செ. நெ. தெய்வநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செ. நெ. தெய்வநாயகம் (நவம்பர் 15,1942-நவம்பர் 19, 2012) ஒரு மருத்துவ அறிஞராகவும் சித்த மருத்துவத்தில் தேர்ந்தவராகவும் பொதுநல விரும்பியாகவும் தமிழ்த் தேசியவாதியாகவும்[சான்று தேவை] விளங்கியவர்.[1] இவருடைய பாட்டனார் சி.டி.நாயகம் என்பவர் பெரியார் ஈ. வெ. இராமசாமி நடத்திய இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறப்பும் படிப்பும்[தொகு]

இவருடைய தந்தை செ. நெ. நாயகம், தாயார் ஞானம் நாயகம் ஆவர். இவருடைய முன்னோர்கள் நடத்திய பள்ளியில் தாய்மொழித் தமிழில் கல்வி பயின்றார். பின்னர் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பைப் படித்தார். 1965 இல் மருத்துவப் பட்டம் பெற்றார். அப்போது உடற் கூற்றியல், உடல் இயங்கியல் நுண்ணுயிரியல் போன்ற துறைகளில் பல பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றார்.[2] தமிழ் நாட்டின் மூன்றாவது சிறந்த மருத்துவ மாணவர் என்னும் சிறப்பையும் பெற்றார். உயர் மருத்துவக் கல்வி பெறுவதற்கு சுகாட்டுலாந்து சென்று பயிற்சிப் பெற்றார். பின்னர் எடின்பரோ ராயல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து நுரையீரல், காச நோய்க்கான பிரிவில் எம்.ஆர்.சி .பி. பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் எப்.ஆர்.சி.பி. பட்டமும் பெற்றார். பின்னர் பிரிட்டிசு மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் சேர்ந்து நுரையீரல் நோய் ஆய்வில் ஈடுபட்டார்.

மருத்துவப் பணி[தொகு]

மருத்துவர் தெய்வநாயகம் சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியாகப் பணி புரிந்தார். 1981 ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் நெஞ்சகநோய்த் துறையை உருவாக்கினார். தென்னிந்தியாவிலேயே முதன் முதலில் ஏற்படுத்தப்பட்ட துறையாக விளங்கியது இது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆராய்ச்சி செய்ததன் விளைவாகக் கண்ட முடிவுகள் பல நோய்களுக்குத் தீர்வுகளாக அமைந்தன. பல முன்னணி மருத்துவ இதழ்களிலும் நூல்களிலும் இவருடைய ஆய்வுகள் வெளியாயின. 1986 முதல் 1990 வரை 'லங் இந்தியா' என்னும் மருத்துவ இதழின் ஆசிரியராக இருந்தார்.[3] மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவக் கழகங்களிலும் சிறப்புச் சொற்பொழிவுகள் செய்தார். 1989 இல் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பதவியை ஏற்று 3 ஆண்டுகள் அப்பதவியில் இருந்து பல மாற்றங்களைச் செய்து அக்கல்லூரியை உயர்நிலைக்குக் கொண்டுவந்தார்.[4] மாணவர்களிடையே இருந்த ராக்கிங் என்னும் கேலிவதைப் பழக்கம் அவர் மேற்கொண்ட கடும் நடவடிக்கையால் முற்றிலும் ஒழிக்கப்பட்டது.

சித்த மருத்துவப் பணி[தொகு]

தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையின் தலைவர் பதவியைத் தெய்வநாயகம் ஏற்றுக் கொண்டார். சித்த மருத்துவ முறைகள் மூலமாக தேய்வு நோய்க்கு 'ரான் தெரபி' என்னும் பண்டுவத்தைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகம் செய்தார். தர்பன் நகரில் நடந்த உலகளாவிய மாநாட்டில் சித்த மருத்துவத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார். 1999 நவம்பரில் உலக வைப்பகத்தின் அப்போதைய துணைத் தலைவர் மைகோ நிசிமுசு என்னும் பெண்மணி தேய்வு நோய்த் தீர்வுக்கு மருத்துவர் தெய்வ நாயகம் ஆற்றியப் பணியைப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சென்னையில் உள்ள தாம்பரத்தில் உருவாக உறுதுணையாக இருந்தார்.

இந்திய நலவாழ்வு நல்லறம்[தொகு]

தமிழ் நாட்டு அரசின் மருத்துவப் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பின் இந்திய நலவாழ்வு நல்லறம் என்னும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். சித்த, ஆங்கில மருத்துவக் கூட்டு மருத்துவ முறையைத் தெய்வநாயகம் தொடங்கினார்.20000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இம்மருத்துவ முறையால் பயன் அடைந்தார்கள். இங்கு தேய்வு நோய், நெஞ்சக நோய், சிறுநீரக நோய் ஆகியவற்றுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. வானொலி, தொலைக்காட்சிகள், இதழ்கள் ஆகியவற்றின் மூலமாக சித்த மருத்துவத்தின் பெருமைகளை எடுத்து இயம்பினார்.[5]

கல்விப் பணி[தொகு]

கல்விப் பணி அறக்கட்டளை சார்பாக சென்னையில் 3 பள்ளிகள் குலசேகரப் பட்டினத்தில் 2 பெண்கள் பள்ளி, பெண்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, சிறார் இல்லம் இயங்கி வருகின்றன. இவ்வறக்கட்டளையின் தலைவராக 10 ஆண்டுகள் இருந்தார்.

அணு உலை எதிர்ப்பு[தொகு]

1986 இல் பிப்பிரவரித் திங்களில் அணு உலையினாலும் அணுக்கதிர் வீச்சாலும் விளையக்கூடிய இடர்களை அறிவியல் அடிப்படையில் மக்களிடையே பரப்புவது என்று மருத்துவர் தெய்வநாயகமும் பிற நல்லறிஞர்களும் முடிவு செய்து அவ்வாறே தமிழ் நாடு முழுவதும் பயணம் செய்து பரப்புரை ஆற்றினர்.[6] அதே ஆண்டில் ஏப்பிரல் திங்களில் சோவியத்து யூனியன் செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்டு பலர் மாண்டதும் உலகளவில் அதிர்வலைகள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மரபணு மாற்றுப் பயிர் எதிர்ப்பு, புகையிலை எதிர்ப்பு, மது ஒழிப்பு எனப் பல குமுகச் சிக்கல்களையும் எதிர்த்துக் குரல் கொடுத்தார். உலகத் தமிழர் பேரமைப்பு என்னும் இயக்கத்திலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chest physician-peace activist dead". 20 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2014.
  2. "Veteran chest physician C N Deivanayagam dead". 20 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2014.
  3. SK Jindal, PS Shankar, VK Vijayan, SR Kamat, CN Deivanayagan (2012). "Down the memory lane: Lung India three decades". Lung India 29 (3): 205-211. 
  4. "Deans". பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2014.
  5. W. B. Vasantha Kandasamy, Florentin Smarandache, Meena Kandasamy ,, Kama Kandasamy. Interval Linear Algebra. Dedication. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1599731261. http://books.google.co.in/books?id=rZvzAAAAQBAJ. 
  6. "Fruition of 25 years of sweat and toil". 21 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._நெ._தெய்வநாயகம்&oldid=3245853" இலிருந்து மீள்விக்கப்பட்டது