ஜெயமோகன்
| ஜெயமோகன் | |
|---|---|
| பிறப்பு | ஏப்ரல் 22, 1962 அருமனை, கன்னியாகுமரி, தமிழ்நாடு |
| துணைவர்(கள்) | அருண்மொழி நங்கை |
| பிள்ளைகள் | அஜிதன்,சைதன்யா |
| http://www.jeyamohan.in | |
ஜெயமோகன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைக் குறிப்புகள்[1]
ஜெயமோகனின் தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. இவருடைய தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு.
ஜெயமோகன்,[Jeyamohan] [Jayamohan.B] 1962 ஏப்ரல் 22 ஆம் தேதி பிறந்தார். இவர் சிறு வயதில் பத்மநாபபுரத்திலும் கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ஊரிலும், பின்னர், முழுக்கோடுவிலும் தொடக்கப்பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் பதினொன்று வகுப்பு வரை அருமனை நெடியசாலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1978 ல் பள்ளிப்படிப்பு முடித்து, முழுக்காட்டில் இருந்தபொழுது மலையாளப் புதினங்களுக்கு அறிமுகம் ஆனார்.
பின்னர் 1980ல் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார். ஆனால் 1982 இல் கல்லூரிப் படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இவருடைய நெருங்கிய நண்பர் ராதாகிருஷ்ணன் என்பவரின் தற்கொலையால் மன அமைதி இழந்தார். அக்காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் வேரூன்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்பினால் ஆன்மிக நூல்களில் நாட்டம் ஏற்பட்டது என்று ஜெயமோகன் கூறுகிறார். இவருக்குத் துறவியாக வேண்டுமென்ற கனவும் உருவாகியது. இருவருடங்கள் பலவாறாக அலைந்தும், திருவண்ணாமலை, பழனி, காசி ஆகிய ஊர்களில் இருந்தும், பல சில்லறைவேலைகள் செய்தும் வாழ்க்கை நடத்தியுள்ளார்.
1984ல் கேரளத்தில் காசர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச் சேர்ந்தார். அப்பொழுது தொழிற்சங்கத்தின் பெரிய கம்யூனில் தங்கியிருந்தார். அச்சமயம் இடதுசாரி இயக்கங்களின் மீது ஆர்வமும் அவற்றிற்கு பங்களிக்கவும் வாய்ப்புகள் ஏற்பட்டது. அங்கிருந்த நூலகங்களில் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்த இவர், இலக்கிய, கோட்பாட்டு விவாதங்களில் ஈடுபடும் பக்குவம் பெற்றார். இக்காலகட்டத்தில் இவருடைய பெற்றோரின் தற்கொலையால் மிகவும் நிம்மதியிழந்து தீவிரமாக அலைச்சலுக்கு ஆளானார்.
இவர் 1991 ஆம் ஆண்டு ஆகஸ்டில் அருண்மொழி நங்கை என்னும் வாசகியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.இரண்டு குழந்தைகள் ,ஒரு ஆண், ஒரு பெண் . ஜெயமோகன் 2010 வரை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லில் பணியாற்றினார். நாகர்கோயிலில் வசிக்கிறார்.
[தொகு] எழுத்துலக அறிமுகம்
1985ல் எழுத்தாளர் சுந்தர ராமசாமி அறிமுகமானார். அவர் ஜெயமோகனை இலக்கியத்துக்குள் ஆற்றுப்படுத்தினார். அவரை எழுதலாம் என்று தூண்டி ஊக்கமூட்டினார். இவருடைய எழுத்துக்கள் அதிகமும் அவருக்கே அனுப்பபட்டன. தான் ஒரு மனநோயாளிக்குரிய தீவிரத்துடன் எழுதினேன் என்கிறார்[2]. ’கைதி’ என்ற கவிதை 1987ல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்திவந்த கொல்லிப்பாவை இதழில் வெளியாயிற்று. 1987 ல் கணையாழியில் நதி அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது இவருடைய எழுத்துக்கு ஒரு தொடக்கம். தொடர்ந்து நிகழ் இதழில் படுகை, போதி முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன.
