யோகான் செபாஸ்தியன் பாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜோகான் செபாஸ்தியன் பாக்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யோஃகான் செபாஸ்தியன் பாஃக் (1685-1750)

யோகான் செபாஸ்தியன் பாக் அல்லது யோஃகான் செபாஸ்தியன் பாஃக் (Johann Sebastian Bach - 31 மார்ச் 1685 [O.S. 21 மார்ச்] – 28 ஜூலை 1750) ஒரு ஜேர்மானிய இசையமைப்பாளரும் ஆர்கன் இசைக் கலைஞரும் ஆவார். இவரது மதம் சார்ந்ததும், மதச்சார்பற்றதுமான ஆக்கங்கள் பரோக் காலக் கலையின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து அதனை முதிர் நிலைக்குக் கொண்டுவந்தது. இவர் புதிய இசை வடிவங்கள் எதையும் அறிமுகப்படுத்தவில்லை எனினும் ஏற்கெனவே இருக்கும் ஜேர்மன் இசைப் பாணியை தனது வலுவான இசை நுட்பங்களின் வாயிலாக வளம்படுத்தினார். இவரது அறிவாற்றலின் ஆழம், தொழில்நுட்பக் கட்டுப்பாடு, கலையழகு என்பவற்றுக்காக பாக் பெரிதும் மதிக்கப்பட்டார்.

இவரது வாழ்க்கைக் காலத்தில் ஒரு ஆர்கன் இசைக் கலைஞராகவே இவர் பெரும் புகழ் பெற்றிருந்தார். ஒரு இசையமைப்பாளராக இவர் அதிகம் அறியப்பட்டிருக்கவில்லை. பரோக் பாணி மற்றும் இவர் பின்பற்றிய பிற நுட்பங்கள் காரணமாக இவர் பழம் பாணியைக் கடைப்பிடிக்கும் ஒருவர் என இவரது சமகாலத்தவர் கருதினர். குறிப்பாக இவரது தொழில் வாழ்வின் பிற்பகுதியில் ரோக்கோக்கோ பாணி, செந்நெறிப் பாணி என்பன விருப்பத்துக்குரிய போக்காக இருந்த வேளையில் இவரது இசையமைப்பு மக்களைக் கவரவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவரது இசை நிகழ்ச்சிகள் குறித்த ஆர்வம் மீண்டும் ஏற்பட்டது. தற்போது, மேலைத்தேச இசைமரபின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இவர் மதிக்கப்படுகிறார்.