தமிழ் வட்டார மொழி வழக்குகள்
தமிழ் மொழிப் பேச்சு வழக்கில் இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வழக்குகள் தமிழ் வட்டார மொழி வழக்குகள் ஆகும்.
பல சாதிகளுக்கென தனியான பேச்சு வழக்குகள் இருந்து வந்தன. தற்போது சாதி மறுப்பு இயக்கங்களின் விளைவாக இவ்வேறுபாடுகள் மறைந்து வருகின்றன. புதிய வழக்காக, தொலைக் காட்சி முதலான தொடர்புச் சாதனங்களும் இன்று பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த தமிழைத் தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு விட்டுள்ளன. மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் முதலிய அம்சங்களில் ஒருங்கிணைவு அற்ற முயற்சிகள் வேறுபட்ட மொழி வழக்குகளை உருவாக்கியுள்ளன.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
- "தொல்காப்பியச் சான்றுகளிலிருந்து இந்நூலசிரியர் 13 தெளிவான பிரதேச மொழிகளை ஒப்புக்கொள்வதாக கருத இடமிருக்கின்றது. இவற்றுள் ஒன்றை அவர் செந்தமிழ் என்று குறிப்பிடுகின்றார். மற்ற 12-ஐக் குறித்து அவர் பொதுவாக "செந்தமிழ் நிலத்தை ஒட்டியிருக்கும் 12 நிலங்களின்" பேச்சு வகைகள் என்று பேசுகின்றார்." [1]
- தொல்காப்பியத்தில் செந்தமிழ் நிலத்தில் பேசப்பட்ட சொற்களை இயற்சொற்கள் என்றும் 12 மற்ற தமிழ் நிலங்களில் பேசப்படும் சொற்களை திசைச் சொல் என்றும் குறிப்பிடுகின்றார்[2].
வேறுபாடுகள் [தொகு]
ஒலிப்புமுறை [தொகு]
தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல், தஞ்சாவூர் பகுதிகளில் "இங்க" என்றும், திருநெல்வேலி பகுதிகளில் "இங்கனெ" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு" என்றும், யாழ்ப்பாணப் பகுதிகளில் "இங்கை" என்றும், மட்டக்களப்பில் சில பகுதிகளில் "இஞ்ஞ" என்றும் வழங்கப்படுகின்றது.
சொற்கள் [தொகு]
பெரும்பாலான வட்டார மொழி வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும், சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றன. இலங்கையில் பேசப்படும் தமிழின் பல சொற்கள்,தமிழகத்தில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை. "பாலக்காடு ஐயர்" தமிழில் பல மலையாள சொற்கள் கலந்திருக்கும். சில இடங்களில் மலையாள வாக்கிய அமைப்பும் கானப்படும். இறுதியாக, ஹெப்பர் மற்றும் மாண்டையம் வட்டாரங்களில் பதினோறாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த வைணவ கோட்பாட்டைப் பின்பற்றும் தமிழர்களால் பேசப்படும் தமிழில் வைணவ பரிபாசையின் எச்சம் காணப்படுகிறது.
தமிழில் வழங்கப்படும் சில சொற்கள் சில வட்டாரங்களுக்கு சொந்தமானவை. எடுத்துக்காட்டுகள்
- மதுரை:ஏல் அவிங்க எங்கிட்டு போனாய்ங்க?
- திருநெல்வேலி:எல அவுக எங்க போனாக?
- கன்னியாகுமரி:மக்கா அவாள் எங்கடே?
இப்படியாக ஒலியும் சொற்களும் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடுகின்றன.
வகைப்பாடுகள் [தொகு]
தமிழ்நாடு [தொகு]
- தெற்கு கிளைமொழி: மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்
- மத்திய கிளைமொழி: திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, தென்னார்க்காடு மாவட்டங்கள்
- மேற்குக் கிளைமொழி: சேலம், தர்மபுரி, கோயம்புத்தூர், பெரியார், நீலகிரி மாவட்டங்கள்
- வடக்குக் கிளைமொழி: வட ஆர்க்காடு, செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்கள்
இலங்கை [தொகு]
முதன்மைக் கட்டுரை: இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகள்
- யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
- மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
- திருகோணமலை
- தென்கிழக்குத் தமிழ்
- நீர்கொழும்புத் தமிழ்
சமூகங்கள் வாரியாகப் பேச்சுத் தமிழ் [தொகு]
சாதிசார் அல்லது சமயம் சார் சமூகங்கள் வகையாகவும் சில இடங்களில் பேச்சுத் தமிழ் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுகிறது.
