தாப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாப்பா
தாப்பா
Tapah
塔巴
அலுவல் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை:
கேமரன் மலையின் அடிவாசல்
நாடுமலேசியா
மாநிலம்பேராக்
அமைவு1880
அரசு
 • நகராண்மைத் தலைவர்
(யாங் டி பெர்துவா)
ஹாஜி ரசாலி பின் பாக்கார்
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்1,28,270 (மக்கள் கணக்கெடுப்பு 2,010)
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)கண்காணிப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது (ஒசநே)
இணையதளம்www.mdtapah.gov.my
telecentre.my

தாப்பா (Tapah) மலேசியாவின் பேராக் மாநிலத்தில் வளர்ச்சி பெற்று வரும் ஒரு சிறிய நகரம். இது பத்தாங் பாடாங் மாவட்டத்தில் இருக்கிறது.[1] இங்குள்ள நன்னீர் ஏரிகளில், தாப்பா எனும் ஒரு வகையான மயிரை மீன் அதிகமான அளவில் காணப்பட்டன. அந்த மீனின் பெயரே இந்த நகரத்திற்கும் வைக்கப்பட்டது. வேறு ஒரு பெயர்த் தோற்றத்தையும் இங்குள்ள உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள்.

முன்பு காலத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ்ந்தனர். பிரச்னைகள் வந்தால் விட்டுக் கொடுத்துப் போய்விடுவார்கள். அவ்வாறு விட்டுக் கொடுத்துப் போகும் தன்மைக்கு திடாப்பா என்று பெயர். ஆகவே, Tiada Apa எனும் மலாய்ச் சொல்லில் இருந்து Tapah எனும் சொல் உருவாகி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

வரலாறு[தொகு]

பேராக் மாநிலத்தைப் பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் ஆறாவதாக சுல்தான் முக்காடாம் ஷா இப்னி சுல்தான் மன்சூர் ஷா என்பவர் 1609 லிருந்து 1619 வரை ஆட்சி செய்தார்.

அந்தக் காலகட்டத்தில் கோழிச் சண்டை என்பது ஒரு வகையான ஆடுகளம். மாநிலம் முழுமையும் பரவலாக நடைபெற்றது. பின்னாளில் அதுவே ஒரு சூதாட்டக் களமாகவும் உருவெடுத்தது.[2]

வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் சேர்ந்த மக்கள் இந்த கோழிச் சண்டை விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். இவர்களில் ஒருவர் தோக் துவா சக்தி என்பவர். இவர் அரச பரம்பரையைச் சேர்ந்தவர். தாப்பாவில் பல கிராமங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தார்.

தோக் துவா சக்தி[தொகு]

கோழிச் சண்டை விளையாட்டுகளினால் தன் சொத்துக்களை எல்லாம் இழந்தார். தன்னுடைய கிராமங்களை விற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.[3] கடைசியில் இவர் பிச்சைக்காரரைப் போல ஒரு தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டார். ஓர் இரவு அவர் ஒரு விநோதமான கனவு கண்டார்.[4]

பத்தாங் பாடாங் கழிமுகத்திற்குச் சென்றால், அங்கே ஒரு பெரிய மீன் கிடக்கும். அந்த மீனின் வயிற்றுக்குள் நிறைய தங்க காசுகள் இருக்கும். அவற்றின் மூலமாக இழந்து போன கிராமங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனும் கனவு.

அதன் பிறகு, தோக் துவா சக்தி தன்னுடைய நிலபுலன்களையும் செல்வங்களையும் மீண்டும் பெற்றார். ஆனால், தாப்பா மீன்களைச் சாப்பிடக் கூடாது என்பது ஒரு சாபக் கேடு.

அதிலிருந்து அவர் வாழ்ந்த இடத்திற்கு தாப்பா எனும் பெயர் வந்தது. இப்படி ஒரு இதிகாசக் கதை இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது.

நிலவியல்[தொகு]

கால மாற்றங்களுக்கு ஏற்றவாறு இந்த நகரம் நவீன மயமாகி வருகிறது. பல புதிய சாலைகள் இந்த நகரை அலங்கரிக்கின்றன. மேற்குப் பகுதியில் இருக்கும் தெலுக் இந்தான் நகரை இந்த நகரத்தின் புதிய நெடுஞ்சாலைகள் இணைக்கின்றன. முன்பு காலங்களில் போக்குவரவுகளுக்கு ஆறுகளே பிராதானமாக விளங்கின. ஆனால், இப்போது, நவீனப்படுத்தப்பட்ட சாலைகள் அந்தப் பங்கைச் செயல்படுத்துகின்றன.

