ஜோக்கிம் பெர்னாண்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜோக்கிம் பெர்னாண்டோ (இறப்பு: ஆகத்து 17, 2021) இலங்கை வானொலி, மேடை நாடக நடிகரும், வானொலி அறிவிப்பாளரும் ஆவார். இலங்கை வானொலியில் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஜோக்கிம் பெர்னாண்டோ கொழும்பு, கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொட்டாஞ்சேனை (ஆசீர்வாதப்பர்) சாந்த பெனடிக்ற் கல்லூரியில் படித்தவர்.[1] அப்போது ஆசிரியராக இருந்த ராம் சுந்தரலிங்கம் என்பவர் சிறந்த கலைஞர். இவரது நெறியாள்கையில் ஜோக்கிம் பெர்னாண்டோ பாடசாலை நாடகங்களில் நடித்து தனது நாடக அறிவைப் பெருக்கிக் கொண்டார்.[1] 1959 இல் இலங்கை வானொலியில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எஸ். பி. மயில்வாகனம் தயாரித்து வழங்கிய விளம்பர ஒலிபரப்பு ஒன்றில் நான்கு 15 நிமிட நாடகங்களைத் தயாரிக்க ராம் சுந்தரலிங்கத்திற்கு வாய்ப்பு வந்தது. அவற்றில் ஒரு நாடகத்தை எழுதி, நடிக்கும் வாய்ப்பு ஜோக்கிம் பெர்னாண்டோவிற்குக் கிடைத்தது. அக்காலத்தில் பிரபலமான பிலோமினா சொலமனுடன் இணைந்து நடித்தார். சிறந்த நடிகருக்கான பரிசு ஜோக்கிமிற்குக் கிடைத்தது.[1] தொடர்ந்து பல வானொலி நாடகங்களில் நடித்தார். பல வானொலி நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.[1]

கே. எம். வாசகர், ஜோர்ஜ் சந்திரசேகரன் ஆகியோரின் மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். இலங்கை வானொலியில் முழுநேர அறிவிப்பாளராக வருவதற்கு முதல் இலங்கை வங்கியில் பணியாற்றினார். சிங்கள மொழி கட்டாயமாக்கப்பட்டதால் வங்கியில் வகித்த நிரந்தரப் பதவியைத் துறந்து, இறுதிக்காலம் வரை வானொலி அறிவிப்பாளராகப் பணியாற்றி வந்தார். ரூபவாகினி தொலைக்காட்சி சேவையில் செய்தி வாசிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.[2] சிங்கள மொழியில் இருந்து தமிழாக்கப்பட்ட கலியுககாலம் என்ற திரைப்படத்திற்கு ஜோக்கிம் பெர்னாண்டோ நடிகர் ரொனி ரணசிங்கவிற்குக் குரல் கொடுத்திருந்தார்.[3]

மறைவு[தொகு]

ஜோக்கிம் பெர்னாண்டோ 2021 ஆகத்து 17 செவ்வாய்க்கிழமை காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோக்கிம்_பெர்னாண்டோ&oldid=3774904" இலிருந்து மீள்விக்கப்பட்டது