செம்மொழிப் பூங்கா

ஆள்கூறுகள்: 13°03′09″N 80°15′04″E / 13.05238°N 80.25104°E / 13.05238; 80.25104
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்மொழிப் பூங்கா
Semmozhi Poonga
வகைநகர்ப்புறப் பூங்கா
அமைவிடம்தேனாம்பேட்டை
சென்னை
இந்தியா
உருவாக்கப்பட்டது2010 ஆம் ஆண்டு
Operated byதமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை
நிலைசெயல்படுகிறது

செம்மொழிப் பூங்கா (ஆங்கிலம்:Semmozhi Poonga) சென்னை நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பூங்கா. இது சென்னை அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவாகும். தமிழக அரசின் தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமான அந்த இடத்தில் முன்பு டிரைவின் உட்லண்ட்ஸ் ஓட்டல் இருந்தது.

சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களின் சத்தங்களுக்கு மத்தியில், பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்துள்ள இடத்தில் தமிழக அரசு ரூ.8 கோடி செலவில் செம்மொழிப் பூங்காவை அமைத்துள்ளது. 700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவைப் போல செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

புதுமையான செங்குத்துத் தோட்டம்[தொகு]

தென்னிந்தியாவுக்கே புதிதான செங்குத்துத் தோட்டந்தான் (Vertical garden) பூங்காவின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது. சிங்கோனியம், பிலோடென்ரான், மனிபிளாண்ட் என்று அழைக்கப்படும் போர்தாசு, பெரணி உட்பட 30 விதமான தாவரங்களைக் கொண்டு செங்குத்துத் தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இருபுறமும் கொரியப் புல்தோட்டம் காணப்படுகிறது.

முளரிப்பூ(உரோசா), மல்லிகை, செண்பகம், பாரிஜாதம், பவளமல்லிகை போன்ற வாசனை மிக்க மலர்களைத் தரும் தாவரங்கள் அடங்கிய நறுமணத் தோட்டம், துளசி, வசம்பு, குப்பைமேனி, இன்சுலின் செடி முதலான தாவரங்கள் நிரம்பிய மூலிகைத் தோட்டம், போன்சாய் முறையில் வளர்க்கப்பட்ட ஆல், அரசு, மா, மாதுளை, கொய்யா, சப்போட்டா, நெல்லி, புளி, எலுமிச்சை மரங்கள் கொண்ட போன்சாய் தோட்டம், மஞ்சள் மலர்களையும், மஞ்சள் செடிகளையும் உள்ளடக்கிய மஞ்சள் பூங்கா, விதவிதமான மூங்கில் மரங்கள் நிரம்பிய மூங்கில் பூங்கா, பலவிதமான பட்டாம் பூச்சிகள் ஓடியாடும் பட்டாம்பூச்சிப் பூங்கா என 10 விதமான சிறுபூங்காக்கள் செம்மொழிப் பூங்காவில் இடம்பெற்றுள்ளன.

இவை மட்டுமின்றி கள்ளி, கற்றாழை போன்ற பாலைவன தாவரங்கள் கொண்ட கடின பூங்காவும் தனியாக உள்ளது. சிறுவர்கள் விளையாடுவதற்காகத் தனியே சிறுவர் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. பூங்காவைக் காண வருவோருக்காக உணவக வசதியும் இருக்கிறது. சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள போன்சாய் மரங்கள், வண்ண விளக்குகள் நிறைந்த நீருற்று, நீரோடை, குற்றாலத்தை நினைவூட்டும் அருவி, வாத்துகள் வாழும் குளம் ஆகியவை இப்பூங்காவின் சிறப்பம்சங்கள். இப்பூங்காவைச் சுற்றிப்பார்க்க வேண்டுமானால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகும். பூங்காவின் உள்ளே ஒன்றே கால் மீட்டர் தூரம் நடந்தால்தான் அனைத்தையும் கண்டு இரசிக்க முடியும்.

பூங்காவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு தாவரத்திற்கும் தமிழ்ப் பெயர், ஆங்கிலப் பெயர், தாவரவியல் பெயர் ஆகியவை அதன் அருகே எழுதி வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பெரும்பாலான தாவரங்கள் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த தாவரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. [1]

படத்தொகுப்புகள்[தொகு]



மேற்கோள்கள்[தொகு]

[1]

  1. 1.0 1.1 https://en.wikipedia.org/wiki/Vertical_farming
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மொழிப்_பூங்கா&oldid=3509067" இலிருந்து மீள்விக்கப்பட்டது