தாப்பா நகரம், கோலாலம்பூர்ஈப்போ நெடுஞ்சாலைக்கு அருகில் இருக்கிறது. இந்த நகரத்திற்கு அருகாமையில் பீடோர், சுங்கை, கம்பார், துரோலாக் போன்ற நகரங்கள் உள்ளன. மலேசியாவில் புகழ் பெற்ற கேமரன் மலைக்குச் செல்ல வேண்டும் என்றால், தாப்பாவில் இருந்துதான் செல்ல வேண்டும்.[5][6]

பத்து விழுக்காடு இந்தியர்கள்[தொகு]

சிம்பாங் பூலாய் நகரில் இருந்து கேமரன் மலைக்குச் செல்ல புதிய மலைச்சாலை போடப்பட்டுள்ளதால், பழைய தாப்பா பாதையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, அண்மைய காலங்களில் குறைந்து வருகிறது.

தாப்பா நகரில் மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பவர்கள் மலாய்க்காரர்கள் ஆகும். அடுத்த நிலையில் 15 விழுக்காடு சீனர்களும் 10 விழுக்காடு இந்தியர்களும் இருக்கிறார்கள். இங்கு இனப் பாகுபாடு இல்லாமல் மூன்று இன மக்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.

சுற்றுச் சூழல் சுற்றுலாத் தளங்கள்[தொகு]

ஈப்போ மாநகரத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தாப்பா நகரம் இருக்கிறது. இது ஓர் அமைதியான நகரமாகும். பாத்தாங் பாடாங் மாவட்டத்தின் நிர்வாக மையங்களில் ஒன்றாக இந்த நகரம் விளங்குகிறது.[7] இன்னொரு நிர்வாக மையம் தஞ்சோங் மாலிம் நகராகும்.

தாப்பா நகருக்கு சுற்றுப்பயணிகள் வருவது குறைவு என்றாலும், இந்த நகரைச் சுற்றிலும் பல அருமையான சுற்றுச் சூழல் சுற்றுலாத் தளங்கள் உள்ளன.[8] மலேசியாவில் புகழ்பெற்ற கேமரன் மலைக்குச் செல்லும் நுழைவாயிலாகவும் இந்த நகரம் அமைகின்றது.

தாப்பா நகரைச் சுற்றிலும் பல பொழுதுபோக்குச் சார்ந்த வனப் பரப்புகள் உள்ளன.[9] கோலா கோ, லாத்தா கிஞ்சாங்[10] போன்றவை குறிப்பிடத்தக்கவை. தவிர, பூர்வீகக் குடிமக்களின் கிராமங்களும் நிறைய உள்ளன. மலேசியாவின் பல உயரமான மலைகளைக் கொண்ட மத்தியமலைத் தொடரும் தாப்பா நகருக்கு அருகில்தான் சார்ந்து செல்கிறது.

லாத்தா கிஞ்சாங் பழங்குடியினர் கிராமம்[தொகு]

தாப்பா நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் லாத்தா கிஞ்சாங் எனும் நீர்வீழ்ச்சி இருக்கிறது. செண்டிரியாங் எனும் சிறுநகரத்தையும் தாண்டிச் செல்ல வேண்டும். இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள காடுகளில் பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு என ஒரு கிராமமும் உள்ளது. அதைத் தவிர, தாப்பா எல்லைப் பகுதியின் மலை அடிவாரக் காடுகளில் பல பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன.

பத்து மெலிந்தாங், லூபுக் காத்தாக், டூசுன் மூடா, ஜாலான் காச்சு, கம்போங் சூனு எனும் பெயர்களில் கிராமங்கள் உள்ளன.ஒரு காலகட்டத்தில், அவர்களுக்கு காடுகளே வாழ்வதாரமாக இருந்தன. ஆனால், இப்போது அவர்களும் நவீனமயப் பிடியில் சிக்கி பல்வேறு மாற்றங்களைப் பெற்று வருகின்றனர்.

இந்தப் பூர்வீகக் குடிமக்களின் பிள்ளைகளும் உயர்க்கல்விகளைப் பெற்று உயர்ப் பதவிகளிலும் வலம் வருகின்றனர். 2010 ஆண்டு வரை 132 பூர்வீகக் குடிமக்களின் பிள்ளைகள், மலேசியப் பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெற்றுள்ளனர்.[11] பூமிபுத்ரா தகுதியைக் கொண்ட இவர்களுக்கு அரசாங்கம் பல சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது.

