தமிழ் ஹைக்கூ கவிதைகள்
தமிழ் ஐக்கூ அல்லது தமிழ் ஹைக்கூ எனப்படுவது தமிழ் மொழியில் எழுதப்படும் ஹைக்கூ கவிதைகளைக் குறிக்கும். மரபுக் கவிதைகளைப் போன்று உறுதியான நெறிமுறைகள் இல்லாததாலும், சிறிய எண்ணிக்கையிலான சொற்களைப் பயன்படுத்தியே எழுத முடியும் என்பதாலும் இக்காலத் தமிழர்கள், குறிப்பாக இணையத்திலும் வார இதழ்களிலும், ஹைக்கூ எழுதுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
உலக அளவில் ஹைக்கூ கவிதைகள் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் சப்பானில் ஹைக்கூ தந்தை பாஷோவின் ஹைக்கூ கவிதையே ஜென் தத்துவத்தில் எழுதப்பட்ட முதல் ஹைக்கூ என்று கூறலாம். இந்திய மொழிகளில் பலவாக ஹைக்கூ கவிதைகளை பெருவாரியான கவிஞர்கள் எழுதிவந்தாலும் தமிழில் ஹைக்கூ கவிதைகள் முத்திரை பதிக்கின்றன. பல்வேறு பரிமாணங்களில் தமிழ் ஹைக்கூ கவிதைகள் பண்பாடு, கலாச்சாரம், மனிதநேயம், இயற்கை என எழுதப்பட்டு வருகிறது. பல தமிழ் ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலம் உட்பட பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்தியாவின் சாகித்திய அகாதமி ஆயிரம் ஹைக்கூ கவிகளின் ஹைக்கூ கவிதைகளை தொகுப்பாக வெளியிடவுள்ளது. இந்த முயற்சியை முனைவர். இரா. மோகன் மேற்கொண்டுள்ளார்.