- அரிசனப் பேச்சுத் தமிழ்
- பிராமணத் தமிழ்
- முஸ்லிம்கள் தமிழ்
- நகரத்தார் பேச்சுத் தமிழ்
- பிரமலைக் கள்ளர் பேச்சுத் தமிழ்
பழங்குடி மொழிகள் [தொகு]
- கரையோர வேடர்கள் (இலங்கை)
- வாக்ரி மொழி - நரிக்குறவர்
- இருளா மொழி - இருளர்
எத்னொலோக் [தொகு]
எத்னொலோக் (Ethnologue) என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவனம், தமிழில் 22 வட்டார வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கிறது. அவையாவன ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராசி, பரிகலா, பாட்டு மொழி, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தெனாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிசன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி. கொங்கு மற்றும் குமரி ஆவன வேறிரு தெரிந்த வட்டார வழக்குகள்.
ஆய்வுகள் [தொகு]
- தொல்காப்பியம்
- கசுட் (1866) - தமிழின் கிளைமொழிகள் பற்றிய ஆய்வு - (ஆங்கிலத்தில்)
- யூல்சு பிளாக் (1946) - (ஆங்கிலத்தில்)
- இராம. சுப்பையா - Lexical Study of Tamil Dialects - (ஆங்கிலத்தில்)
- ரா. பி. சேதுப்பிள்ளை - இலக்கியத் தமிழுமும் பேச்சுத் தமிழும் (Tamil Literary and Colloquial) - (ஆங்கிலத்தில்)
- கிளைமொழி வரிசையியல் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 12 நூல்கள்
- கோ. சீமிவாச வர்மா - கிளைமொழியியல்
- வி. ஐ. சுப்பிரமணியம், ச. அகத்தியலிங்கம், முத்துச்சண்முகம் - நாஞ்சில் நாட்டுத் தமிழ் பற்றிய விரிவான ஆய்வுகள்
- கருணாகரன், சிவசண்முகம் - Social Dialects of Tamil - (ஆங்கிலத்தில்)
- சு. சக்திவேல்
- செ. வை. சண்முகம் - கல்வெட்டுக்களில் காணப்படும் தமிழ் கிளைமொழிகள்
- கமில் சுவெலபில்
அகராதிகள் [தொகு]
- மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள் சொற்றொடர்களினதும் பழ மொழிகளினதும் அகராதி
- கரிசல் வட்டார வழக்கு அகராதி - கி. ராஜநாராயணன்
- கொங்கு வட்டார வழக்கு அகராதி - பெருமாள்முருகன்
- கடலூர் வட்டார வழக்கு அகராதி - கண்மணி குணசேகரன்
- நாஞ்சில்நாட்டு வட்டார வழக்கு அகராதி - அ. கா. பெருமாள்
- தஞ்சைமாவட்ட வட்டார வழக்கு அகராதி - சுபாஷ் சந்திரபோஸ்
- செட்டிநாட்டு வட்டார வழக்கு அகராதி - பழனியப்பா சுப்ரமணியன்
மேற்கோள்கள் [தொகு]
- ↑ கமில் ஸ்வெலபில் ஜனவரி 1962 எழுதிய தமிழின் வட்டார மொழிகள் என்ற கட்டுரையிருலிருந்து: நூல்: வ. விஜயபாஸ்கரன் தொகுத்தது. (2001). சரஸ்வதி களஞ்சியம். சென்னை: கலைஞன் பதிப்பகம். பக்கம் 219.
- ↑ கமில் ஸ்வெலபில் ஜனவரி 1962 எழுதிய தமிழின் வட்டார மொழிகள் என்ற கட்டுரையிருலிருந்து: நூல்: வ. விஜயபாஸ்கரன் தொகுத்தது. (2001). சரஸ்வதி களஞ்சியம். சென்னை: கலைஞன் பதிப்பகம். பக்கம் 219.
உசாத்துணைகள் [தொகு]
- வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 14. பக்கங்கள் 307-308.
- சு. சக்திவேல். (2003). தமிழ் மொழி வரலாறு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.