டி. ஈ. லாரன்சு
| டி. ஈ. லாரன்ஸ் | |
|---|---|
| ஆகஸ்ட் 16, 1888 - மே 19, 1935 | |
| பட்டப்பெயர் | லாரன்ஸ் ஆஃப் அரேபியா, எல் ஆரென்ஸ் |
| பிறந்த இடம் | டிரெமடாக், வடக்கு வேல்சு |
| இறந்த இடம் | போவிங்டன் கேம்ப், டோர்செட், இங்கிலாந்து |
| சார்பு | ஹஷீமைட் அரபுகள் |
| பிரிவு | |
| சேவை ஆண்டு(கள்) | 1914–1918 1923–1935 |
| தரம் | லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஏர்கிராஃப்ட்மேன் |
| சமர்/போர்கள் | முதல் உலகப் போர்
|
| விருதுகள் | கம்பானியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பாத் டிஷ்டிங்கிவிஷ்ட் செர்விஸ் ஆர்டர் செவாலியே லீஜியன் டி ஹானூர் கிராஸ் டி கெர் |
டி. ஈ. லாரன்ஸ் அல்லது டி. ஈ. லாரன்சு (Thomas Edward Lawrence, ஆகஸ்ட் 16, 1888 – மே 19, 1935) ஒரு பிரிட்டானியப் போர் வீரர், தூதுவர், ராச தந்திரி மற்றும் எழுத்தாளர். முதல் உலகப் போரில் ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக ஏற்பட்ட அரபுப் புரட்சியில் பிரிட்டனின் தூதுவராகவும் ராச தந்திரியாகவும் புரிந்த செயல்களுக்காக லாரன்ஸ் ஆஃப் அரேபியா (அரேபியாவின் லாரன்ஸ், Lawrence of Arabia) என்று பரவலாக அறியப்படுகிறார்.
வேல்சில் பிறந்த லாரன்ஸ், தன் இளமைக் காலத்தில் களத் தொல்லியளாராக பணி புரிந்தார். மத்திய கிழக்காசியாவின் பல மொழிகளை லாரன்ஸ் அறிந்திருந்ததால், பாலஸ்தீனத்தின் நெகேவ் பாலைவனத்தை ஆய்வு செய்ய பிரிட்டானிய ராணுவத்தால் வேலைக்கமர்த்தப்பட்டார். முதல் உலகப் போர் மூண்டபின் முறைப்படி பிரிட்டானிய தரைப்படையில் சேர்ந்தார். ஒட்டோமானியப் பேரரசுக்கு எதிராக பிரிட்டனும் ஏனைய நேச நாடுகளும் அரபுக் பழங்குடியினரை புரட்சி செய்ய்த் தூண்டினர். அப்படி உருவான அரபுப் புரட்சியின் போது பிரிட்டனின் சார்பாக அரபு குடிகளுக்குத் தூதுவராகவும் ஆலோசகராகவும் லாரன்ஸ் அனுப்பப்பட்டார். ஓட்டோமான் பேரரசின் முக்கிய நகரங்களான ஆக்வபா மற்றும் தமாஸ்கஸ் போன்றவற்றை கைப்பற்றும் முயற்சிகளில் அரபுப் படைகளுடன் இணைந்து பங்கேற்றார். முதலாம் உலகப்போரில் அவர் ஆற்றிய அரும்பணிகளுக்காக பிரிட்டானிய அரசு அவருக்கு பல உயரிய பதக்கங்களை வழங்கி லெப்டினன்ட் கர்னலாகப் பதவி உயர்வு அளித்தது.
போர் முடிந்த பின்னர் ஒரு சுதந்திர அரபு தேசம் அமைப்பதற்காக அரபுத் தலைவர் எமிர் ஃபைசலின் ஆலோசகராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் வெளியான இவரது செவன் பில்லர்ஸ் ஆஃப் விஸ்டம் என்ற நூலும், அமெரிக்கப் பத்திரிக்கையாளர் லோவல் தாமசின் மிகைப்படுத்தப் பட்ட செய்திக் குறிப்புகளும் மேற்குலகில் லாரன்சுக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. அவருக்கு அரேபியாவின் லாரன்ஸ் என்ற பெயர் உருவாகி வெகுஜன நினைவில் ஆழமாகப் பதிந்து விட்டது. லாரன்ஸ் 1922ல் பிரிட்டானிய வான்படையில் சேர்ந்து பல ஆண்டுகள் பணிபுரிந்தார். பிற்கால வாழ்க்கையில் புகழையும், பிரபலத்தையும் விரும்பாமல் அமைதியாக வாழ்ந்த லாரன்ஸ் தனது பெயரை டி. ஈ. ஷா என்று மாற்றிக் கொண்டார். விசையுந்து (மொட்டார் சைக்கிள்) ஆர்வலரான லாரன்ஸ் 1935ம் ஆண்டு ஒரு விசையுந்து விபத்தில் மரணமடைந்தார். இவரது வாழ்க்கையைப் பற்றி பல திரைப்படங்களும் நாடகங்களும் வெளியாகியுள்ளன. 1962ல் வெளியான லாரன்ஸ் ஆஃப் அரேபியா என்ற படம் உலகெங்கும் லாரன்சின் புகழைப் பரவச் செய்தது.
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: டி. ஈ. லாரன்ஸ் |
- T. E. Lawrence Studies, maintained by Lawrence's authorised biographer Jeremy Wilson
- The T. E. Lawrence Society
- T.E. Lawrence's Collection at The University of Texas at Austin's Harry Ransom Center