செல்வராஜா ரஜீவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்வராஜா ரஜீவர்மன் (இறப்பு: ஏப்ரல் 29, 2007) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர். யாழ்ப்பாண நகரில் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் வைத்து இவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்படும் போது இவருக்கு வயது 25.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

யாழ்ப்பாணத்தில் புத்தூர் ஆவரங்கால் என்ற ஊரில் பிறந்த இவர் புத்தூரிலேயே கல்வி கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவனாக இருந்தவர்.

ரஜீவர்மன் படுகொலை செய்யப்படும் காலப்பகுதியில் உதயன் பத்திரிகையில் அலுவலகச் செய்தியாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் பத்திரிகைப் பணியென்பது அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த காலப்பகுதியில் பணியாற்றியவர். தினமும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் யாழ்.சிவில் சமூக அமைப்புக்களின் காரியாலயங்களுக்கும் செய்தியாளனாக சென்று வெளிக்கொண்டு வருவதில் இவர் பெரும் பணியாற்றியவர்.

ஊடகத்துறையில்[தொகு]

”நமது ஈழநாடு” பத்திரிகை குடாநாட்டில் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் அலுவலகச் செய்தியாளராக இணைந்து கொண்ட ரஜீவர்மன் மூன்று ஆண்டுகளில் அப்பத்திரிகையில் உதவி ஆசிரியராக பதவி உயர்த்தப்பட்டார். எனினும் நமது ஈழநாடு பத்திரிகை மூடப்பட்ட நிலையில் அங்கிருந்து யாழ் தினக்குரல் பத்திரிகையில் தனது பணியைத் தொடர்வதற்காக இணைந்து கொண்ட போதும் அங்கிருந்து பணியாற்றுவதில் இவருக்கு ஏற்ற சந்தர்ப்பம் கிட்டாத நிலையில் உதயன் பத்திரிகையில் தன்னை இணைத்துக்கொண்டார். உதயன் பத்திரிகையில் அந்நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு வரையரைக்கிணங்க அலுவலகச் செய்தியாளராகப் பணியாற்றினார். இவர் யாழ்ப்பாணத்தில் மூத்த பத்திரிகையாளர் ச. ராதேயன் மற்றும் கானமயில்நாதன், இளம்பத்திரிகை ஆசிரியர் கண்ணன் ஆகியோரிடம் இளநிலைப் பத்திரிகையாளராகப் பணியாற்றி தொழிலை கற்றுள்ளார்.

படுகொலை[தொகு]

2007 ஏப்ரல் 28 ஆம் நாள் சனிக்கிழமை இரவு "உதயன்' ஆசிரிய பீடத்தில் தமது பணியை முடித்துக்கொண்டு அடுத்த நாள் காலையில் அலுவலகத்திலிருந்து புறப்பட்டார். காலை 10 மணியளவில் யாழ்ப்பாண நகரின் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் இராசாவின் தோட்ட வீதியிலிருந்து சுமார் ஐம்பது யார் தூரத்தில் அவர் வந்துகொண்டிருந்தபோது இனந்தெரியாதோரால் சுடப்பட்டார். அவ்விடத்திலேயே அவர் மரணமானார்.

நிதி உதவி[தொகு]

யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் செவ்வராஜா ரஜீவர்மனின் குடும்பத்துக்கு நிதி உதவியொன்றை இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் 19-04-2011 அன்று வழங்கியது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. ரஜிவர்மனின் குடும்பத்துக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நிதி உதவி, தமிழ்மிரர்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வராஜா_ரஜீவர்மன்&oldid=748514" இலிருந்து மீள்விக்கப்பட்டது