தஞ்சாவூர் பீரங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சாவூர் பீரங்கி

தஞ்சாவூர் பீரங்கி (Thanjavur cannon) என்பது, தஞ்சாவூர் நகருக்குச் சுற்றுலா வரும் பயணிகள் பார்க்கவேண்டியவற்றில் ஒன்றாகும். இப்பீரங்கி தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில், தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோயில் அருகில், காணப்படுகிறது. பீரங்கி உள்ள இடத்தினைப் பீரங்கி மேடு என்றழைக்கின்றனர்.[1]

இராஜகோபால பீரங்கி[தொகு]

இராஜகோபால பீரங்கி

இப்பீரங்கி புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகும். [2] தஞ்சாவூர் பெரிய கோட்டையின் உட்புறம் கிழக்கு வாசலையொட்டி ஒரு பெரிய மேடை அமைக்கப்பெற்று அதன்மேல் பெரிய பீரங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் ‘இராஜகோபால பீரங்கி‘ என்று குறிப்பிடுகின்றனர். இது நாயக்கர் காலப் பீரங்கி என்பது செவி வழியாகத் தொடரும் செய்தியாகும். [3]

அமைப்பு[தொகு]

பொதுவாகப் பீரங்கிகள் வார்ப்பிரும்பால் வார்க்கப்படும். ஆனால் இதுவோ தேனிரும்புப் பட்டைகளால், இணைப்பு முறையில், உருவாக்கப்பெற்றுள்ளது. இந்த பீரங்கி முகவாய் (Muzzle) முதல் புட்டம் (Breech) வரை 26 அடி நீளம் கொண்டது. பீரங்கியின் உருட்டுருளைக் குழாயின் விட்டம் 300 மி.மீ. ஆகும். பீரங்கி 150 மி.மீ. உட்சுவர் கனம் கொண்டது. பீரங்கியின் குழாயின் (Barrel) உடல் இரு பகுதிகளாக இணைக்கப்பட்டுள்ளது. பிறகு அதன்மீது தொடராக வளையங்களைப் பக்கவாட்டில் இணைத்து, வெளிக்குழாய் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு குழாய்களும், ஒன்றை ஒன்று பாதுகாக்கும் வண்ணம், மிக இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. உட்குழாயின் பட்டைகள், பீரங்கி முகவாயின் (Muzzle) வெளிப்புறமாக மடக்கிவிடப்பெற்றுள்ளது. மறுபுறம் பீரங்கியின் புட்டம் (Breech) உள்ளது. மேல் குழாயின் மேல் 5 இடங்களில், வலுவூட்டும் இணைப்பு வளையங்களின் (Reinforcing connection rings) பிதுக்க அமைப்புகள் உள்ளன. இப்பீரங்கி அதன் ஆதார இணைக்கம்பங்களில் முட்டி நிறுத்தப்பட்டுள்ளது (mounted on its Trunnions). இந்தியாவிலுள்ள மிகப் பெரிய பீரங்கிகளில் இதுவும் ஒன்றாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajagopala Beerangi Thanjavur". Thanjavur Info. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  2. தஞ்சாவூர் பெரிய கோயில் எடுப்பித்த ஆயிரமாவது ஆண்டு விழா, சிறப்பு மலர் 2010, தொடக்கக்கல்வித்துறை, தஞ்சாவூர் மாவட்டம்
  3. 3.0 3.1 தஞ்சாவூர், குடவாயில் பாலசுப்ரமணியன், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர் 613 007
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சாவூர்_பீரங்கி&oldid=3773837" இலிருந்து மீள்விக்கப்பட்டது