ஜி. என். பாலசுப்பிரமணியம்
ஜி. என். பாலசுப்பிரமணியம் (ஜனவரி 6, 1910 - மே 1, 1965), ஒரு தலை சிறந்த கருநாடக இசைப் பாடகர். "ஜி.என்.பி" என்று அழைக்கப்பட்ட அவர் தன் தனித்தன்மையான இசையாலும், இயற்கையாக அமைந்த குரல் வளத்தாலும் பல்லாயிரக் கணக்கான இரசிகர்களை ஈர்த்தவர்.
இன்றைக்கு சங்கீத மேடைகளில் பின்பற்றப்படும் பாணியை வகுத்துக் கொடுத்து செம்மைப்படுத்தியவர் ஜி.என்.பி. இதனை "ஜி.என்.பி பாணி" என்றே சிறப்பாக சங்கீத உலகினர் அடையாளப்படுத்துவர்.
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
அவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறை அருகே அமைந்துள்ள கூடலூர் என்னும் ஊரில் பிறந்தார். தந்தையார் ஜி. வி. நாராயணசாமி அய்யர் சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். சிறந்த இசை ரசிகரான அவர் ஒரு சபையை நடத்தி வந்தார். அதனால் சிறு வயதிலிருந்தே ஜி.என்.பி.க்கு பல முன்னணி இசைக் கலைஞர்களுடன் பழகி அவர்களின் இசையை அருகிலிருந்து கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ (ஆனர்ஸ்) பட்டம் பெற்ற பாலசுப்பிரமணியம் கருநாடக இசையை தன் தொழிலாகத் தேர்ந்தெடுத்தார். இசையுலகில் அவருடைய நுழைவு தற்செயலாகத்தான் நிகழ்ந்தது என்றாலும் அவருடைய துடிப்பான "பிருகா"க்களும், அதிரடி சுரக் கோர்வைகளும், ஆழ்ந்த இசை அறிவும் அவரை புகழின் உச்சிக்கு உயர்த்திவிட்டன. பல ஆண்டுகள் அவர் கருநாடக இசை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கினார். இவருடைய மாணவர்களில் எம். எல். வசந்தகுமாரி புகழ்பெற்றவர். மற்ற மாணவர்களில் ராதா ஜெயலட்சுமி, எஸ். கல்யாணராமன், திருச்சூர் வி. இராமச்சந்திரன் ஆகியோரும் சிறந்த பாடகர்களாகப் பெயர்பெற்றவர்கள்.
நெடிய தோற்றமும், அழகிய முகமும் கொண்ட அவர் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து சகுந்தலை (1940) என்னும் திரைப் படத்திலும், மேலும் பாமா விஜயம் (1934), சதி அனுசுயா (1937), உதயணன் வாசவதத்தா (1946), ருக்மாங்கதன் (1947) போன்ற படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.
அவர் பாடி இசைத் தட்டாக வெளிவந்த "வாசுதேவயனி" என்று தொடங்கும் கல்யாணி இராகப் பாடல் அக்காலத்தில் விற்பனையில் சாதனை படைத்தது. அது பதிப்பிக்கப்பட்ட 1940 ஆம் ஆண்டில் பத்தாயிரம் ரூபாய் "ராயல்டி"யாக அவருக்கு இந்த இசைத்தட்டு விறபனை மூலம் கிட்டியது!
விரிவாக இராக ஆலாபனைகள் புரிவதில் புதிய முறைகளை அவர் கையாண்டார். பல இராகங்களில் அதுவரை கையாளப்படாத புதிய பரிமாணங்களை அவர் தொட்டு தன் ஆழ்மனத்தில் தோன்றும் கற்பனைகளுக்கு குரல் வடிவம் கொடுத்தார்.
தலைமுறைகள் தாண்டியும், கைவசம் கிட்டுகின்ற இசைக் கோப்புக்கள்மூலம் செவிமடுத்து, அவர்தம் இசையால் மயங்கிக் கட்டுண்டு கிடக்கின்ற இசை இரசிகர்கள் ஆயிரக்கணக்காணவர்.