பொருளியல்[தொகு]

தாப்பா நகர்ப் பகுதியிலும் அதன் சுற்றுவட்டாரப் புறநகர் பகுதியிலும் வாழும் மக்களின் வருமானம் விவசாயத் தொழிலையே பெரிதும் நம்பி இருக்கிறது. அதில் எண்ணெய்ப் பனை தலையாயத் தொழிலாக விளங்குகிறது. தவிர, நகரத்தைச் சுற்றி பல உற்பத்தி தொழிற்சாலைகளும் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகளில் பல நூறு பேர் வேலை செய்கின்றனர்.

தெலுக் இந்தான் நகருக்குச் செல்லும் சாலயில் இரு மருங்கிலும் பல எண்ணெய்ப் பனைத் தோட்டங்கள் உள்ளன. 1900களில், இந்தத் தோட்டங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்தனர். ஆனால், அவர்களில் பலர் இப்போது புறநகர்ப் பகுதிகளில் வீடுகளை வாங்கி தொழிற்சாலைகள் அல்லது தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்.

அரசுப் பணிகளில் தமிழர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்து விட்டது. குறைந்த எண்ணிக்கையில் தான் தமிழர்கள் அரசு வேலைகளில் நியமிக்கப் படுகின்றனர். அரசாங்க வேலைகளில் தமிழர்கள் தவிர்க்கப் படுகின்றனர் எனும் பொதுவான கருத்து மலேசியா முழுமையும் பரவலாக இன்னும் இருந்து வருகிறது.

இருப்பினும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வு துணை அமைச்சருமான டத்தோ எம். சரவணன் இப்பகுதி வாழ் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவதில் தனி அக்கறை காட்டி வருகிறார்.

இந்தியர்கள் நகர்ப் புறங்களுக்கு மாற்றம்[தொகு]

சில ஆண்டுகளுக்கு முன்பு, தாப்பா நகரைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள், செம்பனைத் தோட்டங்கள் இருந்தன. அண்மைய காலங்களில் அந்தத் தோட்டப் பகுதிகளில் நில மேம்பாட்டுத் திட்டங்கள், வீடமைப்புத் திட்டங்கள், தொழில்துறை திட்டங்கள் உருவாக்கம் பெற்றன. அதனால், தோட்டப் புறங்களில் வாழ்ந்த இந்தியர்கள் நகர்ப் புறங்களுக்கு மாறிச் சென்று விட்டனர்.[12]

இந்தத் தோட்டங்களில் ஒரு சில வயதான இந்தியர்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றனர். ஓரளவுக்கு கல்வி தகுதியுடைய இளைஞர்கள் தாப்பா நகரில் பணி புரிகின்றனர். பட்டம் பெற்ற இளைஞர்கள் கோலாலம்பூர், ஈப்போ, பினாங்கு, ஜொகூர் பாரு, பெட்டாலிங் ஜெயா, சிங்கப்பூர் போன்ற பெரிய நகரங்களுக்குப் புலம் பெயர்ந்து விட்டனர் [13]

தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

இப்போது அந்த ரப்பர் எண்ணெய்ப் பனைத்தோட்டங்களில் வங்காள தேசவர்கள், இந்தோனேசியர்கள், நேப்பாளியர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். தாப்பா சுற்று வட்டாரத் தோட்டங்களில், முன்பு ஒவ்வொரு தோட்டத்திலும் ஒவ்வொரு பள்ளிக்கூடம் இருந்தது. இந்தத் தமிழ்ப்பள்ளிகளில் படித்த பலர் இப்போது அரசாங்க உயர் பதவிகளில் இருக்கின்றனர்.

கல்வி அமைச்சிலும் காவல் துறையிலும் பலர் பல உயரிய பதவிகளில் உள்ளனர். இருப்பினும், அந்தப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து போனதால், இப்போது அந்தப் பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. பல தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டும் விட்டன.

