ஜி. டி. கார் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜி. டி. கார் அருங்காட்சியகம் (துவக்கம் 27 ஏப்ரல் 2015) என்பது தமிழ்நாட்டின் கோயமுத்தூர் நகரில் அவினாசி சாலையில் ஜி.டி. நாயுடு அறக் கட்டளையால் துவக்கி நடத்தப்பட்டுவரும் விலை மதிப்புள்ள பழம்பெரும் கார்களுக்கான அருங்காட்சியகம் ஆகும். இங்கு சுமார் 60 பழங்காலக் கார்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[1] மேலும் இங்கு பெரியார் ஈ.வெ.ரா. தனது சுற்றுப் பயணத்துக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் ஜி.டி. நாயுடுவின் யுனைடெட் மோட்டார் சர்வீஸ் நிறுவனம் சார்பில் கோவையில் இருந்து பழனிக்கு இயக்கி வந்த ஒரு பேருந்தும் இடம் பெற்றுள்ளது சிறப்பு.[2]

இவ்வருங்காட்சியகத்தில் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஸ்பெயின் போன்ற பல்வேறு நாடுகளில் 1886-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட பென்ஸ் மோட்டார் வேகான் கார் முதல் நவீன கால பந்தயக் கார் என மிகப்பெரிய மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கார்கள் உள்ளன.

இங்குள்ள சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கார்கள் ஜி.டி.நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரால் வாங்கிச் சேகரிக்கப்பட்டவை. சுமார் 8 பழமையான கார்கள் மட்டும் வேறுநபர்களிடம் இருந்து அருங்காட்சியகத்துக்காக பெறப்பட்டுள்ளன.

மேற்கோள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-05-01.
  2. கோவையின் அடையாளமாகிறது ஜி.டி. கார் அருங்காட்சியகம், நாளிதழ்:தினமணி, நாள்:ஏப்ரல் 28, 2015

வெளியிணைப்புகள்[தொகு]