1988ல் எழுதிய ரப்பர் என்னும் புதினத்தை 1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பி, அதற்கான விருதைப் பெற்றார். தாகம் என்னும் தலைப்பில் தமிழ் புத்தகாலயம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
1998 முதல் 2004 வரை "சொல்புதிது" என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார்.
நாராயணகுருவின் மரபில் வந்த குரு நித்ய சைதன்ய யதியுடனான தொடர்பு மூலம் ஆன்மிகமான ஈடுபாடு அடைந்தார். மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவை தன் ஆசிரியராகவும் முன்னோடியாகவும் குறிப்பிடுகிறார்.
ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதுகிறார். மாத்ருபூமி, பாஷாபோஷினி இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் கரன்ட் புக்ஸ் பதிப்பாக நெடும்பாதையோரம் என்ற பேரில் வெளியாகியுள்ளன.
திரைப்படத்துறையிலும் பணியாற்றி வருகிறார். 2006ல் வெளிவந்த கஸ்தூரிமான் இவர் திரைக்கதை எழுதிய முதல் படம். நான் கடவுள், அங்காடித்தெரு ஆகிய படங்களில் எழுதியிருக்கிறார் , மணிரத்னத்தின் அடுத்த படமான கடல் இவரது எழுத்தில் வரவிருக்கிறது.
[தொகு] விருதுகள்
- 1990 ஆண்டு அகிலன் நினைவுப்போட்டிப் பரிசைப் பெற்றார்.
- 1992 ஆம் ஆண்டுக்கான கதா விருதைப் பெற்றார்.
- 1994 ஆம் ஆண்டுக்கான சம்ஸ்கிருதி சம்மான் தேசியவிருது பெற்றுள்ளார்.
- 2008 ஆம் ஆண்டு பாவலர் விருது பெற்றார்
- 2010 ஆம் ஆண்டு முதல் இவரது படைப்பான விஷ்ணுபுரம் பெயரால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது ஒன்றை அளிக்கிறது.
- 2011 ஆம் ஆண்டு அறம் சிறுகதைத் தொகுதிக்காக முகம் விருது பெற்றார்
[தொகு] இவரது புதினங்கள்
- விஷ்ணுபுரம் (கவிதா பதிப்பகம்)
- பின் தொடரும் நிழலின் குரல் (தமிழினி பதிப்பகம்)
- கொற்றவை (புதினம்) (தமிழினி பதிப்பகம்)
- ரப்பர்
- காடு
- ஏழாம் உலகம்
- பனிமனிதன் - சிறுவர் புதினம்
- கன்னியாகுமரி
- அனல்காற்று (புதினம்)
- இரவு (புதினம்)
- உலோகம் (புதினம்)
[தொகு] சிறுகதை நூல்கள்
- மண் (கவிதா பதிப்பகம்)
- ஆயிரங்கால் மண்டபம் (கவிதா பதிப்பகம்)
- திசைகளின் நடுவே (கவிதா பதிப்பகம்)
- கூந்தல்(கவிதா பதிப்பகம்)
- ஜெயமோகன் சிறுகதைகள் (கிழக்கு பதிப்பகம்)
- ஜெயமோகன் குறுநாவல்கள் (கிழக்கு பதிப்பகம்)
- பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும்(நிழல்வெளிக்கதைகள்) (நவீனத் திகில்கதைகள்)(கிழக்கு பதிப்பகம்)
- ஊமைச்செந்நாய்(உயிர்மை பதிப்பகம்)
- ”அறம்” [சிறுகதைகள்] (வம்சி பதிப்பகம்)
[தொகு] அறிவியல் சிறுகதைகள்