தாப்பா நாடாளுமன்றத்திற்கு உள்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை மேம்பாட்டிற்கும், அவற்றின் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கும் டத்தோ எம். சரவணன், தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறார். செண்டிரியாங் பாரதி தமிழ்ப்பள்ளி, தொங் வா தோட்ட தமிழ்ப்பள்ளி, தாப்பா ரோடு தமிழ்ப்பள்ளி போன்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்க உதவிகளைச் செய்து வருகிறார்.[14]

பொது[தொகு]

அண்மைய காலங்களில் தாப்பா நகரம் சற்று பிரபலம் அடைந்து வருகிறது. நகரில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் 2001ஆம் ஆண்டில் ஒரு சிறைச்சாலை கட்டப்பட்டது. பேராக் மாநிலத்தில் அதுதான் பெரிய சிறைச்சாலை ஆகும். சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் வருகையாளர்களுக்கும் தங்கும் வசதிகளை ஏற்படுத்தி தர ஒரு சின்ன குறுநகரமே உருவாகி வருகிறது.[15]

தாப்பா நாடாளுமன்றத் தொகுதி 1986ஆம் ஆண்டில் இருந்து, பல தவணைகளுக்கு இந்தியர்களின் அரசியல் கோட்டையாக விளங்கி வருகிறது. டான் ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன், டத்தோ எஸ். வீரசிங்கம் போன்றவர்கள் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் சேவையாற்றியுள்ளனர். 2008 பொதுத் தேர்தலில் டத்தோ எம். சரவணன் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த டான் செங் தோ என்பவரை 2,980 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்து வாகை சூடினார்.

மக்களவைக்கு தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர் டத்தோ சரவணன், மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பதவி வகித்தார். 2008 பொதுத் தேர்தலில் ம.இ.கா படுமோசமான தோல்வியை அடைந்தது. நான்கு இந்தியர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர்தான் டத்தோ சரவணன்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tapah is the administrative town of the Batang Padang district, Perak". Archived from the original on 2012-11-13. பார்க்கப்பட்ட நாள் 2013-01-27.
  2. During the reign of Sultan Mukaddam Shah ibni Almarhum Sultan Mansur Shah, the 6th Sultan of Perak, cock fighting was rampant.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Legend has it that in one such cock-fight, the good Dato lost a big wager, resulting in the necessity for him to surrender his kampung to the winner". Archived from the original on 2012-11-13. பார்க்கப்பட்ட நாள் 2013-01-27.
  4. Tok Tua Sakti had a weird dream whereby he was told to go to the estuary of Sungai Batang Padang.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Most tourists usually stop by briefly for meals in Tapah before heading up to Cameron Highlands". Archived from the original on 2012-04-06. பார்க்கப்பட்ட நாள் 2013-01-27.
  6. "This town is also widely considered as the main entry point into the old Cameron Highlands route, which is a winding and narrow road uphill". Archived from the original on 2012-11-13. பார்க்கப்பட்ட நாள் 2013-01-27.
  7. "Tapah is a serene looking town about 60 km south of lpoh and its also one of the two administrative centres for the vast Batang Padang district". Archived from the original on 2012-07-04. பார்க்கப்பட்ட நாள் 2013-01-27. {{cite web}}: no-break space character in |title= at position 40 (help)
  8. "It's a small town but an important centre for some of the most interesting eco-visits and expeditions in the country". Archived from the original on 2012-07-04. பார்க்கப்பட்ட நாள் 2013-01-27.
  9. Tapah is a small town at the foothills of Cameron Highlands and also an important entry point for many visitors from Kuala Lumpur and Singapore.
  10. "Lata Kinjang Waterfall is clearly visible from the North-South Expressway and gives you the impression that the fall is just off the roadside". Archived from the original on 2013-04-04. பார்க்கப்பட்ட நாள் 2013-01-27.
  11. 132 Orang Asli children had secured admission to public institutes of higher learning (IPTA) for the December 2010 intake, of which 114 were Sijil Pelajaran Malaysia (SPM) certificate holders while 18 were Sijil Tinggi Persekolahan Malaysia (STPM) certificate holders.[தொடர்பிழந்த இணைப்பு]
  12. Plantation workers in the manual, semi skilled categories of workers in Peninsular Malaysia
  13. Collective bargaining, Industrial relations, projects and programmes for the improvement of the quality of life of plantation workers especially with regard to education, housing and health of members and their children.
  14. "தாப்பா நாடாளுமன்றத்திற்கு உள்பட்ட 5 தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை மேம்பாட்டிற்கும் அதன் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவதாக அதன் டத்தோ எம். சரவணன் தெரிவித்தார்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-01-28.
  15. Tapah prison allows inmates to meet with family members.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாப்பா&oldid=3613675" இலிருந்து மீள்விக்கப்பட்டது