன. நாடுகள் மட்டுமன்றி பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி போன்ற வணிக அமைப்புக்கள் கூட சிற்றரசர்களிடமிருந்து திறை பெற்றமைக்கான சான்றுகள் உண்டு.

பெரிய வலிமைமிக்க அரசுகளுடன் கூட்டணி வைத்துக்கொண்ட சிறிய அரசுகளும், மேற்படி பெரிய அரசுகளுக்குத் திறை செலுத்தும் வழக்கம் இருந்தது. இது, பொதுவாக, போர்களுக்குப் படை திரட்டுதல் முதலியவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. கி.மு ஐந்தாம் நூற்றாண்டில், டேலியன் கூட்டமைப்பைச் சேர்ந்த நகரங்கள், அக்கூட்டமைப்பிலிருந்த வலிமைமிக்க நகரான ஏதென்சுக்குத் திறை செலுத்தின.

சீனாவில் திறை[தொகு]

மிகப் பழங்காலத்திலேயே சீனாவில் திறை செலுத்தும் முறை நிலவி வந்தது. இது சிற்றரசுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு நிருவாக வழிமுறையாக மட்டுமன்றி, சீனாவுக்குள் வணிகம் புரிவதற்கான உரிமை தொடர்பிலும் பயன்பட்டது. திறை செலுத்தும் வெளிநாடுகள், பேரரசின் பாதுகாப்புடனும், அதன் விதிமுறைகளுக்கு அமைவாகவும் சீனாவுக்குள் இருபக்க வணிகத்தில் ஈடுபடக்கூடியதாக இருந்தது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=திறை&oldid=1478543" இருந்து மீள்விக்கப்பட்டது