திருவண்ணாமலை இடைத்தேர்தல் 1963

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1963 இல் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல், தமிழகம் மற்றும் அனைத்திந்திய அரசியல் மாற்றத்திற்கு வித்திட்ட ஒரு நிகழ்வாகும்.

திருவண்ணாமலை இடைத் தேர்தல்[தொகு]

1962 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரசு சார்பில் போட்டியிட்ட ப.பழனிப்பிள்ளை வெற்றிபெற்றார். காங்கிரசு அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.திருவருணை சட்டமன்ற உறுப்பினர் பழனிப்பிள்ளை 1963 ஆம் ஆண்டு சனவரியில் வயோதிகம் காரணமாகக் காலமானார். திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

1962 பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விவரம்,

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1962 பி. பழனி பிள்ளை காங்கிரசு 35148 50.06 பி. யு. சண்முகம் திமுக 33399 47.57

தேர்தல் மும்முரம்[தொகு]

1962 பொதுத்தேர்தலிலேயே , தி.மு.கழக வளர்ச்சியை உணர்ந்திருந்த காமராசர் , அவரது அமைச்சர்களுடன் பத்து நாட்களுக்கு மேல் திருவருணையில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார். தேர்தலுக்கு முந்தய நாள் திருவருணை நகருக்கு 48 இலட்சம் செலவில் குடிநீர்த்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

தி.மு.கழகம் பிரச்சாரம்[தொகு]

ஆந்திர மாநிலத்திற்கு தாரைவார்க்கப்பட்ட வடாற்காடு மாவட்டப் பகுதிகளான ,

  • சித்தூர் ,
  • சந்திரகிரி(திருப்பதி)-ரேணிகுண்டா ,
  • பலமநேரி ,
  • குப்பம் பகுதிகளால் வடாற்காடு மாவட்ட மக்கள் காங்கிரஸ் மீது அதிருப்தி அடைந்து இருந்தனர்.

மேலும் தி.மு.கழகம் , காமராஜர் பிரிவினையின்போது "குளமாவது (தேவிகுளம்) , மேடாவது (பீர்மேடு) எல்லாம் இந்தியாவில் தானே இருக்கிறது. கவலைப்படாதீர் " என்றார் , இதை முன்னிலைப் படுத்தியே தி.மு.கழகம் பிரச்சாரம் செய்தது.

சைவமும் , வைணவமும் ஒருங்கே விளைந்த வடாற்காட்டின் வழமை பறிபோய்விட்டது எனவும் பிரச்சாரம் செய்தனர்.

1963 இடைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

பத்து நாட்களுக்கு மேல் தேர்தல் பணியாற்றியும் , மதுரை நகரைவிட அதிகச்செலவில் குடிநீர்த்திட்டம் என்று அறிவித்தபோதும், மக்களின் முடிவுகள் காமராசருக்கு அதிர்ச்சியளித்தன. தி.மு.கழக வேட்பாளர் ப.உ.சண்முகம் 38,666 வாக்குகள் பெற்றார். காங்கிரசு வேட்பாளர் பத்ராசலம்(தமிழ்ப்படுத்தி , அண்ணாமலை என்றும் அழைப்பர் ) 37,191 வாக்குகள் பெற்றார். காங்கிரசு வேட்பாளரை விட தி.மு.கழக வேட்பாளர் ப.உ.சண்முகம் 1475 வாக்குகள் அதிகம் பெற்றுத் திருவருணை சட்டமன்ற உறுப்பினர் ஆக தேர்ந்தெடுக்கப்பெற்றார்.[1]

  • 1963 இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விவரம்,
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1963 ப.உ.சண்முகம் திராவிட முன்னேற்ற கழகம் 38666 52.13 பத்ராசலம் (அண்ணாமலை) காங்கிரசு 37191 46.57

தி.மு.கழகம் வெற்றிப்பறை[தொகு]

திருவண்ணாமலை இடைத் தேர்தல் வெற்றியை தி.மு.கழகம் தமிழகம் முழுவதும் கொண்டாடியது, முக்கிய நகரங்களில் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. வடாற்காடு மாவட்டத்தின் மிகப் பெரிய நகர தொகுதியான திருவருணை தொகுதியைத் தி.மு.கழகம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, மாவட்டமே விழாக்கோலம் பூண்டது. எங்கும் தி.மு.கழக ஆதரவாளர்கள் இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாடினர் .

  1. திருவண்ணாமலை,
  2. ஆற்காடு,
  3. வேலூர்,
  4. வந்தவாசி,
  5. குடியாத்தம்,
  6. போளூர் ஆகிய நகரங்களில் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

கோயம்புத்தூரில் அண்ணா முழக்கம்[தொகு]

தி.மு.கழக பொதுச் செயலாளர் அண்ணா (காஞ்சீவரம் .அண்ணாதுரை) கோவையில் நடைபெற்ற வெற்றி மாநாட்டில் ," ஆளுங்கட்சியாக விளங்குகிற காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை இழந்து வருகிறது. திருவண்ணமலையில் நடைபெற்றுமுடிந்த தேர்தல் முடிவு இக்கருத்தையே வெளிபடுத்துகிறது.அடுத்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைவிட்டு ஓடுகிற அளவிற்கு (வெளியேற்றும்) அளவிற்கு தி.மு.கழகம் பலம் பெற்று வருகிறது " என்று அண்ணாதுரை முழங்கினார்.

