தியானலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்வமத தியானலிங்கம் (Dhyanalinga) என்பது தியானம் (Meditation) என்றால் என்ன என்ற உணர்வில்லாத ஒருவரையும் ஆழ்ந்த தியான நிலைக்கு எடுத்துச்செல்லக் கூடிய ஆற்றல் கொண்ட லிங்க வடிவிலான சக்தியூட்டப்பட்ட கல்லைக் குறிக்கும். இது கோயில்களில் இருக்கும் மற்ற பூஜை லிங்கத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆழமான தியான நிலையில் இருக்கும் தியானியர்களிடமிருந்து பொங்கும் ஆற்றலை உள்வாங்கிச் சேமித்து வைப்பதினால் தியானலிங்கம் சாத்தியாமாகியிருக்கிறது. லிங்க வடிவம், அறிவியல் ரீதியாக ஆற்றலை சேமித்து வைக்கும் வடிவமாக இருப்பதால், இவ்வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஒரு குறிப்பிட்ட எந்த மதத்தினையும் சார்ந்திராமல், யோக அறிவியலின் சாரமாக அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

தியான நிலையில் இருக்கும் தியானியர்களின் எல்லையற்ற சக்தியை சேமித்து, தியானலிங்கத்தை உருவாக்க, பல்வேறு யோகிகள் முயன்று, பல்வேறு காரணங்களால் அவை வெற்றியடையவில்லை. பின்னர் 1995க்கு பின், தென்னிந்தியாவில் இருக்கும் யோக குரு என்று அழைக்கப்படும் சற்குரு ஜகி வாசுதேவ் அவர்களின் முயற்சியாலும், பல தியான அன்பர்களின் தீவிரமான பிராணபிரதிஷ்டையாலும் தியானலிங்கம் சக்தியூட்டப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் தொடர்ந்த பிராணபிரதிஷ்டை, சூன் 24, 1999 அன்று நிறைவு பெற்றது. இந்த தியானலிங்கத்தின் அளப்பறிய ஆற்றலை உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு நல்வாழ்வு பெற ஏதுவாக, நவம்பர் 23, 1999 அன்று உலகிற்கு அர்பணிக்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்தியாவின் மாநிலம், தமிழ்நாட்டில், கோவை மாநகருக்கு மேற்கே, சுமார் 30 கி.மீ. தொலைவில், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் இருக்கும் வனப்பகுதியில் இந்த தியானலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் மூன்று பக்கம் மலைகளாலும் ஒரு பக்கம் வனப்பகுதியாலும் சூழப்பட்டுள்ளது.

அமைப்பு[தொகு]

நீள்கோள வடிவ குவிமுக மாடம்

தியானலிங்கம், 13 அடி, 9 அங்குலம் உயரம் கொண்டதும், ஒரே கல்லால் ஆனதுமாகும். இதனைச் சுற்றி 76 அடி விட்டமுள்ள, சிமெந்து மற்றும் இரும்பு பயன்படுத்தாமல் கட்டப்பட்டுள்ள ஒரு கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவறை நீள்கோள வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தியானலிங்கத்தின் தீவிர சக்தியை குளிர்விக்கும்படியாக, அதனைச் சுற்றி “ஜலசீமா” என்னும் நீர்ச்சுற்று அமைக்கப்பட்டுள்ளது.

தவக்குகைகள்[தொகு]

தியானலிங்கங்தின் கருவறையில் இருக்கும் சக்தி வாய்ந்த அதிர்வலைகளை பயன்படுத்தும் வகையிலும், சாதாரண மனிதனும் தியான நிலையை உணர்வதற்கும் ஏதுவாக 3’x4’x4’ அளவுள்ள தவக்குகைகள் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வருபவர்கள் சிறிது நேரம் இந்த தவக்குகைகளில் அமர்ந்து, தியானலிங்கத்தின் சக்தியை பெற்றுச் செல்வதோடு, தியான அனுபவத்தையும் பெற்றுச்செல்ல ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

சர்வமத தூண்[தொகு]

சர்வமத தூண்

யோக அறிவியலின் பயனை, அனைத்து மதத்தினரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும், உலக மக்கள் அனைவரையும் வரவேற்கும் விதமாகமாகவும், அனைத்து மதங்களின் சின்னங்களும் பொறிக்கப் பட்டு உருக்கப்பட்ட தூண் ஆகும். இது 14 அடி உயரமுள்ள, ஒரே கல்லிலான சர்வமத தூண் ஆகும்.

சிற்பங்கள்[தொகு]

தியானலிங்க கருவறைக்கு வெளியே, ஓர் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் இரு புறங்களிலும், பக்கத்திற்கு மூன்றாக, ஆறு சுவர் சிற்பங்கள், தென்னிந்திய யோகிகளின் வாழ்க்கையை சித்தரிக்கின்றன. அவைகள்

  • கண்ணப்ப நாயனார்: குழந்தையின் அன்புணர்வுடன் தன் கண்ணையே சிவனுக்கு அளிக்கிறார்.
  • அக்காமாதேவி: பக்தியும் துறவும் மிகுந்த அக்கம்மாதேவி, அரசனின் கட்டளை ஏற்று, தான் உடுத்தியிருந்த ஆடை உட்பட அனைத்தையும் துறந்து, உடலுணர்வு அற்ற நிலையில் இருக்கிறார்.
  • பூசலார்: தனது உள்ளத்தில் கட்டிய கோவிலுக்கு இறைவன் எழுந்தருளல்.
  • மெய்ப்பொருள் நாயனார்: ஒரு சிவபக்தன், தன் உயிருக்கும் மெலாக சிவனை போற்றுகிறான் என்பதற்கான காட்சி.
  • சற்குரு பரப்பிரம்மா: தடைப்பட்ட சாதகன் ஒருவனுக்கு, தெய்வீக குரு தன் அருளாற்றலை வழங்குதல்.
  • சதாசிவ பிரம்மேந்திரர்: உடல் உணர்வு கடந்த யோகி.
நுழைவாயிலின் வெளியே அமைந்துள்ள நந்தி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியானலிங்கம்&oldid=3441786" இலிருந்து மீள்விக்கப்பட்டது