தமிழன் எப்படிக் கெட்டான்? (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழன் எப்படிக் கெட்டான்? என்பது தேவநேயப் பாவாணரால் எழுதப்பட்ட ஒரு குறுநூல் ஆகும். தமிழன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகத்தில் பல துறைகளில் தலைசிறந்தவனாக இருந்தான் என்றும் பிற்காலத்தில் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் கல்வி, செல்வம் ஆகிய இரண்டையும் வைத்துக் கெட்டான் என்றும் பாவாணர் கூறுகிறார். இந்நூல் 1941 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. இதனைத் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது.

தமிழர்கள் கெட்டதற்கான கரணியங்களையும் வழிகளையும் நிரல் படுத்தித் தேவநேயப் பாவாணர் இந்நூலில் எழுதியுள்ளார். அவை பின்வருமாறு:

மதப் பைத்தியம்[தொகு]

மனிதனுக்குத்தான் மதம். மதத்திற்கு மனிதன் அல்லன். அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு ஆகும். எனவே மதத்தின் மீது ஏற்பட்ட மிகைப் பற்றினால் தமிழர்களிடையே குருட்டு நம்பிக்கைகளும் குலப் பிரிவினைகளும் உண்டாயின.

கொடைமடம்[தொகு]

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு என்னும் அறிவுரைக்கு மாறாக தமிழ் அரசர்கள் தம் தாராளக் குணத்தினால் பார்ப்பனர்களுக்கு ஆயிரக்கணக்கான பொற்காசுகளையும் நூற்றுக்கணக்கான ஊர்களையும் பரிசில்களாக வழங்கினர். அவை ஆரியப் பார்ப்பனர்களை உயர்த்தவும் தமிழ் மொழியைத் தாழ்த்தவும் பயன்பட்டன.

இனநலம் பொறாமை அல்லது தன்னினப் பகைமை[தொகு]

தமிழ் மன்னர்களான சேர சோழ பாண்டியர் மூவரும் ஒற்றுமையாக இருந்த வரையில் தமிழ் மக்கள் சிறப்பாக இருந்தனர். பொறாமையின் காரணமாக உட்பகை உண்டாகி அவர்களுக்குள் போரிட்டு வலிமையை இழந்தனர்.

குறி பார்த்தல்[தொகு]

உலகம் முழுதும் குறி பார்த்தல் பெரு வழக்கமாக இருந்தபோதும் மேனாட்டார் அதனைக் கைவிட்டனர். ஆனால் நம் தமிழ் மக்கள் குறி பார்த்தலிலும் நாள் கிழமை பார்ப்பதிலும் பிறப்பியத்திலும் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கையால் வீண் செலவு, காலக் கேடு, மனக்கவலை, முயற்சி அழிவு போன்ற தீமைகள் ஏற்படுகின்றன.

துறவியைப் பின்பற்றல்[தொகு]

துறவறத்தைக் காட்டிலும் இல்லறம் சிறந்தது. ஊன் உணவால் வீரத் தன்மையும் மரக்கறி உணவால் சாந்தத் தன்மையும் ஏற்படும். எனவே துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே சிறந்தது எனக் கூறலாம். இல்லறத்தார்க்கு இவ்வுலக வாழ்க்கை மீது வெறுப்பை ஏற்படுத்தியதால் இசை, நாடகம், ஓவியம் போன்றவை சிற்றின்பத்திற்குரியவை என்று அழியவிட்டார்கள் தமிழர்கள்.

ஆரியம்[தொகு]

தமிழன் கெட்ட வழிகளில் மிகக் கொடியது ஆரியமே. பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்து தமிழர்களிடையே குலப்பிரிவினைகளை ஏற்படுத்தியவர்கள் ஆரியர்கள். எனவே தமிழர்கள் குலப் பிரிவினைகளால் வலிமை இழந்தனர். வீரமும் இழந்தனர். இறை வழிபாட்டையும் பிற சடங்குகளையும் வடமொழியில் செய்வித்ததால் தமிழ் மொழி செல்வாக்கு இழந்தது. தாய்மொழி உணர்ச்சி தமிழர்களிடையே இல்லாமல் போனது.

அரசியல் கட்சிகள்[தொகு]

நீதிக் கட்சியினால் தமிழர்களுக்கு அரசு அலுவல்கள் கிடைத்தன. ஆனால் எளிய மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் நீதிக் கட்சி பெரிதாகச் செய்யவில்லை. காங்கிரசு ஆட்சியில் தமிழர்களுக்கு ஐந்து தீமைகள் ஏற்பட்டன. அவை இந்தித் திணிப்பு, வகுப்புரிமை இன்மை, பார்ப்பன மேலாண்மை, பள்ளிகளை மூடுதல், பகுத்தறிவாளாமை என்பன. ஆகையால் தமிழ் விடுதலையும் தமிழ் வளர்ச்சியும் குறிக்கோளாகக் கொண்டதொரு புதுக்கட்சியை ஏற்படுத்த வேண்டும்.

சான்று[தொகு]

தமிழன் எப்படிக் கெட்டான் ? (ஆசிரியர்: தேவநேயப் பாவாணர், நூல் வெளியீடு: தமிழ்மண் பதிப்பகம், தியாகராயர் நகர் சென்னை-17)