தருமபுரம் ப. சுவாமிநாதன்
| தருமபுரம் ப. சுவாமிநாதன் | |
|---|---|
![]() |
|
| பிறப்பு | இராஜகோபால் மே 29, 1923 வீராக்கண், நன்னிலம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு,இந்தியா |
| இறப்பு | மார்ச்சு 10 2009 (அகவை 86) பல்லாவரம், சென்னை |
| இருப்பிடம் | சென்னை |
| தேசியம் | இந்தியர் |
| கல்வி | சங்கீத பூசணம்(அண்ணாமலை இசைக்கல்லூரி, சிதம்பரம்) |
| பணி | ஓதுவார் |
| அறியப்படுவது | பண்ணிசை |
| பெற்றோர் | மு.பஞ்சநாத முதலியார் - பார்வதி அண்ணி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | சுலோச்சனா அம்மாள் |
தருமபுரம் ப. சுவாமிநாதன் (மே 29, 1923 - 15 அக்டோபர் 2009) தமிழிசைத் தேவாரப் பேரறிஞரும், சைவ சித்தாந்த உலகின் இசைஞானி என்றும் போற்றப்படுபவர். திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு இசைத்தவர். பண்ணிசைக்குப் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தவர்.
பொருளடக்கம் |
வாழ்க்கைக் குறிப்பு [தொகு]
தருமபுரம் ப. சுவாமிநாதன் நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம், வீராக்கண் என்ற ஊரில் மு.பஞ்சநாத முதலியார் - பார்வதி அண்ணி அம்மாள் தம்பதிகளுக்கு மூன்றாவது மகவாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் இராஜகோபால்.
தனது 12 வது அகவையில் தருமபுர ஆதீன மடத்தில் சேர்ந்து அங்கு 24-வது மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தொண்டராகப் பணிபுரிந்துகொண்டே, தேவாரத் தமிழிசைப் பள்ளியில் திருமுறை கலாநிதி ஆர். வேலாயுத ஓதுவாரிடம் பயின்றார். ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, "தேவார இசைமணி" பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம், அண்ணாமலை இசைக் கல்லூரியில், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் வழிகாட்டலில் 4 ஆண்டுகள் பயின்று முதல் வகுப்பில் தேறி "சங்கீத பூசணம்" பட்டத்தைப் பெற்றார். மதுரை சுப்பிரமணிய முதலியாருடன் இணைந்து மேலும் சில ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்றார்[1]. கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் இசைப் பணியில் இவர் ஈடுபட்டார். தேவார இசையை குறிப்பாக பண்ணிசையை உலகெங்கும் பரப்புவதில் இவர் பெரும் பங்கு வகித்தார். 1952 ஆம் ஆண்டில் இருந்து ஆல் இந்தியா வானொலியில் முதற்தர இசைக் கலைஞராக இருந்தவர்[1]. யாழ்ப்பாணத்தில், 1960களில் "சைவ பரிபாலன சபை" ஆதரவில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து பண்ணிசை மாணவர் பலரை உருவாக்கினார்[2].
1968-ல் தருமபுர ஆதீன தேவாரப் பள்ளி ஆசிரியப் பணியில் இருந்து வெளியேறிய சுவாமிநாதன், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப் பாடும் திருமுறைப் பணிகளில் ஈடுபட்டார். இவரின் குரலிசை பல குறுந்தட்டுகளாகவும் ஒலிநாடாக்களாகவும் வெளிவந்துள்ளன. பன்னிரு திருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள் 10,325 பாடல்களுக்கு குரலிசை தந்துள்ளார்.
விருதுகளும் பட்டங்களும் [தொகு]
- சங்கீத பூசணம் (சிதம்பரம் அண்ணாமலை இசைக்கல்லூரி)
- இசைப்பேரறிஞர் (தமிழிசைச் சங்கம்)
- கலைமாமணி (தமிழ்நாடு அரசு)
- தமிழ்நாடு அரசவைக் கலைஞர் (எம்.ஜி.ஆர். அரசில்)
- குடியரசுத் தலைவர் விருது
- தருமபுரம், குன்றக்குடி, மதுரை, மற்றும் தஞ்சை ஆதீன விருதுகளும் பட்டங்களும்.
குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் கோயிலில் மும்முறை குடமுழுக்கு நடத்திய பெருமையும் இவரையே சாரும்.
மறைவு [தொகு]
தருமபுரம் சுவாமிநாதன் நீண்ட நாள்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சில காலம் இருந்த அவர் 2040 கன்னி (புரட்டாதி) 28 பின்னிரவு 49 நாழிகை (15.10.2009, அதிகாலை 0200 மணி) அளவில் காலமானார்[2].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 Honour for tradition (த ஹிண்டு), டிசம்பர் 13, 2002
- ↑ 2.0 2.1 அஞ்சலி: தருமபுரம் ப. சுவாமிநாதன், மறவன்புலவு க. சச்சிதானந்தம்
வெளி இணைப்புகள் [தொகு]
தருமபுரம் சுவாமிநாதனின் பாடல்கள் [தொகு]
- ஓதுவார்.காம், தருமபுரம் சுவாமிநாதனின் சில பாடல்களைக் கேட்க
- தருமபுரம் சுவாமிநாதனின் பண்ணிசைகளைக் கேட்க, கந்தரலங்காரம், திருப்புகழ்
- ராகா.காம், தருமபுரத்தின் 165 பாடல்களைக் கேட்கலாம்
வேறு [தொகு]
- Demise of Dharmapuram Swaminathan, தருமபுரம் சுவாமிநாதனின் அண்மைக்காலப் படங்கள்
- இரங்கற் கவிதை, தருமபுரம் சுவாமிநாத ஒதுவாரின் மேல் சரமகவிகள்
