தகவல் தொழில்நுட்பச் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தகவல் தொழில்நுட்பச் சட்டம்
Citation Act No 21 of 2000
Amendments
The Information Technology (Amendment) Act, 2008

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 (Information Technology Act 2000 அல்லது ITA-2000, அல்லது IT Act) இந்திய நாடாளுமன்றத்தால் அக்டோபர் 17, 2000இல் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும். இந்தச் சட்டத்தின் மூலமாக தொடர்பு மற்றும் தகவல் சேகரிப்பை தாள்கள் வழியில் அல்லாது மின்னியல் வணிகம் என பொதுவாக குறிப்பிடப்படும் மின்னியல் ஊடகம் வழியே நடத்தப்படும் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் பிற தொடர்பாடல்களுக்கு ஓர் சட்ட அங்கீகாரம் வழங்குவதை இச்சட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அரசு அமைப்புகளுக்கு மின்னூடகங்கள் வழியே ஆவணங்களை அளித்திட வகை செய்கிறது. மேலும் இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சிமை சட்டம், 1872, வங்கியாளர் புத்தகங்கள் சாட்சி சட்டம் 1891, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934 ஆகியவற்றிலும் தொடர்புடைய பிறவற்றிலும் வேண்டிய திருத்தங்களைச் செய்கிறது.

இந்திய அரசு 2000ஆம் ஆண்டுச் சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொண்டு தகவல் தொழில்நுட்பத் திருத்த சட்டம் 2008 (Information Technology Amendment Act, 2008) கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்தின் 43A பிரிவின்கீழ் தூண்டுதலுக்குரிய தனிநபர் தகவல் மற்றும் நியாயமான பாதுகாப்பு செய்முறைகள் குறித்தான விதிமுறைகள் தொகுப்பொன்று ஏப்ரல் 2011இல் வெளியிடப்பட்டுள்ளது.[1]

குரலைக் காப்பாற்றுங்கள் இயக்கமும் ஏனைய இயக்கங்களும் இச்சட்டம் பேச்சுரிமையை பறிப்பதாக குற்றம் சாட்டியுள்ளன.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2008[தொகு]

தகவல் தொழில்நுட்பத் திருத்தச் சட்டம், 2008 (IT Act 2008) திசம்பர் 23, 2008 அன்று நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்பத்தை பெப்ரவரி 5, 2009 அன்று பெற்றது. அக்டோபர் 27 2009 அன்று முறையாக அறிவிக்கப்பட்டது.

சட்டத்தில் குறிப்பிடத்தக்கவை[தொகு]

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 13 அத்தியாயங்களில் 94 பகுதிகளைக் கொண்டதாக இருந்தது.சட்டத்தின் உள்ளடக்கமாக நான்கு ஷெட்யூல்கள் இருந்தன.

சட்டத்தின் 2008 பதிப்பில் 14 அத்தியாயங்களும் 124 பகுதிகளும் உள்ளன. செட்யூல் I மற்றும் II மாற்றப்பட்டுள்ளன. செட்யூல்கள் III மற்றும் IV நீக்கப்பட்டுள்ளன.

சட்டத்தின் சாராம்சம்[தொகு]

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 கீழ்கண்டவற்றை குறித்தானது:

  1. மின்னியல் ஆவணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம்
  2. எண்ணிம கையெழுத்துகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம்
  3. குற்றங்களும் மீறுகைகளும்
  4. இணையக் குற்றங்களுக்கான நீதி வழங்கு முறைமைகள்

தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் 2008 இவற்றுடன் கூடுதலாக தகவல் பாதுகாப்பு மீது குவியத்தைக் கொண்டுள்ளது. இணையத் தீவிரவாதம் மற்றும் தரவுப் பாதுகாப்புக் குற்றங்கள் மீது பல புதிய பகுதிகளை சேர்த்திருக்கிறது.

கருத்துக்களும் விமரிசனங்களும்[தொகு]

இந்தச் சட்டம் திசம்பர் 23, 2008 அன்று சந்தடிநிறைந்த நாடாளுமன்றத்தில் எந்தவொரு கலந்துரையாடலுமின்றி நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் அரசு அமைப்புகள் இந்திய பொதுமக்களின் குடியுரிமைகளை மீறுவதைத் தடுக்க சட்ட மற்றும் செய்முறை பாதுகாப்புகள் எதுவும் இந்தத் திருத்தங்களில் இல்லை என சில இணையக் குற்ற வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்தத் திருத்தங்களில் இணையப் பாதுகாப்பு குறித்து குவியப் படுத்தப்பட்டிருப்பதை சிலர் பாராட்டியும் உள்ளனர்.

பகுதி 69யின்படி நடுவண்/மாநில அரசுஅல்லது அவற்றின் அமைப்புகள் இந்திய அரசாண்மைக்கு ஊறு, ஒற்றுமைக்கு பங்கம், நாட்டுப் பாதுகாப்புக் கேடு, வெளிநாடுகளுடனான நட்பிற்கு ஊறு, அமைதிக்கு ஊறும் விளைவிக்கக்கூடிய செயல்களை தடுக்கவும் எந்தவொரு குற்றத்தை புலனாயவும் தேவையானால்எந்தவொரு கணினியிலும் உருவாக்கப்பட்ட, அனுப்பப்பட்ட, பெறப்பட்ட, சேகரிக்கப்பட்டுள்ள தகவல்களையும் எந்த தரவுப் பரிமாற்றங்களையும் ஒற்று செய்யவோ, தடுக்கவோ, கவனிக்கவோ அல்லது சங்கேதங்களை உடைக்கவோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தரவுகள் மறையீடு செய்யப்பட்டிருந்தால் அவற்றை நீக்க எந்த கணினி நபரையும் கட்டாயப்படுத்தவும் மறுபோருக்கு அபராதமும் தண்டனையும் வழங்கவும் வழி செய்யப்பட்டுள்ளது[2]

சான்றுகோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Information Technology Act 2008 Online
  2. Information Technology Act 2000 Online
  3. Articles on ITA 2008