வேலூரில் அன்பழகன் பேச்சு[தொகு]

வேலூர்க் கோட்டை மைதானத்தில் கழக பேச்சாளர் க. அன்பழகன் காங்கிரசை பலவாறு தாக்கிப்பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

இதே போல், திருச்சிராப்பள்ளியில் கருணாநிதி, மதுரையில் ஆலடி அருணா ஆகியோர் பேசினர். திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சி. பா. ஆதித்தனார் முழங்கினார்.

மக்கள் மனதில் அண்ணாவின் வரிகள்[தொகு]

அரசின் ஆக்கப் பணிகளைவிட அண்ணா கூறிய,

  • வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது.
  • காகிதப் பூ மணக்காது; காங்கிரசு சமதர்மம் இனிக்காது.
  • இந்தியை மத்திய அரசு திணிக்கிறது; மெல்லத் தமிழ் இனிச் சாகும், என்ற கருத்துகளையே மக்கள் நம்பியதைத் திருவண்ணாமலை தேர்தல் நாட்டுக்குத் தெரிவித்தது.

காமராசர் கவலை[தொகு]

  • எல்லாருக்கும் இலவசக் கல்வி,
  • சத்துணவு,
  • சீருடைகள்,
  • அணைக்கட்டுகள் (திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தின் பெரிய சாத்தனூர் அணைக்கட்டு ) ,
  • நெடுஞ்சாலை அமைப்புகள் போன்ற அரிய திட்டங்களை செயற்படுத்திய போதும், திருவருணைத் தேர்தல் முடிவுகள் காமராசருக்குப் பெரும் துயரைத்தையளித்தன.

காமராசர் திட்டம்[தொகு]

திருவருணையில் தோல்வியுற்ற காமராசர், "கோட்டையில் அமர்ந்துக்கொண்டு, கோப்புகளைப் பார்த்துக்கொண்டு, அவ்வப்போது தில்லி சென்று நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்றும் தி.மு.கழகத்தின் வளர்ச்சியை தடுக்கமுடியாது" என்றும் புரிந்து கொண்டதால் ஆட்சியைத் துறந்து, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினார். பட்டி-தொட்டிகள், நகரம்-மாநகரம், எனக் கட்சியை வளர்க்க முற்பட்டார். தனது திட்டத்தை நேருவுக்கு தெரிவித்தார். தேசத்திலும், காங்கிரசின் மதிப்பு குறைந்து வருவதை அறிந்த நேரு மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் ஆட்சிப்பணியையும், அதிகாரத்தையும் துறந்து, கட்சிப் பணியாற்ற திட்டமிட்டார். இதுவே இந்திய அரசியல் வரலாற்றில், இன்றுவரை காங்கிரசு இருப்பதற்கு காரணமான காமராசர் திட்டம் ஆகும்.

தி.மு.கழகம் வெற்றி[தொகு]

காமராசர் திட்டம் தீட்டி கட்சிப்பணி செய்தும், தி.மு.கழக வெற்றியை தடுக்க முடியவில்லை. 1967இல் நடந்த பொதுத்தேர்தலில் , தி.மு.கழகம் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது.

கூட்டணி கட்சி வாக்குகள் வாக்கு % போட்டியிடட இடங்கள் வென்ற இடங்கள் மாற்றம்
திராவிட முன்னேற்றக் கழக முன்னணி[2]


இடங்கள்: 179
மாற்றம்: +123
வாக்குகள்: 8,051,437
வாக்கு %: 52.59%

திமுக 6,230,556 40.69% 174 137 +87
சுதந்திராக் கட்சி 811,232 5.30% 27 20 +14
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 623,114 4.07% 22 11 +11
பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சி 136,188 0.89% 4 4 +4
முஸ்லிம் லீக் 95,494 0.62% 3 3 +3
சங்கதா சோஷ்யலிஸ்ட் கட்சி 84,188 0.55% 3 2 +2
திமுக ஆதரவு சுயேட்சைகள் 70,665 0.46% 2 2 +2
இந்திய தேசிய காங்கிரசு
இடங்கள்: 51
மாற்றம்: -88
வாக்குகள்: 6,293,378
வாக்கு %: 41.10%
காங்கிரசு 6,293,378 41.10% 232 51 -88
மற்றவர்கள்
இடங்கள்: 4
மாற்றம்: -5
சுயேட்சைகள் 591,214 3.86% 246 1 -4
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 275,932 1.80% 32 2
ஃபார்வார்டு பிளாக் 44,714 0.29% 1 1 -2
இந்திய குடியரசுக் கட்சி 31,286 0.20% 13 0
பாரதீய ஜன சங் 22,745 0.15% 24 0
மொத்தம் 11 கட்சிகள் 15,310,702 100% 234

சிறப்பு[தொகு]

ஒரே இடைத்தேர்தல் மூலம் அகில இந்திய அரசியல் வரலாறில் மிகப்பெரியத் திருப்புமுனை ஏற்படுத்தியது திருவருணை இடைத்தேர்தல். மேலும் தமிழ்நாட்டு மக்களின் திராவிட, மொழியிடை உணர்வை எடுத்துக்காட்டியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மூத்தத் திராவிடத் தலைவர் இறப்பு" (in ஆங்கிலம்). ரெடிப்.காம். 12 ஏப்ரல் 2007. பார்க்கப்பட்ட நாள் சூலை 24, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: unrecognized language (link)
  2. "Voting Pattern in the Fourth General Election. I: D M K Success in Madras". Economic and Political Weekly (Economic and Political Weekly) 2 (24): 1083–88. 17 June 1967. http://www.jstor.org/stable/4358065. பார்த்த நாள்: 18 November 2009.