திருவேதிகுடி வேதபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருவேதிகுடி வேதபுரீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருவேதிகுடி
பெயர்:திருவேதிகுடி வேதபுரீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:வேதிகுடி, திருக்கண்டியூரிலிருந்து 1 கி. மீ. தொலைவில் உள்ளது.
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வாழைமடுநாதர்.
தாயார்:மங்கையர்க்கரசி.
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:வேத தீர்த்தம்
ஆகமம்:சிவாகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், அப்பர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

திருவேதிகுடி வேதபுரீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரமனும் வேதமும் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 14வது சிவத்தலமாகும்.

தல வரலாறு[தொகு]

  • வேதி - பிரமன். பிரமன் பூசித்த தலமாதலின் வேதிகுடி என்று பெயர் பெற்றது. வேதம் வழிபட்டதாகவும் கூறுவர். ( 'விழுதிகுடி' என்பது மருவி 'வேதிகுடி' ஆயிற்று என்பர் ஒருசாரார்.)
  • சுவாமி வாழைமடுவில் உற்பத்தியானதால் 'வாழைமடு நாதர் ' என்றும் அழைக்கப்படுகிறார்.

தல சிறப்புக்கள்[தொகு]

  • மகாமண்டபத்தில் உள்ள விநாயகர் (தலவிநாயகர்) வேதவிநாயகர் எனப்படுகிறார்.
  • இறைவன் நான்கு முகங்களாலும் அருளிச் செய்யும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்துக் கேட்கும் நிலையில்; இடக்காலை உயரமாக வைத்து அற்புதமாகக் காட்சித் தருகிறார்.
  • முதலாம் ஆதித்த சோழன் காலக்கோயிலான இக்கோயிலின் கல்வெட்டில், சுவாமி "வேதிகுடி மகாதேவர் " என்றும், "பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர் " என்றும் குறிக்கப்படுகிறார்.

திருவையாறு சப்தஸ்தானம்[தொகு]

திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்[1].

திருத்தலப் பாடல்கள்[தொகு]

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (காய் 4 / மா புளிமா)

நீறுவரி யாடரவொ டாமைமன வென்புநிரை பூண்ப ரிடபம்

ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ லாதிய ரிருந்த விடமாம்

தாறுவிரி பூகமலி வாழைவிரை நாறவிணை வாளை மடுவில்

வேறுபிரி யாதுவிளை யாடவள மாரு(ம்)வயல் வேதி குடியே. 1


செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானு ரிவைபோர்த்

தையமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியு மண்ண லிடமாம்

வைய(ம்)விலை மாறிடினு மேறுபுகழ் மிக்கிழி விலாத வகையார்

வெய்யமொழி தண்புலவ ருக்குரைசெ யாதவவர் வேதி குடியே. 6 - 078 திருவேதிகுடி, திருஞானசம்பந்தர் தேவாரம், மூன்றாம் திருமுறை

திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

கட்டளைக் கலித்துறை

கையது காலெரி நாகங் கனல்விடு சூலமது

வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன்

செய்யினி னீல மணங்கம ழுந்திரு வேதிகுடி

ஐயனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே. 1


பத்தர்க ணாளு மறவார் பிறவியை யொன்றறுப்பான்

முத்தர்கண் முன்னம் பணிசெய்து பாரிட முன்னுயர்த்தான்

கொத்தன கொன்றை மணங்கம ழுந்திரு வேதிகுடி

அத்தனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.4 - 090 திருவேதிகுடி, திருநாவுக்கரசர் தேவாரம், நான்காம் திருமுறை

இவற்றையும் பார்க்க[தொகு]

திருவேதிகுடி பல்லக்கு, திருவையாறு சப்தஸ்தான விழா, ஏப்ரல் 2008

வெளி இணைப்புக்கள்[தொகு]

  1. திருவையாறில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி, தினமணி, மே 16, 2014