- விசும்பு (அறிவியல் சிறுகதைகள்)(கிழக்கு பதிப்பகம்)
[தொகு] அரசியல்
- சாட்சிமொழி (உயிர்மை பதிப்பகம்)
- இன்றைய காந்தி (காந்திய விவாதங்கள்)(தமிழினி பதிப்பகம்)
- அண்ணா ஹசாரே -ஊழலுக்கு எதிரான போராட்டம் (கிழக்கு பதிப்பகம்)
[தொகு] வாழ்க்கை வரலாறு
- முன்சுவடுகள் (உயிர்மை பதிப்பகம்)
- கமண்டலநதி நாஞ்சில் நாடன் (தமிழினி பதிப்பகம்)
- கடைத்தெருவின் கலைஞன் ஆ. மாதவன் (தமிழினி பதிப்பகம்)
- நினைவின் நதியில் (சுந்தர ராமசாமி பற்றி) (உயிர்மை பதிப்பகம்)
[தொகு] காப்பியம்
- கொற்றவை (காப்பியம்) (தமிழினி பதிப்பகம்)
[தொகு] நாடகம்
- வடக்குமுகம் (நாடகங்கள்) (தமிழினி பதிப்பகம்)
[தொகு] வரலாறு
- கொடுங்கோளூர் கண்ணகி (வரலாற்றுநூல், மொழியாக்கம்) (தமிழினி பதிப்பகம்)
[தொகு] இலக்கியத் திறனாய்வு
- இலக்கிய முன்னோடிகள் (ஏழு இலக்கிய விமரிசன நூல்கள்)
முதற்சுவடு, கனவுகள் இலட்சியங்கள், சென்றதும் நின்றதும், மண்ணும் மரபும், அமர்தல் அலைதல், நவீனத்துவத்தின் முகங்கள், கரிப்பும் சிரிப்பும்
- உள்ளுணர்வின் தடத்தில்... (கவிதை விமரிசனம்)
- நாவல் (விமரிசனம்)
- நவீனத்துவத்திற்குப் பின் தமிழ் கவிதை -தேவதேவனை முன்வைத்து
- ஆழ்நதியைத்தேடி (இலக்கிய விவாதம்)
- நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்
- இலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்கள்)
ஈழ இலக்கியம் ஒரு விமரிசனப்பார்வை, புதிய காலம் -இலக்கிய விமரிசனம், மேற்குச் சாளரம் மேலை இலக்கிய அறிமுகம், எழுதும் கலை, கண்ணீரைப் பின் தொடர்தல்-இருபத்திரண்டு இந்திய நாவல்கள் குறித்த அறிமுகம்.
[தொகு] பழந்தமிழ் இலக்கியம்
- சங்க சித்திரங்கள் (பண்டை இலக்கியம்)
[தொகு] மொழியாக்கம்
- தற்கால மலையாளக் கவிதைகள் (மொழிபெயர்ப்பு)
- இன்றைய மலையாளக் கவிதைகள் (மொழிபெயர்ப்பு)
- சமீபத்திய மலையாளக் கவிதைகள் (மொழிபெயர்ப்பு)
[தொகு] அனுபவம்
- வாழ்விலே ஒருமுறை (அனுபவக் கட்டுரைகள்)
- இன்றுபெற்றவை (நாட்குறிப்புகள்)
- புல்வெளிதேசம் (பயணக்கட்டுரை)
- நிகழ்தல் (அனுபவக்குறிப்புகள்)
[தொகு] தத்துவமும் ஆன்மீகமும்
- சிலுவையின் பெயரால் (ஆன்மீகம்)
- இந்தியஞானம் (ஆன்மீகம்)
- இந்துஞான மரபில் ஆறுதரிசனங்கள் (தத்துவம்)
[தொகு] பண்பாடு
- எதிர்முகம் (இணையவிவாதங்கள்)
- பண்படுதல் (பண்பாட்டுக்கட்டுரைகள்)
- தன்னுரைகள் (மேடை உரைகள்)
[தொகு] பொது
- நலம் (உடல்நலக்கட்டுரைகள்)
[தொகு] இணையத்தில் படிக்க
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
- ஜெயமோகன் - எழுத்தாளரின் இணையத்தளம்
- அழியாச்சுடர்கள் இணையத்தில் ஜெயமோகன் படைப்புகள்