திரு. வி. க. நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரு. வி. க. நூலகம் என்பது தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மேலப்பாதி கிராமத்தில் உள்ள ஒரு நூலகமாகும்.[1] இந்த நூலகம் 1946 நவம்பர் 15 அன்று தன்னார்வலர்களால் தொடங்கப்பட்டு[2] தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு சுமார் 19,000 நூல்கள் உள்ளன. வரலாறு, அரசியல், பொதுவுடமை, கதைகள், சிறுகதைகள், புதினங்கள், வாழ்க்கை வரலாறு, தொழில் எனப் பல்துறை நூல்கள் இங்கு உள்ளன.

துவக்கம்[தொகு]

1946 ஆம் ஆண்டு சு.பாலகிருஷ்ணன், கோவிந்தராஜன், மாரியப்பன் ஆகிய மூன்று நண்பர்கள் சேர்ந்து "எல்லோருக்கும் படிக்க உதவியாக இருக்கும்" என்று எண்ணி சு. பாலகிருஷ்ணன் வீட்டுத் திண்ணையில் 46 புத்தகங்களுடன் இந்த நூலகத்தைத் தொடங்கினார்கள். சு.பாலகிருஷ்ணன் தனது 87வது அகவையில் தற்போது இந்த நூலகத்தைத் தொடர்ந்து பேணி வருகிறார்.

நூல் சேகரிப்பு[தொகு]

15.11.1946-இல் 46 நூல்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்நூலகம், இன்று 15,000க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டு திகழ்கிறது. இந்நூலக நூல்கள் அனைத்தும் நூலாசிரியர்கள், நூல் வெளியிடுவோர், அறக்கட்டளைகள், வெளிநாட்டு தூதுவர்கள் என பலரிடம் இருந்து அன்பளிப்பாக பெறப்பட்டவையாகும். தருமபுரம், திருவாவடுதுறை. திருப்பனந்தாள் ஆதீனங்கள் தங்களது வெளியீடுகள் அனைத்தையும் தொடர்ந்து இந்நூலகத்திற்கு அளித்து வருகின்றனர். பொள்ளாச்சி நா. மகாலிங்கம், ஏ.வி்.எம் அறக்கட்டளை, மணிவாசக பதிப்பக உரிமையாளர், எழுத்தாளர் சிவசங்கரி, கோலாலம்பூர் ஆறுமுகம் ஆகியோர் அவ்வப்போது நன்கொடை அளித்து வருகின்றனர். ஆண்டுவிழா, பொன்விழா, மணிவிழா. பவளவிழா. வைரவிழா. பிறந்தநாள். திருமணங்கள் போன்ற இனிய நிகழ்ச்சிகளைக் கொண்டாடும் அன்பர்கள் நிறுவனங்கிடமிருந்து அந்நிகழ்ச்சி நினைவாக நூல்கள் அளித்திட வேண்டி நேரிலும் மடல் மூலமும் தொடர்பு கொண்டு நன்கொடைகள் பெற்று நூல்கள் சேகரிக்கப்படுகின்றன. அரசினர் பரிசு, தஞசை தமிழ்ப்பல்கலைக்கழக ராஜராஜன் விருது, சாகித்ய அகாடமி விருது போன்ற பரிசுகளை வென்ற நூல்களை வாங்கி சேர்த்திட இந்நூலகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இதழ்கள்[தொகு]

விடுதலை, ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், கலைகதிர், அமுதசுரபி, ஓம்சக்தி, ஞானசம்பந்தம், குமரகுருபரர், மெய்கண்டார், இந்துக்கள், மக்கள், அச்சமில்லை, வசந்த இதழ், தர்ம சக்கரம் உள்ளிட்ட பல இதழ்கள் நூலகத்திற்கு வருகின்றன.

நிதி உதவி[தொகு]

தமிழ்நாடு காந்தி நினைவு நிதி மானியமாக மதுரையிலிருந்து 1956 முதல் 1958 வரை 75:25 என்ற விகிதத்தில் காந்திய இலக்கியங்கள் தருவிக்கப்பெற்றன. கல்கத்தாவில் உள்ள இராஜராம் மோகன்ராவ் நூலக அறக்கட்டளை சார்பாக 1988, 1991, 1994, 2001 ஆண்டுகளின் பல நூல்களும் தளவாடப்பொருள்களும் வாங்கப்பட்டன.

கட்டிடம்[தொகு]

மேலப்பாதி ஊரினைச் சார்ந்த சுப்பிரமணியன் என்பவர் இந்து உதவிபெறும் பள்ளி நிர்வாகத்தை ஏற்று அப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி அப்பள்ளியின் முதல் தளத்தில் இந்நூலகத்தை இயக்கி வருவதற்கு ஏற்பாடுகள் செய்தார்.[3]

அரிய நூல்கள்[தொகு]

இந்நூலகத்தில் திரு.வி.க. தமிழ்கொடை 24 தொகுதிகள், குன்றக்குடி அடிகளார் நூல்கள், விபுலானந்தரின் யாழ்நூல், பன்னிரு திருமுறைகள், வைணவம் சார்ந்த அரிய நூல்கள் என பல நூல்கள் உள்ளன.

வருகைபுரிந்தோர்[தொகு]

இந்நூலகத்திற்கு திருவாவடுதுறை ஆதீனம் குருமகாசன்னிதானம், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, கி.ஆ.பெ.விஸ்வநாதன், பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் வருகைதந்து சிறப்பித்துள்ளனர்.

நூலகர்[தொகு]

இந்நூலகத்தின் நூலகராக பொறுப்பு வகிப்பவர் சு.பாலகிருஷ்ணன் அவர்கள். இவர் 1952-ல் ஆசிரியர் பயிற்சி முடித்து இந்து துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். படிக்கும் காலத்தில் நண்பர்களுடன் வீட்டிலேயே குறைந்த நூல்களுடன் ஒரு நூலகத்தை துவக்கினார். அதுவே பின்னாளில் திரு.வி.க நூலகம் என்ற பெயரில் பள்ளி வளாகத்தில் விரிவாக்கப்பட்டது. இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின்னர் முழுநேரமாக நூலகத்தின் பொறுப்பாளராக இருந்து செயல்பட்டு நூலகத்தை விரிவாக்கினார். 1947-ல் முதல் இன்றுவரை அந்நூலகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

உசாத்துணைகள்[தொகு]

  1. தினத்தந்தி, தஞ்சாவூர் ஸ்பெஷல், “நூலகச்செம்மல்” 12.10.2008 பக்.II
  2. ச.அ.சம்பத்குமார் நூலகம் பேசுகிறது. மலர் - 1, இதழ்- 4, டிசம்பர் 2013 பக்.88
  3. ச.அ.சம்பத்குமார் நூலகம் பேசுகிறது. மலர் - 1, இதழ்- 4, டிசம்பர் 2013 பக்.88
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரு._வி._க._நூலகம்&oldid=3216272" இலிருந்து மீள்விக்கப்பட்டது